சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பிரச்சினைகள்.. எத்தனை விதமான அனுபவங்கள்..
முதலில், இனி சென்னையில் சாமானியன் வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ வாங்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு 800 சதுர அடி வீடு வாங்க கூட ஒரு நடுத்தர வர்க்கத்தவரால் முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ரூ 20 லட்சம். இது ஊருக்கு மிக தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் தினமும் ஒரு 3 அல்லது 4 மணி நேரம் அலுவலகத்துக்கு பயணம் செய்ய தயாராக இருந்தால். மேலும் சொந்த வாகனம் இல்லாவிட்டால் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாது.
நான் பல இடங்களில் வீடு தேடியபோது கவனித்த மிக முக்கிய விசயம். யாருமே குடியிருப்பதற்கு வீடு கட்டுவதுபோல தெரியவில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரு முதலீடாக வீடு வாங்குபவர்களுக்காகவே கட்டுகிறார்கள். என்னைப்போல குடியிருக்க வீடு வாங்குபவர்கள் தனியாகதான் அதில் குடியிருக்க வேண்டி இருக்கும். (மற்றவர்கள் வாடகைக்கு வரும்வரை)
இந்த வாரம் ஒரு பத்திரிக்கையில் ஒருவர் எழுதி இருந்தார்.சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் விலை குறையும் என்று. இது முற்றிலும் தவறான கணிப்பு. நான் தேடியவரை மாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வீடுகளின் விலையும் அதிகரித்தே இருக்கிறது. 4 அல்லது 5 மாடிகளுக்கு மேல் ஒவ்வொரு மாடிக்கும் குறைந்தது ரூ 50 முதல் ரூ 500 வரை விலை உயர்த்தியே விற்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான பிரச்சினை அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் வீடுகள் கட்டுவது, அரசிடம் அனுமதி வாங்கியதை விட அதிக சதுர அடிகளில் வீடுகளைக் கட்டுவது, அனுமதியே வாங்காமல் அனுமதி வாங்கியதுபோல கட்டுவது, இன்னும் இந்த அரசு அனுமதி விசயத்தில் எவ்வளவு தகிடு தத்தம் இருக்கோ தெரியவில்லை.
நான் பார்த்தவரை இதுவரை யாருமே அரசு அனுமதி அளித்த வரைபடம் படி வீடு கட்டவில்லை. ஓரளவுக்கு அந்த வரைபடத்தை ஒட்டி வீடு கட்டப்படுமானால் அந்த பில்டர் கேட்கும் பணத்துக்கு நாம் இரண்டு வீடு வாங்கி விடமுடியும். அவ்வளவுக்கு கொள்ளை விலை வைத்து விற்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த வக்கீல் நணபரிடம் இது பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இன்னும் பகீரென்று இருந்தது. 1999க்குப் பிறகு கட்டப்பட்ட விதி முறை மீறிய கட்டிடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருப்பதாக கேட்டது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. நமது அரசுகள்தான் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தள்ளிவைத்துவிட்டு மேலும் மேலும் இப்படி விதிமுறை மீறிய குடியிருப்புகளை அனுமதிப்பது வருத்தமாகவே இருக்கிறது.
தி நகரில் இருக்கும் வணிக வளாகங்கள் விதிப்படி கட்டப்படவில்லை என குதிக்கும் நமக்கு, நாம் குடியிருக்கும் வீடுகளே விதிப்படி கட்டப்படவில்லை என்பது எப்போது உறைக்கும் என தெரியவில்லை. இதில் எல்லோரும் கூட்டுக்களவாணிகள் போலத்தான் தெரிகிறது.
சுருக்கமாக சொன்னால் பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் போல தோன்றுகிறது. யாராவது பூனைக்கு மணி கட்டுவதுபோல், ஏதாவது ஒரு அரசாங்கம் விதிகளைத் தளர்த்தியோ அல்லது புதிய விதிகளை கடுமையாக பின்பற்ற ஆவன செய்தாலோ அல்லது அத்தி பூத்தாற்போல் யாராவது நியாயமான உணர்வுடைய ஒரு பில்டர் அமைந்தாலோ தான் வீடு வாங்க முடியும்போல தெரிகிறது.
இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்சது நமக்கும் அப்பிடின்னு முடிவு பண்ணி ஏதாவது ஒரு பில்டர்கிட்ட வீடு வாங்கிவிடலாமான்னும் ஒரு யோசனை இருக்கு..
இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்சது நமக்கும் அப்பிடின்னு முடிவு பண்ணி ஏதாவது ஒரு பில்டர்கிட்ட வீடு வாங்கிவிடலாமான்னும் ஒரு யோசனை இருக்கு..
