Thursday, May 19, 2011

எது நல்லாட்சியாக இருக்க முடியும்..

ஒருவழியாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைந்து விட்டது. இந்த நேரத்தில் நமக்கு தேவையான நல்லாட்சி எது என்பதை பதிவு செய்வது நம் கடமை.

1) அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழும் சூழல் இருக்க வேண்டும்.

2) அரசாங்கத்தின் சலுகைகள் தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் சேரவேண்டும்.

3) லஞ்ச ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் அமைய வேண்டும்.

4) அரசு பணி ஏற்று செய்பவர்கள் நேர்மையாகவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டும் நடக்க வேண்டும். (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசு வேலைகளை ஏற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள்)

5) நீதி பரிபாலனம் சரியான நேரத்தில் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும்.

6) அனைத்து தரப்பு மக்களுக்கும் போதுமான வருமானத்துக்கான வாழ்வாதாரங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும்.

7)  தரமான கல்வி, மருத்துவம், சட்டஉதவி குறைந்த விலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

8) நியாயமான, மக்கள் வருமானத்திற்கு ஏற்றதான விலைவாசி நிலை இருக்க வேண்டும்.

9) மக்களுக்கு தேவையான உள் கட்டமைப்புகள் - சாலைவசதி, பொது போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரமான குடியிருப்புகள், சுற்றுச்சூழல் - சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

10) விவசாயம் செழிக்க வேண்டும்.


என் மனசுக்கு தேவைன்னு பட்டதையெல்லாம் எழுதி இருக்கிறேன். இன்னும் நிறைய இருக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான்.

நமது ஆட்சியாளர்கள் இவைகள் ஏற்பட பாடுபட்டாலே நம் நாடு சிறப்பான நிலையை அடையும்.

கடவுளே! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்.. நீங்கதான் இவையெல்லாம் நிறைவேற அருள் செய்யணும்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!

Thursday, May 5, 2011

அகங்காரம் - இரண்டு அனுபவங்கள்

நம் நாட்டில் நடக்கும் சில விசயங்களைக் கேள்விப்படும்போது, அனுபவிக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வுகள் உண்மையான அகங்காரத்தின் வெளிப்பாடா? அல்லது அது ஒரு இயல்பான உணர்வு நிலையா என்று என்னால் கணிக்கமுடியவில்லை.

எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்கள் அந்த சந்தேகத்தை மேலும் குழப்பிவிட்டது..

சம்பவம் 1

கல்கத்தாவுக்கு வந்த புதிதில் எனது பான் அட்டையில் எனது விலாசம் மாற்ற ஆன் லைனில் விண்ணப்பித்து இருந்தேன். என் விலாசத்துக்கு சான்றாக எனது G SANKAR என்ற பெயருடன் அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் வாங்கி அனுப்பி இருந்தேன்.

அதற்கு பதிலாக எனக்கு வந்தது மிக அதிர்ச்சியாக இருந்தது. 

”தங்கள் பெயர் எங்கள் அலுவலக பதிவேடுகளில் உள்ளதுபோல இல்லை. எனவே தாங்கள் வேறு சான்று சமர்ப்பிக்கவும்.”

விஷயம் என்னவென்றால் அவர்களுடய பதிவேடுகளில் எனது பெயர் SANKAR GURUSAMY  என்று இருக்கிறது.

ஏனெனில் இவர்கள் எப்போதுமே இனிஷியலை விரிவாக எழுதும்படிதான் விண்ணப்பங்களில் கேட்கிறார்கள். 

வினோதம் என்னவென்றால் எனது பான் அட்டையில் எனது பெயர் G SANKAR என்றுதான் பதிவாகி இருக்கிறது.

