Wednesday, June 15, 2011

ஆண்டவன் திருவிளையாடல் - 2 - முருகன்

ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் கடவுள் அவர் திருவிளையாடல நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவர் என் வாழ்க்கைல நடத்திய திருவிளையாடல இங்க பகிர்ந்துக்கிரேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தய பதிவு இணைப்பு :



ஒரு செமி நாத்திகனா ஆண்டவனுக்கே சவால் விட்ட திமிருக்கு அந்த ஆண்டவன் சரியான பதில் சொன்னார்..

நான் கல்லூரி முடிக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை... படிப்பு முடிந்து ஹாஸ்டல் அறையை காலி செய்து வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில், வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபரான எனது தகப்பனார் காலமானார்..

கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டம் என்பது எப்படி இருக்கும் என்ற பாடம் கற்க ஆரம்பித்தேன்... வேலையும் இல்லை... இரண்டு மாதங்கள் தீவிரமாக வேலை தேடியும் எந்த பலனும் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு தெரிந்த பல உறவினர்கள், குடும்ப நண்பர்கள் யாரும் உதவவும் இல்லை. இதில் சில நாள் சென்னை, மும்பை என்று வேலை தேடி அலைந்து விட்டும்  வந்தேன்.. எதுவும் பலனளிக்க வில்லை.

சில நாட்கள் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத நிலை வந்து விட்டது...

எனது பல நண்பர்கள் சாப்பாட்டு கஷ்டம் பற்றி பேசும் போது புரியாத பல விஷயங்கள் அப்போது புரிந்தது. அவர்கள் அவ்வளவு கஷ்டத்திலும் போராடி வாழ்ந்த வாழ்வு பிரமிப்பூட்டியது. ஆரம்பத்திலிருந்து கஷ்டத்தில் வாழ்வதற்கும், வாழ்ந்து கெடுவதற்கும் இருக்கும் வித்தியாசம்தான் இதுவோ என உணர்ந்தேன்.  அதிலும் அப்போது எனக்கு சுயபச்சாதாபம் அதிகம்.

இனியும் தாங்கும் சக்தி இல்லை என்ற மனநிலை வந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் துணிந்து விட்டேன்.

அவ்வாறு துணிந்த அன்று இரவு, ஒரு கனவு... கனவில் ஒரு கோவில்... அதில் கடவுள்...  உருவம் தெரியவில்லை... ஆனால் அது கோவில் என்பதும், அது கடவுள் என்பதும் புரிகிறது.

திடீரென்று விழிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் அன்றுவரை கடவுளைப் பற்றியோ கோவிலைப்பற்றியோ கொஞ்சமும் நான் சிந்திக்கவில்லை. சற்று யோசிக்க தொடங்கினேன்... பழைய நினைவுகள் வந்து அலை மோதியது...

கடவுளிடம் விட்ட சவால் நினைவுக்கு வந்தது... அவர் நேரில் வரவில்லை.. கனவில் வந்து விட்டார்.. இருந்தாலும் ஒருமுறை அவரை சென்று கோவிலில் தரிசித்துவிட்டு பிறகு தற்கொலை எண்ணத்தை செயல்படுத்தலாம் என்று எண்ணி மறு நாள் எங்கள் ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றேன்.

அன்று கார்த்திகை மாதம் 2ம் நாள். முருகன் கோவிலில் உற்சவர் ஊர்வலம் ஆரம்பிக்க இருந்தது.. திடீரென்று ஏதோ ஒரு உள்-உணர்வு.. நான் பர பர வென்று சென்று அந்த உற்சவரை சுமப்பவர்களுடன் இணைந்து அவரை தூக்கி சுமந்து கொண்டு கோவிலை வலம் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. ஒன்றும் புரியவில்லை... சில நிமிடங்களில் தோள் வலி எடுக்க ஆரம்பிக்கும் போது, யாரோ ஒருவர் வந்து அங்கு வந்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு என்னை விடுவித்தார். உற்சவம் தொடர்ந்தது.. நான் கோவிலிலே அமர்ந்துவிட்டேன். முருகன் முன் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் ஏதோ சொல்வது போல இருந்தது...

மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு நம்பிக்கை கீற்று வர ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் மங்கியது. மனதுக்குள் ஒரு சங்கல்பமாக இனி தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன்.

