கனவுகள்.. மூன்று வகை - முதல்வகை இது ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கனவு.. இரண்டாவது வகை நாம் தூங்கும்போது காண்பது.. மூன்றாம் வகை, நம் கற்பனையில் கண்ணை விழித்துக்கொண்டே ஆசைப்படுவது.
லட்சிய கனவு :
அய்யா திரு அப்துல்கலாம் அவர்கள் நம் தேசத்து இளைஞர்களை காணச் சொன்னதுதான் இந்த லட்சிய கனவு. நம் வாழ்வின் லட்சியங்கள் தெளிவாக இருந்தால்தான் வாழ்வின் போக்கும் அது நோக்கி தெளிவாக நகரும்.
நாம் எதுவாக ஆகவேண்டும் என ஆழமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதால் இந்த லட்சியகனவு ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த கனவுகள் ஒவ்வொருவரையும் அதை அடைய தூண்டி செயல்பட வைக்கும். செயல்பட ஆரம்பிப்பதுதான் லட்சியங்களை அடைய முதல்படி.
துக்கத்தில் காணும் கனவு :
இது நம் மூளை நம் உடல் ஓய்வு எடுக்கும் போது தூக்கத்தில் நமக்கு காண்பிக்கும் ஒரு காட்சி. பல நேரங்களில் நம் உடலில் ஏற்படும் அசதிகளை வெளியேற்ற நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன நிகழ்வுகளின் விளைவே இந்த கனவு.
சிலருக்கு கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை. எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் தூக்கத்தினுள் சொல்ல முற்படும்போதோ அல்லது தூக்கத்திலிருந்து வெளியேறும் நேரத்திலோ வரும் கனவுகள்தான் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் இருக்கும் என கூறுகிறார்கள்.
சிலருக்கு கனவுகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவது பற்றிய விசயங்கள் வருவதுண்டு. சிலருக்கு கனவுகள் வழிகாட்டியாக செயல்படுவதும் உண்டு. நம் மூளையின் சில அற்புதங்களில் இதுவும் ஒன்று.
கனவுகளுக்கு பலன்கள் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் அவற்றை நம்ப முடியும் என்பது சர்ச்சைக்குரியதுதான். சும்மா ஒரு சுவாராசியத்துக்காக அது பற்றியும் நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்துக்கொள்ளலாம்.
சிலர் கனவுகளைப் பற்றி பயம் கொண்டிருப்பார்கள். அந்த பயமே அவர்களை பல நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். எனவே கனவுகளை நினைத்து பயப்படாமல் அதையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.
பகல் கனவு :
அதாவது விழித்திருக்கும்போதே நம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு யோசித்துக் கொண்டே இருப்பது. இதனால் நம் உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் நம் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி நம்மை கற்பனை உலகில் முடக்கி விடும்.
உண்மையில் மிகவும் ஆபத்தானது இந்த பகல் கனவு. இதனால் பெரிய பலன் ஏதும் இல்லை. மற்றபடி இது கால விரயமே. இந்த மாதிரி கற்பனையில் மனதை அலைபாய விடாமல் நிதர்சனத்தை நேரில் சந்தித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் சிறப்பு.
கடவுளே மஹாலிங்கம், எல்லோரும் பகல் கனவு காண்பதை விடுத்து, சிறந்த லட்சியங்களை உருவாக்கி அது நோக்கி பயணம் செய்ய தூக்கத்தில் கூட வழி ஏற்பட அருள் செய்யுங்க..
சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..