காலமும் நம்ம மஹாலிங்கமும் தான் இதுக்கு பதில் சொல்லணும். ஓம் சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.
12 comments:
உண்மைதான்... வீடு வாங்குவதில் மட்டுமல்ல...கட்டுவதிலும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது...
திரு சே குமார், பார்க்கலாம் இது எவ்வளவு தூரம் போகுதுன்னு. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி..
"அடுக்கு மாடி குடியிருப்புகளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் விலை குறையும்
" i think this statement meant to say that if the govt permits more no of storeys for the building, then the price may reduce. High floors always more priced in overseas, because less polution and good ventilation etc comment by Moorthy tce 93 stars
நீங்களாவது 5 மாதமாகத்தான் தேடிகிறீர்கள் நான் 2 வருடமாக பார்த்து அசந்துவிட்டேன்.
பல மாடிகள் கட்டினால் விலை குறையுமோ குறையாதோ ஆனால் அதற்கான கட்டமைப்புகள் சென்னையில் இப்போது இல்லை.
இன்னும் 10 வருடங்களுக்குள் நேர்மையான குத்தகையாளர் கிடைத்து சட்டத்திடங்களுக்கு உட்பட்ட வீடு வாங்கிட வாழ்த்துகள்.
விலையை விட தரம் மிக மோசமாக இருக்கு, நல்ல வேளை இயற்கை பேரிடர் இல்லாத இடமாக இருக்கு தமிழகம்.
ஸ்ரீராம் சங்கரி குடியிருப்பை பாருங்கள் ஒருவேளை உங்கள் தேவைக்கு ஏற்ப இருக்கக்கூடும்.
பிளாட் வாங்குவது நல்லது... (அதுவும் கீழ் தளம்)
சென்னையில் வீடு கட்டுவதென்றால்... கடவுள் அருள் தேவை தான்...
நன்றி...
ஆமாங்க.. நானும் ரொம்ப வருஷமா சென்னையில் வீடு வாங்கனும்னு நினைச்சு முடியாம போச்சு.. இந்த பில்டர், அரசியல் அட்டகாசங்களால் மனசு வெறுத்துப் போய் அப்புறம் திருச்சியில் (எங்க சொந்த ஊர் பக்கம்) சிட்டிக்கு 5 கி.மீ தொலைவில் 20 லட்சத்திற்கு ஒரு நல்ல பில்டர் மூலம் (அவர் செய்த முதல் புராஜெக்ட்) நல்ல அபார்ட்மெண்ட் ப்ளாட் வாங்கி விட்டேன்.. எல்லாம் கால, நேரம் நல்லா அமையனும்! என்னை கேட்டா சொந்த ஊரில் பாருங்களேன்! கூடிய சீக்கிரம் வீடு வாங்கி செட்டில் ஆகுங்க, வாழ்த்துக்கள்!
Murthy, Thanks for your visit and comments..
திரு வடுவூர் குமார், தரம் சென்னையில் ஓரளவுக்கு பரவாயில்லை. கல்கத்தாவில் இதைவிட மிக மோசம்.
ஸ்ரீராம் சங்கரி நானும் பார்த்தேன். எனது அலுவலகத்தில் இருந்து சுமார் 2 மணி நேர தொலைவில் இருப்பதால் வாங்கவில்லை.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி..
திரு பழூர் கார்த்தி, எங்க ஊர்ப்பக்கம் (ராஜபாளையம்) நிலம் விலை கிட்டத்தட்ட சென்னை அளவுக்கே வந்துருச்சு. அதனாலதான் சென்னையில ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கிடலாம்னு முடிவு பண்ணினேன். தங்கள் வரவுக்கும் மேலான கருத்து / வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
அருகில் உள்ள விமானதளம் போன்ற காரணங்களால் சென்னையில் நினைத்தபடி உயர்மாடிக்கட்டிடம் கட்ட இயலாது என நினைக்கின்றேன்.
நகரம் நோக்கிய மனித நகர்வு,முந்தைய ஐ.டி பூம்,இந்திய பொருளாதார வாழ்க்கை முறை என சென்னை நகரின் மாற்றங்கள் உருவாகின்றன.இன்றைக்கு வாங்கிய விலையை விட இனியும் ஏறுமுகம்தான் என்பதால் முடிந்த வரை நிலம்,வீட்டில் அனைவரும் முதலீடு செய்கிறார்கள்.
திரு ராஜ நடராஜன், உண்மைதான். மக்களில் பெரும்பாலானோர் வீடுகளை குடியிருக்க வாங்குவதை விட ஒரு முதலீடாக வாங்குவது அதிகரித்ததும் விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம்.
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் மிக்க நன்றி..
Post a Comment