சதுரகிரி சுந்த மஹாலிங்கத்துக்கு அரோஹரா...



தொடரும்....

Tuesday, June 14, 2011

ஊழலற்ற நிர்வாகமே உடனடி தேவை....

இப்போது கருப்பு பணத்தை கட்டுப்படுத்த நமது வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாக நம் அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது நம் நாட்டில் இருக்கும் சட்டங்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள்... அதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படியெல்லாம் அதை நீர்த்துபோக செய்கிறார்கள்.. என்பதை பற்றியும், உண்மையில் நம் நாட்டில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பதைப் பற்றியுமான பதிவு...


எந்த ஒரு நாட்டிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கவேண்டும். அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். அதை பாரபட்சமின்றி அமல் படுத்த வேண்டும். சாமானியனுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்கள், அரசியல் தரகர்கள், அரசியல்வாதிகளுக்கு வேறு விதமாகவும் இருக்க கூடாது.

நம் நாட்டில் இப்போது இருக்கக்கூடிய தலையாய பிரச்சினை, சட்டத்தை அமல் படுத்த வேண்டிய நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களும், அனைவரையும் சமமாக பாவிக்காமல் இருக்கும் ஒரு கறை படிந்த நிர்வாக அமைப்புமே ஆகும்.

இவர்கள் இருக்கும் சட்டங்களை சரியாக அமல் செய்துவிட்டார்களா??? இதை சரி செய்வதற்கு யாரும் முயற்சி செய்வதுபோலவே தெரியவில்லை. புதிய சட்டங்கள் இயற்றவும், இருக்கும் சட்டங்களை திருத்தவும் கிளம்பி விட்டார்கள்.

புதிய, திருத்திய சட்டங்களையும் இவர்கள் சரியாக அமல் செய்வார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்??? இதை யார் கண்காணிப்பது???

சில ஊழல் அதிகாரிகள் ஒரு நல்ல சட்டத்தை  அமல் படுத்த கூடாது என்று நினைத்தால், சில அப்பாவிகளை அதில் சிக்க வைத்து, படாத பாடு படுத்தி, ஒரு குழப்பமான சூழலை விளைவித்து அந்த சட்டத்தை அமல் படுத்துவதையே நிறுத்தி வைக்கும் சூழலுக்கு தள்ளிவிடுகிறார்கள். இதில் பலியாடான அந்த அப்பாவிகளுக்கு கடைசியில் நீதி கிடைப்பதற்கு வருடக்கணக்காகிறது.  இந்த மாதிரியான சூழலை மாற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது???

இந்த நிலை புதிய ஜன் லோக்பால் சட்டத்துக்கும், மாற்றப்பட்ட வருமான வரி சட்டத்துக்கும் வரும் என்றே தோன்றுகிறது.


இதை மாற்ற என்ன செய்யலாம் ???

1) நம் அரசாங்கம் மக்களுக்கானது என்ற நம்பிக்கையை மீண்டும் மக்களிடம் விதைக்க வேண்டும்.

2)  அரசு நிர்வாகம் அனைவருக்கும் சமமாக லஞ்ச ஊழல் இல்லாமல் மாற்றப்பட்டாலே இந்த நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கும்...

3) அரசு நிர்வாகத்தை கணிணி மயமாக்குதல் இந்த லஞ்ச ஊழலை குறைக்க முதல் படி ஆகும்.

4)  நீதி பரிபாலனம் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நடைபெற வேண்டும். இதற்கு அவ்வப்போது பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நீதித்துறை நிர்வாகத்தில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நீதிபதி காலி இடங்களை உடனடியாக நேர்மையானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

5) பாரபட்சம் காட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சிலர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தாலே, பலர் திருந்த ஆரம்பிப்பர்.

6) சட்ட விரோதமாக சேர்க்கும் சொத்துகளை பறிமுதல் செய்து அவ்வாறு செய்தவர்களுக்கு குடும்பத்துடன் பாஸ்போர்ட்டை முடக்கவேண்டும்.


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் நம் நாட்டுல ஒரு லஞ்ச ஊழலற்ற அரசு நிர்வாகம் அமைய அருள் செய்யணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

Wednesday, June 8, 2011

மொழியும், குழந்தைகளும் ....