நான் அவர்களுக்கு போன் செய்து இதைப்பற்றி விளக்கமாக கூறினேன். அவர்கள் மிக அமைதியாக தங்கள் அட்டை தவறாக பிரிண்ட் போட்டு தரப்பட்டது என்று கூறி வெறுப்பேற்றினார்கள். மேலும் தாங்கள் புதிய விலாச சான்று சமர்ப்பித்தால்தான் விலாசம் மாற்ற முடியும் என்றும் கூறிவிட்டார்கள்.

பிறகு நான் அவர்களுக்கு இதுபற்றி விளக்கி ஒரு சில ஈமெயில் அனுப்பினேன்.  அவர்கள் மசியவில்லை.

பிறகு சில நாட்களுக்கு பிறகு அலுவலகத்தில்  வேறு சான்றிதழ் பெற்று எனது விலாசத்தை மாற்றினேன்.

சம்பவம் 2

நேற்று பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பிக்க சென்றிருந்தேன். அங்கும் இதேபோல எனது அலுவலகத்தில் பெற்ற சான்றிதழ் கொடுத்தேன்.

இந்த முறை உஷாராக எனது முழு பெயருடன் கொடுத்தேன். இவர்கள் இணையத்தில் அலுவலக சான்றிதழ் ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது. ஆனால் இவர்கள் அலுவலக சான்றிதழ் செல்லாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்கள்.  

மேலும் விலாச சான்றில் முழு பெயரும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

3 மணிநேரம் டாக்சி பயணம், ரூ 450 டாக்சி சார்ஜ்,  2 மணிநேர காத்திருப்பு. 3 மணிநேர அப்ளிகேசன் தயாரிப்பு -எல்லாம் வீண்.

குழப்பம்

எனது எல்லா விதமான செயல்பாடுகளும் என் G SANKAR என்ற பெயரில் தான் இருக்கிறது -  எனது பள்ளி, கல்லூரி சர்டிஃபிகேட், மேரேஜ் சர்டிஃபிகேட், பாங்க் அக்கவுண்ட், ரேசன் கார்ட், பான் கார்ட், வோட்டர் ஐடி, கேஸ் கனெக்சன் (இதில் இனிஷியல்கூட இல்லை).

எதிலுமே எனது முழுபெயரான SANKAR GURUSAMY  என்பது இல்லை.

இப்போது எனக்கு எப்படி என் பாஸ்போர்ட் புதுப்பிப்பது என்று புரியவில்லை.  இதற்காக புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமா என்றும் ஒரே குழப்பமாக உள்ளது.

உளைச்சல் :

மிக சாதாரண சம்பவங்களாக இருந்தாலும் இந்த இரண்டு சம்பவங்களிலும் என் மனம் மிகவும் உளைச்சல் அடைந்துவிட்டது. நேற்று முழுவதும் மிகவும் அப்செட். ஒரே படபடப்பாக இருந்தது. சற்று பயமாகவும் இருந்தது - ”எப்படி பாஸ்போர்ட் புதுப்பிக்கப்போகிறோம்” என்று. ஆனாலும் சற்று பொறுமையாக சிந்தித்து இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தெளிவு இப்போது இருக்கிறது. பார்க்கலாம்.


அகங்காரம்  :

இது எந்த வகை அகங்காரம் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதற்கில்லை என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. உணர்வுகளின் வெளிப்பாடு மனதையும் உடலையும் பாதிக்கிறது. ஆனால் நான் இது எதோ ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதை பூரணமாக உணர்கிறேன். அந்த விழிப்புணர்வும் இருந்தது / இருக்கிறது.  ஆனாலும் என்னால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

நம் தவறு என்பது இல்லாமல் நாம் பாதிக்கப்படும்பொழுது ஏற்படும் இந்த உணர்வு எப்படி அகங்காரமாகும் என்ற ஒரு குதர்க்கமான கேள்வி இங்கு எழுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.  கடவுள்தான் இதில் தீர்ப்பு சொல்லணும்.


கடவுளே மஹாலிங்கம், இதில் ஒரு தெளிவையும் தீர்வையும் நீங்கதான் தரணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!