கடந்த சில நாட்களாக இங்கு கல்கத்தாவில் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை மின்சாரம் இருப்பதில்லை.. ஆனால் தொடர்ந்து நிறுத்தாமல் 2 மணி நேரம் வரை 3 அல்லது 4 முறை ஒவ்வொரு நாளும் நிறுத்துகிறார்கள். வீட்டில் யூபிஎஸ் இருப்பதால் ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது...
இந்த நிலை நாடுமுழுதும் பரவலாகவே இருப்பதாக தெரிகிறது. இது பற்றி கடந்த சில நாட்களாக செய்திகளிலும் அடிபட்ட வண்ணம் இருக்கிறது. நம் நாட்டில் இருக்கும் பல அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மிகக் குறைவாக இருப்பதாகவும் அதற்கு கீழ்க்கண்ட காரணங்களை பட்டியலிட்டும் இருக்கிறார்கள் :
1) நிலக்கரி வரத்து மிகவும் குறைந்துவிட்டது. சில அனல் மின் நிலையங்களில் 2-3 நாட்களுக்குதான் இருப்பு இருக்கிறதாம். எப்போதும் 2-3 வாரங்களுக்கான நிலக்கரி இருப்பில் இருக்க வேண்டும்.
2) தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தத்தால் உண்டான உற்பத்தி குறைபாடு.
3) நிலக்கரி எடுக்கும் இடங்களில் பரவலாக பெய்த மழை. இது நிலக்கரி எடுப்பதையும் அதை கொண்டுசெல்வதையும் அதிகமாக பாதித்துள்ளதாக தெரிகிறது.
4) புதிய நிலக்கரி சுரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் ஏற்படும் காலதாமதத்தினாலும் அதன் சம்பந்தமான புதிய சட்டங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கவில்லை. இதனால் நிலக்கரி உற்பத்தி அளவு 2009 இருந்த அளவிலேயே இன்னும் இருக்கிறது.
5) யூனியன் பிரச்சினைகளால் உற்பத்தி அதிகரிக்க முடியாமல் போனதாம்.
6) பல மாநில மின்சார வாரியங்கள் நிலக்கரி வாங்கியதற்கு பலகோடி பாக்கி வைத்துள்ளார்களாம். இங்கு மேற்கு வங்கத்தில் இது கிட்டத்தட்ட ரூ300 கோடி அளவில் பாக்கி இருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு தீர்வாக மின் கட்டணத்தை அதிகரிப்பதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ 4-25 க்கு தருகிறார்கள். இதை ரூ 6 ஆக ஏற்ற பரிசீலனையில் இருப்பதாக கேள்வி.
இப்போதைக்கு நிலைமையை சரிக்கட்ட கீழ்க்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன :
1) முதலில் தேவையான அளவு நிலக்கரியை உடனடியாக அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஊழல்களுக்கு வழிவகுக்கும் என எனக்குப் படுகிறது. முடிந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இந்த இறக்குமதி நடந்தால் சந்தோசப்படுவேன்.
2) இன்றைய செய்தியில் நம் நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் சுரங்கங்களை எடுத்துக்கொள்ள இருக்கும் புதிய வழிமுறைகள்பற்றி அரசாங்க அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
3) நம் நாட்டிலேயே இருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை உடனடியாக அனல் மின்நிலையங்களுக்கு எடுத்துச்செல்ல ஆவன செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதான் உடனடியாக நம்மவர்கள் செய்ய வேண்டியது. இதை செய்தால்தான் மின் உற்பத்தி தங்குதடை இன்றி நடைபெற வழி செய்ய முடியும்.
4) கோல் இந்தியா லிமிடெட் என்ற நமது இந்திய நிலக்கரி கழகம் ஒவ்வொரு ஆண்டும் தனது உற்பத்தியில் 10% அளவிற்கு வெளிச்சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி அதையும் நமது அனல் மின் நிலையங்களுக்கே கொடுக்க (விற்க) உத்தரவிடப்பட்டுள்ளது. விலையில் இருக்கும் வித்தியாசத்தினால் இந்த நிறுவனத்துக்கு சுமார் ரூ4000 கோடி அளவுக்கு இந்த ஆண்டு இதனால் இழப்பு ஏற்படும் என்றும் கணிக்கப்படுகிறது.
எனக்கு என்னவோ இது அரசாங்கம் அனல் புனல் நிலையங்களை முடக்கி அணு மின் நிலையங்களை முன்னிறுத்துவதற்காக வேண்டுமென்றே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக இருக்கிறது.
மேலும் மின் கட்டணங்களை வகைதொகை இல்லாமல் உயர்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வார்களோ என்ற பயமும் இருக்கிறது.
ஏற்கனவே விண்ணில் பறக்கும் விலைவாசியால் நசுங்கிப்போய் இருக்கும் சாமானியனுக்கு நம் அரசாங்கம் மேலும் சில விலையேற்றங்களையும் சில அணு மின் நிலையங்களையும் இந்த மின் பற்றாக்குறையை சாக்கு வைத்து பரிசாக அளிக்கப் போவது மட்டும் உறுதி.
அந்த மஹாலிங்கம்தான் நம்மளைக் காப்பாத்தணும்...
சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....