Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Wednesday, April 27, 2011

எது காலம்???

காலம் என்பது எங்கே இருக்கிறது? எதை காலம் என்று சொல்கிறோம்? ஓடும் கடிகாரம்தான் காலமா? இது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த சிந்தனைகள் :

காலம் என்பது நம் ஐம்புலன்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புலன்களால் நாம் உணரும் வெளிஉலக உணர்வுகள் நம் மனதில் உள்வாங்கும் போதுதான் காலம் என்பது உணரப்படுகிறது.

மிகச்சரியாக சொன்னால் காலம் என்பது நம் மனதின் உள்வாங்கும் அலைவரிசை (frequency).  இந்த அலைவரிசைக்குத் தகுந்தாற்போல் நம் உடலமைப்பும், புலன்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஐம்புலன்களும் வேலைசெய்யாமல் இருக்கும்போது, நமக்கு காலத்தின் பாதிப்பு தெரிவதில்லை. உதாரணம் தூங்கும் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள். சில சமயம் 10 நிமிடம் தூங்கியதுபோல இருக்கும்.. ஆனால் 4-5 மணிநேரம் தூங்கி இருப்போம்.  இன்னும் சில சமயம் வெகு நேரம் தூங்கியதுபோல இருக்கும். ஆனால் 10-15 நிமிடம் தான் ஆகி இருக்கும்.

சில நேரங்களில் நாம் மனம் ஒருமுகப்பட்டு ஒரு காரியத்தில் மூழ்கி இருக்கும் போதும் இதேபோல நமக்கு காலத்தின் கணக்கு புரிபடுவதில்லை. இது ஒரு வித தியானம் போல. தியானம் செய்யும் போதும் சில நேரங்களில் இந்த அனுபவம் ஏற்படும்.

எனவே காலம் என்பது நம் மனதால் உணரப்படும் ஒன்று. எனவே மனதைக் கட்டுப்படுத்தினால் காலம் கட்டுக்குள் இருக்கும்.


இந்த சிந்தனையின் விளைவாக வந்த சில விதண்டாவாத கேள்விகள் :

1) நம் மனதின் காலமும், பிற உயிரினங்களின் காலமும் வேறு வேறாக இருக்குமா?

2) விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், நீர்வாழ்  உயிரினங்கள் இவற்றின் காலக் கணக்கு எப்படி இருக்கும்?

3)  நம் மனிதனின் காலத்தின் படி நாம் பயணம் செய்யும் வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியானால் நாம் வேறு ஒரு உயிரினத்தின் கால நிர்ணயத்தின் படி மனிதனின் மனோவேகத்திலும் பயணிக்க முடியுமா??

4) எல்லா மனிதனுக்கும் ஒரே மாதிரி இந்த அலைவரிசை இப்போது இருக்கிறது. ஏதாவது சில மூலிகைகள், வேதிப் பொருட்கள் இந்த அலைவரிசையை மாற்றும் வல்லமை இருக்குமோ???

5) நாம் இருக்கும் பூமியின் ஈர்ப்பு விசையின் விளைவு இந்த காலத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறது??? இதே நாம் வேறு வித ஈர்ப்பு உள்ள கிரகங்களில் காலம் என்பது மாறுபடுமா? அது நம் மனதின் கால அலைவரிசையை பாதிக்குமா???

6) உயிரினங்களின் சராசரி வாழ்நாளுக்கும் இந்த கால அலைவரிசைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

7) நம் உடல் வயதாவதற்கும், நம் மனம் காலத்தை உணர்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா???


இந்த கேள்விகளுக்கு பதில் இன்னும் புரியவில்லை.  இந்த காலம்தான் இதுக்கும் பதில் சொல்லணும்.

கடவுளே மஹாலிங்கம் இந்த காலத்தைப்பற்றி இன்னும் தெளிவாப் புரிய நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!