Wednesday, February 8, 2012

எது அன்பு??!!

அன்பு செலுத்துதல் என்பது எல்லோரும் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் எனக்கு சில நாட்களாக இதில் பெருத்த மனக் குழப்பம். பல கேள்விகள் என்னுள் எழுந்து ஆட்டிப்படைக்கின்றன. அதில் சில...

*  எது அன்பு?
*  எந்த‌ விஷயத்தை நாம் அன்பு என சொல்கிறோம்?
*  கருணையும் அன்பும் ஒன்றா?
* அன்பும்/ கருணையும் உடையவரையே பெரும்பாலும் எளிதாக ஏமாற்றுகிறார்களே? அது ஏன்?
* அன்பு இருப்பவர்கள் மீது அதிகம் கோபம் கொள்வது இயல்பானதாக இருக்கிறதே அது ஏன்?
* அன்பு பலமுள்ளது என்றால் ஏன் அன்புள்ளவர்களை பலவீனமானவர்களைப் போல் நடத்துகிறார்கள்?
* கடமைக்கு பிரியமாக இருப்பது என்பது இருக்கிறதா? அதுவும் அன்பு ஆகுமா?

இந்த குழப்பக் கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாக விடைகள் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே குழப்பம் தீரும் என்று எண்ணுகிறேன்.

எது அன்பு?

நம் மனதில் சக மனிதன் மேல், உயிரின் மேல் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சியான ஈடுபாடுதான் அன்பு என நான் அனுமானிக்கிறேன். மேற்கண்ட குழப்பக் கேள்விகளுக்கான பதில் இந்த அனுமானத்தில்தான் அடங்கி இருக்கிறது.

நம் வாழ்வியலை நிர்ணயிக்கும் மற்றும் பல சந்தேகங்களுக்கான விடைகாண உதவும் கிளைக்கேள்வி இதிலிருந்துதான் பிறக்கிறது.

இந்த பிறர் மீது வெளிப்படும் மகிழ்ச்சியான ஈடுபாடு இயல்பாக இருக்கிறதா அல்லது அது ஒரு போலியான நடிப்பாக இருக்கிறதா அல்லது ஒரு கயமைத்தனத்துடன் வெளிப்படுகிறதா அல்லது கடனே என்று வெளிப்படுகிறதா அல்லது ஏதாவது ஆதாயத்துக்காக நடிக்கும்போது வெளிப்படுகிறதா?

இந்த கிளைக் கேள்விக்கான நம் ஆத்மார்த்தமான உண்மையான பதில் என்ன என்பதில்தான் நமக்கு இந்த அன்பினால் கிடைக்கும் பிரதி பலிப்புகளின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என உளவியல் சொல்கிறது. அதுபோல் நாம் என்ன நினைத்து எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதுபோன்ற பிரதிபலிப்புதான் நமக்கும் கிடைக்கும். அன்பு செலுத்துவதால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் தான் மூல காரணம்.

பிறர் மேல் காட்டப்படும் அன்பு மட்டும் அன்பு அல்ல.. நம்மை நாமேயும் அன்பு செய்து கொள்ள வேண்டும். அதாவது சற்று சுய நலமாகவும் சிந்திக்க பழகவேண்டும்.

சுயநலமும் பொதுநலனும் நம் சிந்தனையில் கலந்தே இருக்க வேண்டும். இதில் ஒரு சமநிலை அல்லது சரிவிகித நிலை ஏற்படும்போதுதான் அன்பினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். அந்த சரிவிகிதம் என்பது ஒவ்வொருவரின் சுற்றத்தையும் சூழலையும் வாழ்வியலையும் வளர்ப்பையும் பொறுத்தே அமையும்.

இயல்பாக செலுத்தப்படும் சரிவிகித அன்புதான் பாதுகாப்பான சுபிட்சமான வாழ்வின் சூட்சுமம்.

உண்மையில் பிரதிபலன் பாராமல் செய்யப்படும் அன்புக்கு எப்போதும் பாதிப்பு குறைவுதான்.ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா என்றால் என் பதில் முயன்றால் முடியாயது ஒன்றும் இல்லை என்பதே..

