Friday, February 18, 2011

நல்லவர்களின் வல்லமை????

இப்போதெல்லாம்,  நல்லவர்களைக் காண்பதே அரிதாக ஆகிவிட்டது. முக்கியமாக பொதுவாழ்வில். ஆனால் இன்றைய சூழலில், காரியம் சாதிக்கும் வல்லவர்களே அதிகம் பொதுவாழ்க்கைக்கு வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சுயநல வாதிகளாகவும், சந்தர்ப்பவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவுமே இருக்கிறார்கள். இவர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டுமே நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நல்லவை நடக்கும். சிலர் பொதுவாழ்வுக்கு வரும்பொழுது நல்லவர்களாகவும், நாளடைவில் சுயநலவாதிகளாகவும் சமூகவிரோதிகளாகவும்(அல்லது அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களாகவும்) மாறிவிடுகிறார்கள்...

ஏன் இந்த நிலை?? என்ன செய்தால் இதை மாற்றமுடியும்?? எனது சிந்தனைகள்...

ஏன் இப்படி??

முதலில், நல்லவர்களாக வளர்க்கப்பட்டவர்கள், பெரும்பாலும் பய உணர்வுடனே வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக, பெற்றோரின் சுயநலமே அவர்களின் குழந்தைகளிடம் பிரதிபலிக்கிறது.  இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை. நமது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் அணுகுமுறை நாம், நமது என்ற குறுகிய வட்டத்துக்குள் அவர்களை அழுத்தி, அவர்களின் பரந்த மனப்பான்மையை வளர்க்காமல் விடுவதே இதன் மூலகாரணம்.

குழந்தைகளை வெளி உலகிற்கு சிறப்பாக அறிமுகம் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதை வீட்டிற்கு வரும் விருந்தினரில் தொடங்கி வெளியில் சந்திக்கும் ஆட்கள் வரை பழக்கப் படுத்தப்படவேண்டும். இதில் ஆசிரியர்களின் பங்கும் மிகப் பெரிது. ஆனால் இப்போது இது பெரும்பாலும் தவறான முறையிலேயே செய்யப்படுகிறது. குழந்தைகள் வெளியாட்களிடம் அதிகம் பழகினால் கெட்டுப்போய்விடுவார்கள் என்ற சிந்தனையே அதிகம் வளர்க்கப்படுகிறது.

இதனால்தான் சிறிய பிரச்சினைக்குக் கூட அவர்களால் சுயமாக சமாளிக்கத்தெரியாமல் பிறரைச் சார்ந்தே இருக்கிறார்கள். கூச்ச சுபாவத்துடனே வளர்கிறார்கள். இதனால் இவர்களுக்குத் தேவையான காரியங்கள் மிகத் தாமதமாகவே நடைபெறுகின்றன. சில நேரங்களில் நடைபெறாமலே போவதற்கான வாய்ப்பும் உண்டு. இவர்கள், தானே, தாங்களாக செய்துகொள்ளும் வேலைகளில் வல்லவர்களாகவும், வெற்றி அடைபவர்களாகவும் , பிறரை வேலைவாங்கும் விஷயத்தில் தோல்வியடைபவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சிலர் நாளடைவில் தேர்ச்சி பெற்று மிகவும் சிறப்பான நிலையை அடைகிறார்கள். இந்த நிகழ்வில், தங்களின் தனித்தன்மையையும்,  நல்ல சிந்தனைகளையும் 
பெரும்பாலானோர் இழந்து விடுகிறார்கள். வெகு சிலரே இதில் தப்பித்து உயர்நிலையை அடைகிறார்கள்.

நல்லவர்கள், இதிலிருந்தெல்லாம்  தப்பித்து உயர் பதவிகளுக்கு வரும்போதுதான் அவர்கள் குறிவைக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். அல்லது சந்தர்ப்பவாதிகளுடன் கூட்டு சேர நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அந்த நேரங்களில் அவர்களுக்கு இந்த சமூக சூழல் சாதகமாக அமையாத பட்சத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபற்றிய முந்தய பதிவு ஏன் இப்படி இருக்கிறார்கள்???

