Monday, August 29, 2011

திரு அன்னா ஹசாரே போராட்டத்தால் விளைந்த நன்மைகள்...

ஒரு வழியாக திரு அன்னா ஹசாரே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். இந்த போராட்டத்தினால் ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் வரப்போகின்றது. இந்த விசயத்தைத் தவிர இதனால் மேலும் சில நன்மைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது... அது பற்றி....


1) முதலில் ஜனநாயகத்தை விட்டு, ஓட்டுகூட போடாமல் விலகி இருந்த இளைய சமுதாயத்தினரின் ஒரு பகுதியினரை வீதிக்கு வரவழைத்தது...

2) ஜனநாயகத்தில் இனி இளைய சமூகமும் ஓரளவுக்கு பங்குபெறும் என்ற நம்பிக்கையை என்போன்ற சில சமூக கவலை இருப்போரிடம் ஏற்படுத்தியது.

3) நம் குரலுக்கும் நம் ஜனநாயகத்தில் இனி மதிப்பிருக்கும் என்ற ஒரு கருத்தை இளைய தலைமுறைக்கு கொடுத்தது...

4) போராட்டம் என்றால் ஏதோ பெரிய தியாகம் என்ற மனப்பான்மையை மாற்றி, ஓய்வு நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் போனாலே நம் எதிர்ப்பை காட்டும் போராட்டமாக்கலாம் என் ஒரு புது வழியைக் காட்டியது.

5) ஒரு கார்பரேட் ஈவண்ட் போன்ற போராட்டங்களும் நடத்த முடியும் என காட்டியது..

6) பொது மக்களின் குரலையும் பாராளுமன்றம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியது(?????)

7)  பாராளுமன்றத்துக்கு ஊழலை ஒழிக்கும் உத்தேசமே இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது..

8) எனவே நம் போராட்டம் இன்னும் பெரிதாக  இன்னும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.



அந்த மஹாலிங்கம்தான் இந்த போராட்டங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் வர அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Saturday, August 20, 2011

லஞ்ச ஊழல் ஒழிப்பு.. எவ்வாறு சாத்தியம்..

இப்போது திரு அன்னா ஹசாரே ஜன் லோக்பால் வர உண்ணா விரதம் இருக்கிறார். என்னைப் போல் நிறைய பேர், இந்த சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, லஞ்ச  ஊழல் விவகாரத்தில் தம் எதிர்ப்பை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து ஆதரிக்க வைத்துவிட்டார்கள்.

இன்று லஞ்சமும் ஊழலும் நீக்கமற நம் தேசம் முழுதும் உள்ள அரசு எந்திரங்களில் இருக்கிறது. இதை ஒரு சட்டத்தின் மூலம் ஒழிக்க முடியும் எனில் இந்த அளவுக்கு லஞ்ச ஊழல் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் ஊழல் ஒழிப்பு என்பது எப்படி சாத்தியப்படும்? குறைந்த பட்சம் மக்களை நேரடியாக பாதிக்கும் கீழ்மட்ட லஞ்ச ஊழலை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?  என் சிந்தனையின் பல நாள் கனவு....

ஒரு பெரிய பூசணிக்காயை எப்போதும் முழுமையாக அப்படியே சாப்பிட முடியாது.. ஆனால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சமைத்தால் சுலபமாக சாப்பிடலாம்.

இதுபோலவே, லஞ்ச ஊழல் ஒழிப்பும் நம் தேசத்தில் இருக்கும் ஒரு கோடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சிறுது சிறிதாக நாடு முழுவதும் பரவ வேண்டும்.

1) முதலில் ஒரு சில சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற தொகுதிகளில் சில நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏரியா கவுன்சிலரில் இருந்து பாராளுமன்ற  உறுப்பினர் வரை. இதை செய்வது கடினம் என்றாலும் குறைந்தது 2-3 தொகுதிகளிலாவது நம் பிரபல சமூக ஆர்வலர்கள் தேர்தல் நேரத்தில் கவனம் செலுத்தி பிரச்சாரம் செய்தால் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

2) அவர்களுக்கு உதவ முழு நேரப்பணியாளர்களாக ஒரு ஊழல் ஒழிப்பு படை ஏற்படுத்தப்பட வேண்டும். இது முடிந்த அளவுக்கு நேர்மையும் சமூக ஆர்வமும் இருப்பவர்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சமூக அர்ப்பணிப்பு உள்ள இளைஞர்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.  மேலும் ஒவ்வொரு குடியிருப்பிலும் இருக்கும் வட்டார நல சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கு செயல் பொறுப்பில் நேர்மையானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படையாக செயல் பட வேண்டும்.

