சில நாட்களுக்கு முன் மிகப்பிரபலமாக இருந்த நீரா ராடியா போன் உரையாடல்களை உன்னிப்பாக கேட்ட போது சில விஷயங்கள் பிடிபட்டது. அது ஒரு தலைவனை ஆக்குவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றியது.
இது விளம்பரங்கள் செய்வது போன்றதே. என்ன.. இதை செய்திகள் போல வெளியிட்டு ஒரு பிம்பம் உருவாக்குகிறார்கள். ஒரு பிரபலத்தின் மீது நமக்கு இருக்கும் பிம்பம் ஊடகங்களால் உருவானதே.
ஒருவன் உண்மையிலேயே நல்லவனோ, கெட்டவனோ. ஆனால் அவனது நல்ல செயல்களை மட்டும் திரும்பத் திரும்ப ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி, அவனது கெட்ட செயல்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டால் அவன் நல்லவன் என்றே நாம் நம்புவோம். இது தான் சூட்சுமம்.
ஒவ்வொரு பணக்காரரும் இப்படிப்பட்ட ஒரு உக்தியை பயன்படுத்தி தனக்கென ஒரு இமேஜ் உருவாக்கிக் கொள்ள நீரா ராடியா போன்ற ஊடகத்துறையினரிடையே செல்வாக்குள்ளவர்களை வேலைக்கு அமர்த்தி தத்தமது இமேஜை தன் விருப்பப்படி உருவாக்கிக் கொண்டனர்.
இதில் மிகவும் கவனிக்கத்தக்கது பணம் பெற்றுக் கொண்டு சில ஊடகங்கள் வெளியிட்ட சில அரசியல் (விளம்பர) செய்திகள். இதனால் சில மோசமான தலைவர்களையும் மிக உத்தமர்கள் போல செய்தி வெளியிட்டு அவர்களுக்கு நற்பெயர் தேடித்தந்தன சில ஊடகங்கள். இப்போதும் செய்து கொண்டிருப்பதாக கேள்வி.
இப்போதய ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையும் அல்ல. அவர்கள் சொல்லாமல் விட்டதெல்லாம் பொய்யும் அல்ல.
இதில் முழுநேரமும் ஜால்ரா அடிக்கும் ஊடகங்களும், பகுதி நேரமாக எப்போதாவது சொம்படிக்கும் ஊடகங்களும் அடக்கம். அல்லது சில ஊடகங்களின் ஒரு சில நிருபர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமக்கு சாதகமாக செய்தி வரவழைக்கும் தலைவர்களும் உண்டும்.
இப்போதும் ஒரு நல்ல தலைவனை உருவாக்கவும் அழிக்கவும் முடிந்த மிகப் பெரிய சக்தி தான் ஊடகத்துறை.
இதனால்தான் ஊடகங்களை ஒரு தேசத்தின் முக்கியமான தூண் என்று ஒரு காலத்தில் வருணித்தார்கள்.
இப்போதய மிக சக்திவாய்ந்த ஊடகங்கள் : சினிமா, தொலைக்காட்சி, பத்திரிக்கை (அச்சு, இணையம்).
இவை நினைத்தால் நிச்சயம் நல்ல தலைவனை உருவாக்க முடியும்..
ஆனால் இவை முழுக்க முழுக்க லாப நோக்கங்களுக்காக மட்டும் நடத்தப் படுவதால் இது இப்போதைக்கு சாத்திய மில்லாதது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.
இருந்தாலும் இதை இவர்கள்தான் செய்யவேண்டும்.
இன்றைக்கு தேசபக்தி எதிலெல்லாமோ தேவையில்லாமல் வெளிப்படுகிறது. இந்த ஊடகத்துறையினரிடையே இது பெரிதாக வெளிப்படாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
இன்றும் ஊழல்வாதிகளையே உத்தமர்கள்போல காட்டிக் கொண்டு புதிய தலைமை வருவதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்குத் தேவையான மாற்று சக்தியை உருவாக்கவேண்டிய ஊடகங்கள் இருக்கின்ற சாக்கடையிலேயே தேங்கிவிட்டதுதான் பரிதாபம்.
என்ன செய்யவேண்டும்??
நாட்டுக்குத் தேவையில்லாத ஊழல் தலைவர்களின் நல்ல செய்திகளை அனைத்து ஊடகங்களும் முற்றிலும் புறக்கணித்து நல்லவர்களை மட்டுமே முன்னிருத்தினாலே போதுமானது. இதை யாருமே செய்வதில்லை. நல்லவர்களின் செய்திகளைத்தான் ஏதோ ஊறுகாய் போல வெளிப்படுத்துகிறார்கள்.
மேலும் ஊழல் தலைவர்களின் கெட்ட விஷயங்களை மட்டும் நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டி அதை பரவலாக்கி ஒரு மோசமான தலைவனை அழிக்கவேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதை ஓரளவுக்கு இப்போது சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஊடகத்தார் உண்மையில் விழித்தெழுவார்களா?? புதிய நேர்மையும் நாட்டுப்பற்றும் உள்ள தலைவனை உருவாக்குவார்களா?? எப்போது??
காலமும் கடவுளும் தான் இதுக்கு பதில் சொல்லணும்.
கடவுளே மஹாலிங்கம்.. உங்கள் அருளாலே நல்ல நாட்டுப் பற்று உள்ள ஒரு தலைவன் சீக்கிரமா உருவாகி எங்களுக்கு ஒரு விமோசனம் பிறக்கணும்.
சதுரகிரி சுந்தரனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!