நல்லவர்கள் உயர் பதவிகளில் இருக்கும் போது இப்போதெல்லாம் அதிக தவறுகள் நடக்கின்றன. அவர்களுக்கு ஒரு மரியாதையோ, அல்லது இயல்பாக ஒரு உயர் அதிகாரிக்குத் தரவேண்டிய குறைந்தபட்ச தகவல்களையோ அவர்களுக்கு கீழே வேலைபார்ப்பவர்கள் தருவதில்லை. இதனால் அவர்களுக்கு அவர்களின் துறைகளின் மீது இருக்கும் கட்டுப்பாடு குறைந்து விடுகிறது. விளைவு, ஒழுங்கீனம், ஊழல், ஏமாற்றுதல்.....


என்ன செய்யவேண்டும்?

இருக்கும் நல்லவர்கள் வல்லவர்களாக மாறுவது கடினமே... ஏனெனில் இது அவர்களின் ரத்தத்தில் ஊறவில்லை. ஆனால் முடியாத காரியமில்லை. ஆன்மீகப் பயிற்சிகளும், சமூகப் பயிற்சிகளும், முன் முனைப்பும், அதிகம் கொண்டு இவர்கள் மாற முயற்சி செய்யவேண்டும்.

மேலும், இந்த மாற்றம் குழந்தையிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும். குழந்தைகளுக்கு மாணவப்பருவத்திலிருந்தே நேர்மையும் தைரியமும் சுயசார்பு நிலையும் கற்பிக்கப்படவேண்டும். இதற்கு முதலில் பெற்றோரும்,  ஆசிரியர்களும்,  கல்வியாளர்களும் நேர்மையைக் கடைப்பிடிக்கப் பழகவேண்டும். கல்விக்கூடங்கள் மாணவர்களின் நேர்மையை வளர்க்கப் பாடுபட வேண்டும். வாழ்க்கைக் கல்வியும், ஆன்மீகக் கல்வியும் அனைவருக்கும் சிறப்பாக போதிக்கப்படவேண்டும்.
நாம் நல்லவர்களாக இருந்தால்தான் நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க முடியும். எனவே அவர்களுக்கு உதாரணமாக இருப்பதற்காகவாவது அனைவரும் நல்ல வழிக்குத் திரும்ப வேண்டும். இதில் சாதாரண பாமரனிலிருந்து, பெரிய தலைவர்வரை அனைவரும் பங்கு பெறவேண்டும். அப்போதுதான் ஒரு சிறப்பான எதிர்கால சமுதாயம் உருவாகும்.


இதெல்லாம் செய்தால் / நடந்தால் மிக நன்றாக இருக்கும்... என்ன செய்வது... எல்லோரும் எப்படி அடுத்தவர்களைவிட அதிகம் பணம் சம்பாதிப்பது என்ற சிந்தனையிலேயே அதிக கவனமாக இருப்பதால், இந்த சிந்தனை விட்டுப்போகிறது.


ஊதுற சங்க ஊதியாச்சு... இனிமேல் அவங்க பாடு, அந்த மஹாலிங்கம் பாடு.. சதுரகிரியாரே சரணம்..

ஓம் நம சிவாய....

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஊதுற சங்க ஊதியாச்சு... இனிமேல் அவங்க பாடு, அந்த மஹாலிங்கம் பாடு.. சதுரகிரியாரே சரணம்..//
விடியும்வரை காத்திருப்போம்!1

shanmugavel said...

//நாம் நல்லவர்களாக இருந்தால்தான் நமது குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்க முடியும்.//
-இதுதான் பிரச்சினையே!

Sankar Gurusamy said...

Ms Rajarajeswari, From our end this is the only thing which can be done. Further it is HIS Grace.

Thanks for your visit.

Sankar Gurusamy said...

Shanmugavel, This can not be taken as a problem as the solution is already in Hand. Only a Free will is required from all to stick to that Level of Goodness in them.

Thanks for your visit and comments.

அருள் said...

விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html