3) இவர்களில் தேவையானவர்களுக்கு சம்பளம் அந்த அந்தப் பகுதிகளில் இருக்கும் வியாபார, தொழில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

4) இவர்களின் முழு நேரப் பணி, லஞ்சம் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்  நடைபெறும் இடங்களில் கண் காணிப்பு செய்வது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவாக உதவியாக செயல்படுவது. உதாரணம் - தாலுகா அலுவலகங்கள், வணிக வரி அலுவலகங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்கள், காவல் நிலையங்கள், வட்டார வழங்கல் அலுவலகங்கள், நியாய விலை கடைகள், கூட்டுறவு கொள்முதல் நிலையங்கள், வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் மற்றும் பல அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்கள். 

5)  இங்கு நடைபெறும் பணிகளில் ஏற்படும் தொய்வுகளுக்கு இந்த மக்கள் படையினர் நேரடியாக தலையிட்டு சமாதான முறையில் நேர்மையான பணி நடைபெற ஏற்பாடு செய்யலாம். முடியாத பட்சத்தில், அந்த ஏரியாவில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான மக்கள் பிரதிநிதியை அழைத்து அவர் மூலம் தீர்வு காணலாம். தேவைப்பட்டால் மேலும் ஊழல் ஒழிப்பு படையினரைத்திரட்டி ஒரு போராட்டம் செய்யலாம்.

6) ஒவ்வொரு மாதமும் இந்த படையினர் சிறு சிறு குழுக்களாக சந்தித்து தாங்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கலாம். இதில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யலாம். இந்த கலந்துரையாடலில் லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரியும், சட்ட ஒழுங்கு காவல் உயர் அதிகாரியும் கலந்துகொண்டு அவர்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்.

7) பொது மக்கள் அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஏற்படும் தாமதங்களுக்கு இந்த படையினரை அணுகி புகார் செய்யலாம். இந்த படையினர் சம்பந்தப்பட்ட துறையினருடன் அது பற்றி மேல் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

8) இந்த நடைமுறையில் பிடிபடும் லஞ்ச ஊழல் அதிகாரிகளுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்.

9) இந்த நடைமுறையில் தவறு செய்ய முற்படும் பொது மக்களுக்கும் கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களும் ஓரளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள முன்வருவார்கள்.

10) உள்ளூர் கட்டுப்பாடுகள் சில நிறைவேற்றி அதை முழுமையாக அனைவரும் கடைபிடிக்க செய்ய வேண்டும்.

11) மக்கள் நேர்மையையும் ஒழுங்கையும் வெளிப்படையாக காண்பிக்கும்போது தமக்குள் ஒரு நல்ல உணர்வு ஏற்பட்டு அது நம் சமூகத்தில் பிரதிபலிக்கும். (இதைத்தான் நம் முன்னோர் அந்த காலத்தில் ஊர்கட்டுப்பாடு என ஒரு கொள்கை வைத்திருந்தனர். ஆனால் அதன் நோக்கம் பிற்காலத்தில் சக மனிதனை நசுக்குவதில் சென்று முடிந்து விட்டது)

12) இந்த முறைகள் மூலம் அந்த ஒரு சில தொகுதிகளில் ஓரளவுக்கு மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

13) இதே தொகுதிகளில் மாற்றம் விரும்பும் பிற தொகுதியினரும் கலந்துகொண்டு பயிற்சி எடுத்து தமது தொகுதிகளில் செயல் படுத்த முற்பட வேண்டும்.

14) இந்த சங்கிலித்தொடர் நடவடிக்கை முதலில் ஒரு மாநிலத்திலும் பிறகு அணடை மாநிலங்களிலும் பிறகு தேசம் முழுவதும் பரவ ஒரு வாய்ப்பு இருக்கிறது.

