Thursday, November 10, 2011

கூடங்குளமும் -அரசாங்கத்தின் செய்தியும்....(கற்பனை)

இன்றைய நாட்டு நடப்புகளைப் பார்க்கும்போது, முக்கியமாக கூடங்குளம் அணு உலை சம்பந்தமான செய்திகளைப்படிக்கும் போது எனக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி எழுதிய ”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” என்ற பதிவு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என தெரிகிறது.. அதை மீண்டும் மீள் பதிவு செய்கிறேன்.

”அரசாங்கதிடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி” (கற்பனை)


என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

6 comments:

Sankar Gurusamy said...

செய்திகள் / சுட்டிகள் :

கூடங்குளம் அணு எதிர்ப்பாளர்கள் மீது 66 வழக்குகள் : தேசிய பாதுகாப்பு சட்டம் தயாராகிறது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=345802

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கூடங்குளம் அணுமின் உலை : முப்படையும் மும்முரம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=345798

shanmugavel said...

ஆமாம்.எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாக இருக்கிறது.சங்கடமான விஷயம்.பகிர்வுக்கு நன்றி.

Karthikeyan Rajendran said...

வாழ்த்துக்கள்

http://sparkkarthikovai.blogspot.com/2011/11/002.html#comments

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திரு ஸ்பார்க் கார்த்தி, தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

கூடன்குளத்தைப் பொறுத்தவரை அதனை சாதரான விபத்துகளுடன் ஒப்பிட்டுப் பேசும் நம் மக்கள் இருக்கிறவரைக்கும் எதைவேண்டுமானாலும் தலையில் கட்டுவார்கள்...

Sankar Gurusamy said...

திரு கே ஆர் பி செந்தில், உண்மைதான்...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..