சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பிரச்சினைகள்.. எத்தனை விதமான அனுபவங்கள்..
முதலில், இனி சென்னையில் சாமானியன் வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ வாங்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு 800 சதுர அடி வீடு வாங்க கூட ஒரு நடுத்தர வர்க்கத்தவரால் முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ரூ 20 லட்சம். இது ஊருக்கு மிக தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் தினமும் ஒரு 3 அல்லது 4 மணி நேரம் அலுவலகத்துக்கு பயணம் செய்ய தயாராக இருந்தால். மேலும் சொந்த வாகனம் இல்லாவிட்டால் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாது.
நான் பல இடங்களில் வீடு தேடியபோது கவனித்த மிக முக்கிய விசயம். யாருமே குடியிருப்பதற்கு வீடு கட்டுவதுபோல தெரியவில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரு முதலீடாக வீடு வாங்குபவர்களுக்காகவே கட்டுகிறார்கள். என்னைப்போல குடியிருக்க வீடு வாங்குபவர்கள் தனியாகதான் அதில் குடியிருக்க வேண்டி இருக்கும். (மற்றவர்கள் வாடகைக்கு வரும்வரை)
இந்த வாரம் ஒரு பத்திரிக்கையில் ஒருவர் எழுதி இருந்தார்.சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புகளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் விலை குறையும் என்று. இது முற்றிலும் தவறான கணிப்பு. நான் தேடியவரை மாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வீடுகளின் விலையும் அதிகரித்தே இருக்கிறது. 4 அல்லது 5 மாடிகளுக்கு மேல் ஒவ்வொரு மாடிக்கும் குறைந்தது ரூ 50 முதல் ரூ 500 வரை விலை உயர்த்தியே விற்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான பிரச்சினை அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் வீடுகள் கட்டுவது, அரசிடம் அனுமதி வாங்கியதை விட அதிக சதுர அடிகளில் வீடுகளைக் கட்டுவது, அனுமதியே வாங்காமல் அனுமதி வாங்கியதுபோல கட்டுவது, இன்னும் இந்த அரசு அனுமதி விசயத்தில் எவ்வளவு தகிடு தத்தம் இருக்கோ தெரியவில்லை.
நான் பார்த்தவரை இதுவரை யாருமே அரசு அனுமதி அளித்த வரைபடம் படி வீடு கட்டவில்லை. ஓரளவுக்கு அந்த வரைபடத்தை ஒட்டி வீடு கட்டப்படுமானால் அந்த பில்டர் கேட்கும் பணத்துக்கு நாம் இரண்டு வீடு வாங்கி விடமுடியும். அவ்வளவுக்கு கொள்ளை விலை வைத்து விற்கிறார்கள்.
எனக்குத் தெரிந்த வக்கீல் நணபரிடம் இது பற்றி விசாரித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இன்னும் பகீரென்று இருந்தது. 1999க்குப் பிறகு கட்டப்பட்ட விதி முறை மீறிய கட்டிடங்களை இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருப்பதாக கேட்டது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. நமது அரசுகள்தான் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தள்ளிவைத்துவிட்டு மேலும் மேலும் இப்படி விதிமுறை மீறிய குடியிருப்புகளை அனுமதிப்பது வருத்தமாகவே இருக்கிறது.
தி நகரில் இருக்கும் வணிக வளாகங்கள் விதிப்படி கட்டப்படவில்லை என குதிக்கும் நமக்கு, நாம் குடியிருக்கும் வீடுகளே விதிப்படி கட்டப்படவில்லை என்பது எப்போது உறைக்கும் என தெரியவில்லை. இதில் எல்லோரும் கூட்டுக்களவாணிகள் போலத்தான் தெரிகிறது.
சுருக்கமாக சொன்னால் பேசாமல் வாடகை வீட்டிலேயே இருந்துவிடலாம் போல தோன்றுகிறது. யாராவது பூனைக்கு மணி கட்டுவதுபோல், ஏதாவது ஒரு அரசாங்கம் விதிகளைத் தளர்த்தியோ அல்லது புதிய விதிகளை கடுமையாக பின்பற்ற ஆவன செய்தாலோ அல்லது அத்தி பூத்தாற்போல் யாராவது நியாயமான உணர்வுடைய ஒரு பில்டர் அமைந்தாலோ தான் வீடு வாங்க முடியும்போல தெரிகிறது.
இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்சது நமக்கும் அப்பிடின்னு முடிவு பண்ணி ஏதாவது ஒரு பில்டர்கிட்ட வீடு வாங்கிவிடலாமான்னும் ஒரு யோசனை இருக்கு..
இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்சது நமக்கும் அப்பிடின்னு முடிவு பண்ணி ஏதாவது ஒரு பில்டர்கிட்ட வீடு வாங்கிவிடலாமான்னும் ஒரு யோசனை இருக்கு..
காலமும் நம்ம மஹாலிங்கமும் தான் இதுக்கு பதில் சொல்லணும். ஓம் சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.