15) இதற்கு குறைந்தது சில பத்தாண்டுகள் தேவைப்படும். ஒரு தலைமுறையில் நாம் சிரமப்பட்டு இதை செய்துவிட்டால் அடுத்து வரும் தலைமுறையினர் ஓரளவுக்கு இந்த லஞ்ச ஊழலில் இருந்து விடுபட ஒரு வாய்ப்பு வரும். எனக்கு நிச்சயம் இதில் நம்பிக்கை இருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம்.. லஞ்ச ஊழலை ஒழிப்போம்...


கடவுளே மஹாலிங்கம்... நீங்கதான் இந்த லஞ்ச ஊழல் அரக்கன் ஒழிந்து நம் தேசம் சுபிட்சமாக அருள் செய்யணும்..


சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி.... ஹர ஹர மஹாதேவா சரணம்....

Tuesday, August 16, 2011

அரசாங்கத்திடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி..

இன்று (16 ஆகஸ்ட் 2011) காலை திரு அன்னா ஹசாரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் திரு கிரண்பேடி, திரு அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அனுப்பும் மறைமுக செய்தியை இப்போது எழுத்தில் வடிக்கிறேன். இது நாட்டு நடப்பை உற்று கவனிக்கும் ஒரு சாமானியனின் பார்வையே :

என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

Wednesday, August 3, 2011

அன்னதானம்....

தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவனை போதும் என்று சொல்ல வைக்கக் கூடிய தானமும் இதுதான். ஒரு அளவுக்கு மேல் ஒரு சாதாரண மனிதனால் சாப்பிட முடியாது. 

மேலும் அன்னதானம்தான் மனிதனுக்குள் ஆன்மாவாக இருக்கும் கடவுளுக்கு படைக்கப்படும் படையல். உண்மையான மானுட சேவை. இதில் இருக்கும் ஆன்மீக சூட்சுமம் அளவிட முடியாதது. அன்னதானம் செய்வதாலும், அதில் கலந்துகொள்வதாலும், அதில் நமது பங்களிப்பை செலுத்துவதாலும் பலவித ஆன்மீக நன்மைகள் சூட்சுமமாக ஏற்படும்.

பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் இப்போது அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. எல்லாமே சிறப்புக்குறியதுதான் என்றாலும் நான் கண்டு வியந்த ஒரு சில அன்னதானங்களைப் பற்றிய பதிவு இது.

1) 2009ம் ஆண்டு எனது சீக்கிய நண்பர் ஒருவர் என்னை மஹாராஷ்ட்ராவில் உள்ள நாண்டெட் என்ற சீக்கியர்களின் புனித தலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருக்கும் குருத்துவாரக்களில் (சீக்கியர்களின் கோவில்) நடைபெறும் அன்னதானம் ஈடு இணையற்றது. வீட்டு சாப்பாட்டின் சுவையுடன் சுத்தமும் சுகாதாரமுமான சூழலில் மிகவும் அற்புதம். அங்கு சேவை செய்பவர்களின் கனிவான கவனிப்பும் அற்புதம். 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து அவர்கள் செய்யும் அன்னதானத்தில் நானும் கலந்துகொண்டு சாப்பிட்டு, சேவையில் ஈடு படுத்திக் கொண்டு மகிழ்ந்தேன்.

2) 2003ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வைத்து நடத்தி வரும் அன்னதானத்திற்கு அழைத்தார். பல ஆண்டுகளாக தொடர்ந்து செயல் பட்டு வரும் அன்னதானம் அது. நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தங்களால் முடிந்தவற்றை வைத்து, தாங்களே சமையல் செய்து அன்னதானம் அளித்தது அதிசயமாக இருந்தது. பிச்சைக்காரர்களும், வயதானவர்களும், குழந்தைகளும் அதிகம் கலந்து கொண்ட அந்த அன்னதானம் நண்பர்களின் கனிவான கவனிப்பாலும் அற்பணிப்பு உணர்வாலும் என் நினைவில் நின்று விட்டது.

3) சதுரகிரிக்கு நான் செல்லும்போதெல்லாம் அங்கு உள்ள கஞ்சி மடத்தில் நடைபெறும் அன்னதானத்தில்தான் சாப்பிடுவேன். அங்கு இருப்பவர்கள் வருபவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் உணவு வழங்கும் அவர்களின் சேவை உணர்வு பாராட்டுக்கு உரியது.