போன வாரம் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு குடும்பத்துடன் ரயிலில் வந்து கொண்டிருந்தேன். எங்களுக்கு அருகில் ஒரு பெங்காலி குடும்பம் இருந்தது. அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர் - வயது 7 , 5.

அந்த குழந்தைகள் என் மகனுடன்(வயது 4) விளையாட ஆரம்பித்தார்கள்.  சற்று நேரத்துக்கெல்லாம் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. ஏதேதோ பேசினார்கள். எப்படியெல்லாமோ விளையாடினார்கள். கல கல என்று ஒரு சிரிப்பு மயமாக இருந்த்து.

இதில் முக்கியமான விசயம் என் மகனுக்கு பெங்காலி ஒரு வரி கூட தெரியாது.. எனக்கும் தான். அவர்களுக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியாது. என் மகன் படிப்பதும் ஒரு சாதாரண பள்ளி வகுப்பில்தான். எனவே பெரிய ஆங்கில, இந்தி பரிச்சயமும் இல்லை. சில ஆங்கில வார்த்தைகள், சில இந்தி வார்த்தைகள் என என் மகன் சமாளித்துக் கொண்டிருந்தான்.

கடைசியில் என்னிடம் வந்து அவர்கள் என்ன கூறினார்கள் என்று கேட்டான். நானும் எனக்கு தெரியாது என்று கூறி, அவனிடம், ஒன்றும் புரியாமல் என்ன விளையாண்டாய் என்று கேட்டேன்.

அதற்கு அவன் ஒரே ஒரு புன் சிரிப்பு சிரித்துவிட்டு மீண்டும் அவர்களுடன் விளையாட சென்று விட்டான். மீண்டும் அவர்களுக்குள் கல கல சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.


மொழி புரியாவிட்டாலும், குழந்தைகளுக்குள் ஏதோ ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. அவர்கள் உலகம் மிக சுதந்திரமாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருக்கிறது. எது புரிகிறதோ இல்லையோ மனதின் மகிழ்ச்சியை சரியாக புரிந்து கொண்டு அதை பகிர்ந்து கொண்டும் விளையாடுகிறார்கள்.

அன்பும் மகிழ்ச்சியும் ததும்பும் பொழுது மொழி அமைதியாகி விடுகிறதை கண் கூடாக காண முடிந்தது.

மொழி தெரிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக அந்த விளையாட்டு இருக்கும்போலவும் தோன்றியது.

இதை புரிந்து கொள்ள முயற்சி செய்வதைவிட அவர்கள் விளையாட்டை ரசிப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து அதை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்.


இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த கடவுளுக்கு நன்றி..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்.

Tuesday, June 7, 2011

எங்கே எதிர் கட்சிகள் ????

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர். 

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.  இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை.  பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள். 
இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா??  அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??

நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை.  நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் -  இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...
ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...

Monday, June 6, 2011

அடிமை மட்டுமே வேண்டும் அரசாங்கம்...

ஜூன் 5, ஞாயிறு அன்று அதிகாலையில் பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை போலீசார் அடக்கிய விதம் சற்று நெருடலாகவே இருந்தது. அவர் நல்லவரா கெட்டவரா என்பதை விட, அவர் மீது ஏவி விடப்பட்ட போலீசாரின் வன்முறை தாக்குதல் மோசமானதாக இருந்தது.

இது ”ஊழலற்ற நிர்வாகம்” / “கருப்புப் பணத்தை திரும்ப கொண்டுவருதல்”  பற்றிய நம் நாட்டின் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை -'attitude' எடுத்துக்காட்டியது.

அமைதியான போராட்டம் நடத்தியவர்கள் மீது, நம் தேசத்தின் தலைநகரின் மையத்திலேயே,   மீடியா முன்னிலையிலேயே, இப்படி ஒரு  வன்முறை நடவடிக்கை எடுக்கும் இவர்கள் தம் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், கண்காணாத இடத்தில் இருக்கும் நம் சாதாரண பொதுமக்களின் மற்றும் பழங்குடியினரின் போராட்டத்தின் போது எப்படி நடந்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்கும்போது நடுக்கமாக இருக்கிறது.

