சில நாட்களுக்கு முன் ஒரு நீண்ட பயணம் மேற்கொண்ட பொழுது பஞ்ச பூதங்களைப் பற்றியும் அதற்கு அப்பால் என்ன என்பது பற்றியும் எனக்குள் எழுந்த சில தீவிரமான சிந்தனைகளின் பதிவு :
பஞ்ச பூதங்கள் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.. அவ்வளவு ஏன்? நம் உடல் கூட பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டதுதான்... நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடே :
மெய் - உணர்ச்சி - பூமி
வாய் - சுவை அறிதல் - நீர்
கண் - பார்வை தீட்சண்யம் - நெருப்பு
மூக்கு - நுகர்தல் - காற்று
செவி - கேட்டல் - ஆகாயம்
பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தில் பஞ்ச பூதங்களை வென்றால் / கட்டுப்படுத்த முடிந்தால் அஷ்டமா சித்திகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சி என்பது புலனடக்கத்தில்தான் ஆரம்பமாகிறது. புலன்கள் அடங்க ஆரம்பித்தால்தான் ஆன்மீக சாதகம் சித்திக்கும் என்றும் கூறுகிறார் பதஞ்சலி முனி. இதற்கு பல படிகள் அமைத்து சாதகத்திற்கு வழிகள் காட்டுகிறார்.
பஞ்சபூதங்களின் தன்மை ஐம்புலன்களில் இருப்பதால் புலனடக்கம் கைகூடினாலே அஷ்டமாசித்திகள் கைகூடுமோ????
அண்டமும் பிண்டமும் - பஞ்சபூதங்களுக்கு அப்பால் :
இந்த பரந்த அண்ட வெளியில் இருப்பவைகளே நமது உடம்பிலும் இருப்பதாக முன்னோர்கள் கூறுகிறார்கள். இந்த அண்டமும் நம் பிண்டமும் (உடலும்) இந்த ஐம்பூதங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது.
இதில் நம் பிண்டத்தைப் பற்றி சிந்திக்கும் போது இந்த பஞ்ச பூதங்களுக்கு மேலும் சில / பல பூதங்கள் இருப்பது போலவே தோன்றுகிறது.
உதாரணமாக நான் சிந்தித்த வரை "நமது மனம்" என்பது இந்த பஞ்ச பூதங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது. ஏனெனில் இதில் ஏற்படும் எண்ணங்களே நம் வாழ்வையும் சூழலையும் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இதில் பஞ்சபூதங்களின் பங்களிப்பு என்ன என்பது புரியவில்லை. ஏனெனில் மனம் என்பதற்கு தனியாக ஒரு உறுப்பு இல்லை (மூளையின் பங்கு இதில் இருந்தாலும் மூளை மட்டுமே மனம் அல்ல).
அடுத்து நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய "காலம்". இதுவும் இந்த பஞ்ச பூதங்களில் வர வில்லை. இது எதற்கும் கட்டுப்படாததாகவே இருக்கிறது. மனதால் கட்டுப்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள். சித்தர்களும் ஞானிகளும் காலத்தை வென்று நிற்பதைப் பார்க்கும்போது உண்மையாகவே படுகிறது.
அடுத்து "ஆத்மா" அல்லது "கடவுள்" அல்லது "ஞானம்". இது எல்லாவற்றையும் கடந்து நிற்கிறது. எல்லாவற்றிலும் இருக்கிறது. எல்லாவற்றின் இயக்க சக்தியாக விளங்குகிறது. "விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர்." என்ற கூற்றுக்கு ஏற்ப அடைந்தவுடன் திரும்பி வர முடியாத ஒரு இலக்காகவே தோன்றுகிறது.
இவ்வளவுதானா அல்லது இன்னும் வேற ஏதாவது இருக்கான்னு தெரியல....
இது, (இந்த சிந்தனை) ஆன்மீகப்பயணத்தில் ஏற்படும் ஒருவித குழப்பத்தின் வெளிப்பாடோ என்ற சந்தேகம் இருந்ததாலேயே இது பற்றி எழுத ரொம்பவும் யோசித்தேன்... ஆனாலும் எங்காவது எழுதி வைத்தால் பிற்காலத்தில் உபயோகப்படலாம் என்பதால் பதிவாக எழுதி வைத்திருக்கிறேன்.
மஹாலிங்கம்... இது சரியா தப்பான்னு தெரியல... நீங்கதான் இதைத் தெளிவுபடுத்தி, அனுபவத்தில் இவைகளை பூரணமாக உணர்வதற்கு ஆசீர்வாதம் செய்யணும்..
ஓம் நமசிவாய... சதுரகிரியாரே போற்றி.....