இனி.. இயல்பாக அன்பு செலுத்த முடியாதவர்கள் அதை செய்வது எப்படி?

முதலில் அன்பு செலுத்துவதை ஒரு கடமை போல நினைத்து செய்து பழக‌ ஆரம்பிக்க வேண்டும். இதனால் சில பல பாதிப்புகள் இருந்தாலும் இதுதான் முதல்படி. இது படிப்படியாக நம் இயல்பான பழக்கமாக மாறும்.

அந்த இயல்பான அன்பு காலப்போக்கில் ஒரு மிகப் பெரிய பிராண / ஆத்ம சக்தியாக உருவெடுக்கிறது. இந்த சக்தி எந்த ஒரு எதிர்மறை விளைவையும் முறியடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடவுளே மஹாலிங்கம், உங்க அருளால இந்த அன்பு என்னும் அற்புதம் இயல்பா வெளிப்பட எனக்கும் எல்லோருக்கும் அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

9 comments:

Unknown said...

அன்பும் கருணையும் வேறு வேறா என்பது தெரியவில்லை. ஆனால் அன்புள்ளம் கொண்டவர்கள் நிறைய ஏமாற்றப் படுகிறார்கள் என்பது உண்மை.

பாலா said...

அன்பு செலுத்துவதால் மட்டுமே வாழ்வில் நிறைவையும் நிம்மதியையும் பெற முடியும். அருமையாக கூறி உள்ளீர்கள்.

Sankar Gurusamy said...

திரு பாலா, திரு அப்பு, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

மிக தெளிவான கருத்துகள் ...... கடைசியில் சதுரகிரியை கூப்பிடும் வரை எல்லா வாக்கியங்களும் பிரமாதம் .

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், சதுரகிரி சமாசாரம் அவரவரது நம்பிக்கை சம்பந்தப்பட்டது.. ஆனால் சொல்ல வந்த கருத்து அந்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Vetirmagal said...

கருத்து நம்பிக்கைக்கு உட்பட்டது தான். அன்பு செலுத்துவதற்கு, நம்பிக்கை மிகவும் அவசியம் , தன்மீதும்பிறர் மீதும்.

மிகவும் உயர்ந்த , எல்லோராலும் கடைப்பிடிக்க முடிந்த , வாழ்க்கை முறை பற்றி, சுலபமாக பின்னி விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.

Sankar Gurusamy said...

திருமதி வெற்றிமகள், தங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள்.. தங்கள் கருத்துக்களை பகிருங்கள்..

Irai Kaathalan said...

நல்ல பதிவு ... இனி வரும் காலங்களில் தாங்கள் கூறுவது போன்று , அன்பு செலுத்துவதை ஒரு கடமையாகத்தான் செய்வார்கள் போலும் ...எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் , கள்ளம் கபடம் சிறிதும் இல்லாமல் , தனது வாழ் நாள் முழுதும் நமக்காக அற்பணிக்கும் அந்த தாய் அன்பை இனி நாம் எங்கே கிடைக்க பெறுவோம் இறைவா ? காலம் மாறுகிறது , கலாசாரம் மாறுகிறது , வேறு வழி இன்றி அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து தான் ஆக வேண்டும் ...ஆனால் அதோடு சேர்ந்து , உறவுகள் , தாய்மையின் அன்பு , உண்மையான பந்த பாசங்கள் அழிகிறதே !!!

Sankar Gurusamy said...

திரு திருமலை பாபு, தாங்கள் கூறுவது உண்மைதான்...பல இடங்களில் அன்பு செலுத்துவது என்பது ஒரு கடமைபோலதான் செய்கிறார்கள்.உண்மையான அன்பைவிட போலி அன்புக்குதான் இன்று மரியாதை.

தங்கள் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி.. தொடர்ந்து வாருங்கள், தங்கள் கருத்துக்களை பகிருங்கள்..