இதில் நம் மதிப்பு மிக்க அமைச்சர்கள் கூற்று இன்னும் வேடிக்கையாக இருந்தது. “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்ய வேண்டும்.. அரசியல் பேசக்கூடாது... ” என்று திருவாய் மலர்ந்தருளினர்.

இனிமேல் அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் அரசியல் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இப்போது இதை அமைச்சர்கள் டிவி பேட்டிகளில் சொல்கிறார்கள். நாளை இது ஒரு சட்டமாகவே வரலாம்.)

போராட்டதுக்கு முன் அனுமதி, பொதுக் கூட்டத்துக்கு முன் அனுமதி, உண்ணாவிரத்துக்கு முன் அனுமதி, போராட்டம் நடத்த ஊருக்கு வெளியில் யாருக்கும் தெரியாத இடத்தில் அனுமதி,  முன்னறிவிப்பின்றி அனுமதி ரத்து, நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனை, அமைதியாக போராடினாலும் தாக்குதல்.... வெள்ளையர்கள் ஆட்சி செய்தபொழுது இருந்த சட்ட நடைமுறைகள் இப்போதும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

நமக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையோ என்ற பிரமை எழுகிறது. வெள்ளையர்களுக்குப் பதில் இந்த கேடு கெட்ட ஊழல் அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். இதுதான் ஒரே வித்தியாசம்.

இவர்களுக்குத் தேவை- இவர்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ளாத அடிமைகள் மட்டுமே... இதற்கு இவர்கள் நாட்டை ஆள வேண்டியதில்லை. ஆட்டுமந்தையை ஆண்டாலே போதும்.

கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இவங்களுக்கு நல்ல புத்திய குடுத்து தேசத்தை காப்பாத்தணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, May 19, 2011

எது நல்லாட்சியாக இருக்க முடியும்..

ஒருவழியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைந்து விட்டது. இந்த நேரத்தில் நமக்கு தேவையான நல்லாட்சி எது என்பதை பதிவு செய்வது நம் கடமை.

1) அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழல் இருக்க வேண்டும்.

2) அரசாங்கத்தின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் சேரவேண்டும்.

3) லஞ்ச ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் அமைய வேண்டும்.

4) அரசு பணி ஏற்று செய்பவர்கள் நேர்மையாகவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டும் நடக்க வேண்டும். (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு வேலைகளை ஏற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள்)

5) நீதி பரிபாலனம் சரியான நேரத்தில் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

6) அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வருமானத்துக்கான வாழ்வாதாரங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்.

7)  தரமான கல்வி, மருத்துவம், சட்டஉதவி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

8) நியாயமான, மக்கள் வருமானத்திற்கு ஏற்றதான விலைவாசி நிலை இருக்க வேண்டும்.

9) மக்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகள் - சாலைவசதி, பொது போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரமான குடியிருப்புகள், சுற்றுச்சூழல் - சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

10) விவசாயம் செழிக்க வேண்டும்.


என் மனசுக்கு தேவைன்னு பட்டதையெல்லாம் எழுதி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான்.

நமது ஆட்சியாளர்கள் இவைகள் ஏற்பட பாடுபட்டாலே நம் நாடு சிறப்பான நிலையை அடையும்.

கடவுளே! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்.. நீங்கதான் இவையெல்லாம் நிறைவேற அருள் செய்யணும்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!

Thursday, May 5, 2011

அகங்காரம் - இரண்டு அனுபவங்கள்

நம் நாட்டில் நடக்கும் சில விசயங்களைக் கேள்விப்படும்போது, அனுபவிக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடா? அல்லது அது ஒரு இயல்பான உணர்வு நிலையா என்று என்னால் கணிக்கமுடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் அந்த சந்தேகத்தை மேலும் குழப்பிவிட்டது..

சம்பவம் 1

கல்கத்தாவுக்கு வந்த புதிதில் எனது பான் அட்டையில் எனது விலாசம் மாற்ற ஆன் லைனில் விண்ணப்பித்து இருந்தேன். என் விலாசத்துக்கு சான்றாக எனது G SANKAR என்ற பெயருடன் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்பி இருந்தேன்.

அதற்கு பதிலாக எனக்கு வந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. 

