Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, January 3, 2011

நமது கல்விமுறை - ஒரு கனவு...

நமது தற்போதய கல்வி முறை, மனப்பாடம் செய்து அப்படியே எழுத வைப்பதை ஊக்குவிக்கும்விதமாக இருக்கிறது. இது சரியா?

ஒருவகையில் இது பணம் சம்பாதிக்கும் எளியவழியாம் ஒரு கம்பனியில் வேலை செய்து நமது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் தகுதியை ஏற்படுத்தமட்டுமே உதவி செய்கிறது. மற்றபடி சுயசிந்தனை, சுயசார்பு, சமூகப்பொறுப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் சிந்தனை இவைகளை வளர்த்துக்கொள்ள இந்தக்கல்விமுறை உபயோகப்படவில்லை. நான், எனது, பணம் சம்பாதிதல் ஆகியவையே பிரதானமான நோக்கமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யவேண்டும்.

பெற்றோர் பொறுப்பு :

இன்றைய பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, தன்னால் செய்ய முடியாது விடுபட்ட பொருளாதார, புகழ் தாகத்தை தீர்க்கும் ஒரு கருவியாகவே நினைக்கிறார்கள். இன்றைய மீடியாக்களும் இதற்கு தூபம் போடும் விதமாகவே செயல்படுகின்றன.

அவ்வாறு பணம், புகழ் பெறும் குழந்தைகளுடன், தங்களின் குழந்தைகளை ஒப்பீடு செய்து அவர்களையும் அதுபோல நடக்கத்தூண்டுகிறார்கள். இவ்வாறு குழந்தைகளை நெறுக்கி, பின் அவர்களை நொறுக்கிவிடுகிறார்கள்.

நமது மதிப்பெண் சார்ந்த படிப்புகள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாகவே இருக்கிறது.

1) குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், தன்னைப்போல பிறரையும் கருதும் தன்மை, பிறருக்கு விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை, தைரியம், துணிச்சல்...
2) மதிப்பெண்மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தவேண்டும்.
3) குழந்தைகளின் தனித்திறன் மற்றும் தனி ஆர்வம் உடைய துறைகளில் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
4) நமது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.
5) நமது கலாச்சார மதிப்புகளைக் கற்றுத்தர வேண்டும்.
6) பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யாமல் இருக்கவேண்டும்.

கல்விக்கூடங்களின் பணி :

இன்றைய பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் பணம் பண்ணும் கருவிகளாக இருக்கின்றன. கல்வி என்பது வியாபரமாகிப்போனது.

1) கல்விக்கூடங்கள் குருகுலமாகவும், ஆசிரியர்கள் குருவாகவும் இருந்தநிலை மீண்டும் ஏற்படவேண்டும்.

2) அனைத்துக் கல்விக்கூடங்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.

3) குழந்தைகளுக்கு விளையாட்டுமுறையில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். வாழ்வியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். நமது தேசிய வரலாறும், தலைவர்களின் தியாகமும் போதிக்கப்படவேண்டும். நமது கலாச்சார பாரம்பரிய வரலாறு கட்டாயமாக்கப் போதிக்கப்படவேண்டும்.

4) அனைத்து பள்ளிகளில் சட்டமன்றம்போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

5) குழந்தைகளும், ஆசிரியர்களும் அவர்களின் பகுதிகளின் குறைகளைத் தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

6) தமது பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

7) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த பள்ளி சட்டமன்றங்கள் கூடி விவாதிக்கவேண்டும். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரிகளுடன் இதில் கலந்துகொள்ளவேண்டும். அவர் கலந்துகொள்ளமுடியாத பட்சத்தில், அவரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகளைக் களைய ஏற்பாடு செய்யவேண்டும்.

8) இந்த சமூகப்பொறுப்பில் ஆவலுடன் பங்குபெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, ஒரு நல்ல தலைவன் உருவாக ஒரு வாய்ப்பு இளம் பருவத்திலேயே ஏற்படும்.


எழுதிப்படிக்கிரப்ப நல்லாத்தான் இருக்கு... நடைமுறையில்.... நம்ம அரசியல்வாதிகள் தன் வாரிசுகளைத்தவிர மற்றவர்கள் வளர்வதை மட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன செய்வது, சிந்திக்கவாது செய்கிறேன்... என்னிக்காவது இந்தக்கனவு நனவாகலாம்... அந்த மஹாலிங்கத்துகிட்ட வேண்டிக்கிறேன்.

ஹர ஹர மஹாதேவா போற்றி....