இவை தவிரவும் பல இடங்களில் நான் அன்ன தானத்தில் கலந்துகொண்டிருந்தாலும், இவை மூன்றும் அன்னதானத்துக்கு உதாரணமாக என்னால் கருதப்படுபவை. எனவே பகிர்ந்துள்ளேன்.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகில் அன்னதானம் நிறைய நடைபெற்று ஒரு பசி இல்லாத உலகம் உருவாக அருள் செய்யுங்க...

சதுரகிரி நாதனே சரணம்....சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Monday, August 1, 2011

திருடர்களின் சொர்க்க பூமி

இன்று Times of India வெப் சைட்டில் இருந்த ஒரு செய்தி : ஆஸ்திரேலியாவில் ஒரு ரேடியோ விருந்தினர் இந்தியாவைப்பற்றியும் கங்கையைப் பற்றியும் அவதூறாகப் பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு, கண்டனம் தெரிவிக்கும் ஒரு செய்திதான் அது. அதன் சுட்டி கீழே :

Australian radio host calls India 'shit hole', Ganga a 'junkyard'


உண்மையில் ஒரு வெளிநாட்டவர் செய்ததை ஒரு தேசப்பற்று (????) உணர்வுடன் நானும் கண்டிக்கும் அதேவேளையில் இது பற்றி ஒரு நேர்மையான கேள்வியை வைக்கவும் வேண்டி இருக்கிறது...

இது பொய்யா? உண்மையா? நம் தேசம் உண்மையில் திருடர்களின் சொர்க்கம். என்ன ஒன்று சாதா திருடர்களுக்குத்தான் போலீஸ் தண்டனை கிடைக்கும். பெரிய திருடர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு எல்லாமே கிடைக்கும். என்ன ஒன்று??? அவர்களையும் இந்த திருட்டில் பங்கு கொள்ள வைக்க வேண்டும். அவ்வளவுதான். இதற்கு பல உதாரணங்கள் .

1) பங்கு மார்கெட்டில் தில்லு முல்லு செய்யும் புத்திசாலி தரகர்கள் - ஹர்சத் மேத்தா போன்றோர்

2) போலி பத்திரம் தயாரித்து அதை உண்மையானதுபோல MBA பட்டதாரிகளைக் கொண்டு பெரிய கம்பெனிகளுக்கு மார்க்கெட்டிங்க் செய்தவர்கள் - தெல்கி

3) அரசியல் தொழிலில் ஊழல் செய்பவர்களுக்கு பினாமிகளாக இருப்பவர்கள் - ஹசன் அலி

4) ஊழல் அரசியல் தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் - உதாரணம் தேவை இல்லை என்று நினைக்கிறேன்

5) அரசியல் தொழில் செய்பவர்களுடைய ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கும் பெரிய அதிகாரிகள்.

6) திடீரென்று பணக்காரர்களாகும் கணக்குக் காட்ட தேவை இல்லாத கட்சிக்காரர்கள்

7) விஷம் போல உயரும் விலைவாசிக்குக் காரணமாக இருக்கும் பதுக்கல்காரர்கள்

8) கங்கையை மாசு படுத்தும் குவாரி முதலாளிகள் - (இவர்கள் பற்றி முழுமையாக தெரிந்தும் இவர்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட சுவாமி நிகமானந்த் பரிதாபத்துக்குறியவர்)

9) கங்கையில் கலக்கும் பல மாசுக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளின் முதலாளிகள்.


உண்மையில் என்னால் முழுமையாக பட்டியல் இட முடியவில்லை. 

இவர்களில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?? பிடி படுபதே சாதனையாக இருக்கும்போது, தண்டனை தருவது என்பது குதிரைக் கொம்புதான்.

இப்படிப்பட்ட சூழலில் திருடர்களின் சொர்க்க பூமியாக திகழும் பாரதத்தில் கங்கையும் உண்மையில் சாக்கடையாக மாறத்தொடங்கிவிட்டது.

இப்போது நெஞ்சைத்தொட்டு சொல்லுங்கள்அவர் சொன்னது உண்மையா அல்லது பொய்யா??? எனக்கு சத்தம்போட்டு சொல்ல கொஞ்சம் கூச்சமாகத்தான் இருக்கிறது...


கடவுளே மஹாலிங்கம் நீங்கதான் என் தேசத்தைக் காப்பாத்தணும்..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...