”தங்கள் பெயர் எங்கள் அலுவலக பதிவேடுகளில் உள்ளதுபோல இல்லை. எனவே தாங்கள் வேறு சான்று சமர்ப்பிக்கவும்.”

விஷயம் என்னவென்றால் அவர்களுடய பதிவேடுகளில் எனது பெயர் SANKAR GURUSAMY  என்று இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் எப்போதுமே இனிஷியலை விரிவாக எழுதும்படிதான் விண்ணப்பங்களில் கேட்கிறார்கள். 

வினோதம் என்னவென்றால் எனது பான் அட்டையில் எனது பெயர் G SANKAR என்றுதான் பதிவாகி இருக்கிறது.

நான் அவர்களுக்கு போன் செய்து இதைப்பற்றி விளக்கமாக கூறினேன். அவர்கள் மிக அமைதியாக தங்கள் அட்டை தவறாக பிரிண்ட் போட்டு தரப்பட்டது என்று கூறி வெறுப்பேற்றினார்கள். மேலும் தாங்கள் புதிய விலாச சான்று சமர்ப்பித்தால்தான் விலாசம் மாற்ற முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களுக்கு இதுபற்றி விளக்கி ஒரு சில ஈமெயில் அனுப்பினேன்.  அவர்கள் மசியவில்லை.

பிறகு சில நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில்  வேறு சான்றிதழ் பெற்று எனது விலாசத்தை மாற்றினேன்.

சம்பவம் 2

நேற்று பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க சென்றிருந்தேன். அங்கும் இதேபோல எனது அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் கொடுத்தேன்.

இந்த முறை உஷாராக எனது முழு பெயருடன் கொடுத்தேன். இவர்கள் இணையத்தில் அலுவலக சான்றிதழ் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் இவர்கள் அலுவலக சான்றிதழ் செல்லாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.  

மேலும் விலாச சான்றில் முழு பெயரும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

3 மணிநேரம் டாக்சி பயணம், ரூ 450 டாக்சி சார்ஜ்,  2 மணிநேர காத்திருப்பு. 3 மணிநேர அப்ளிகேசன் தயாரிப்பு -எல்லாம் வீண்.

குழப்பம்

எனது எல்லா விதமான செயல்பாடுகளும் என் G SANKAR என்ற பெயரில் தான் இருக்கிறது -  எனது பள்ளி, கல்லூரி சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பாங்க் அக்கவுண்ட், ரேசன் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐடி, கேஸ் கனெக்சன் (இதில் இனிஷியல்கூட இல்லை).

எதிலுமே எனது முழுபெயரான SANKAR GURUSAMY  என்பது இல்லை.

இப்போது எனக்கு எப்படி என் பாஸ்போர்ட் புதுப்பிப்பது என்று புரியவில்லை.  இதற்காக புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்றும் ஒரே குழப்பமாக உள்ளது.

உளைச்சல் :

மிக சாதாரண சம்பவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் என் மனம் மிகவும் உளைச்சல் அடைந்துவிட்டது. நேற்று முழுவதும் மிகவும் அப்செட். ஒரே படபடப்பாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது - ”எப்படி பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போகிறோம்” என்று. ஆனாலும் சற்று பொறுமையாக சிந்தித்து இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தெளிவு இப்போது இருக்கிறது. பார்க்கலாம்.


அகங்காரம்  :

இது எந்த வகை அகங்காரம் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதற்கில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. உணர்வுகளின் வெளிப்பாடு மனதையும் உடலையும் பாதிக்கிறது. ஆனால் நான் இது எதோ ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை பூரணமாக உணர்கிறேன். அந்த விழிப்புணர்வும் இருந்தது / இருக்கிறது.  ஆனாலும் என்னால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நம் தவறு என்பது இல்லாமல் நாம் பாதிக்கப்படும்பொழுது ஏற்படும் இந்த உணர்வு எப்படி அகங்காரமாகும் என்ற ஒரு குதர்க்கமான கேள்வி இங்கு எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  கடவுள்தான் இதில் தீர்ப்பு சொல்லணும்.


கடவுளே மஹாலிங்கம், இதில் ஒரு தெளிவையும் தீர்வையும் நீங்கதான் தரணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!