Monday, January 31, 2011

தீவிரவாதம் - ஒரு பார்வை

எது தீவிரவாதம்? இன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தீவிரவாதிகள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால்  தாம் நம்பும் ஒரு விசயத்தை எல்லோரும் நம்பவேண்டும் அல்லது அதுபடியே நடக்கவேண்டும் என்று தீவிரமாக இருப்பதே ஒரு தீவிரவாதம்தான். அவ்வாறு இருப்பவர்கள் அனைவருமே தீவிரவாதிகளே.

சிலர் ஒருவித ஆதர்ச லட்சியத்துக்காகவும் அதை அடைவதற்காகவும் தீவிரமாக முயற்சி செய்யும்போது வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதும் இதற்குக் காரணமாகிறது.

தீவிரவாதத்தின் விதையாகவும் வேராகவும் அடிநாதமாகவும் இருப்பது இந்த அதிதீவிர மனநிலைதான். ஒருவர் மனநிலையில் இவ்வாறு இருக்கும் போது வன்முறைக்கு செல்வதில்லை. ஒருவர் இருவராகி, இருவர் சிலராகி அவர்களும்  சமூகத்தில் அடிபட்டவர்களாக இருக்கும் போதுதான் வன்முறை எண்ணங்கள் வருகின்றன.

வன்முறை எண்ணங்கள் வரும்போதே அதை செயலாக்க ஆட்களைச் சேர்க்கத் துவங்குகிறார்கள். வறுமையிலும் சமூகக் கோபத்திலும் இருப்பவர்கள் சுலபமாக இவர்களிடம் பலியாகிவிடுகிறார்கள். வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவர்கள் அடுத்த இலக்கு. பணத்துக்காகவும், பதவிக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குபவர்களும் இதில் இரை ஆகிறார்கள்.


ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றன?

1) குடும்ப சூழல், வளர்ப்புமுறை, கல்வி, இவை சரியாக இல்லாதபோது இப்படிப்பட்ட எண்ணங்கள் அதிகம் வருகின்றன. வறுமையும்,  பாதிக்கப் பட்ட குழந்தைப்பருவமும், பெற்றோரின், ஆசிரியர்களின்  அலட்சியமும் இதை மிகவும் அதிகப் படுத்துகின்றன.

2) நட்பும், சமூக சூழலும் சரியாக அமையாதபோதும் இந்த எண்ணங்கள் வரும். தவறானவர்களின் சேர்க்கை, குற்றப்பின்னணி உள்ள சமூகத்தில் வளர்தல், சமூக அவலங்களின் (தீண்டாமை, அடிமைத்தனம்) நேரடி அனுபவம்.

3) சரியான அரசியல் சூழல் இல்லாதது அல்லது இல்லாததாக நினைத்துக் கொள்வது.

4) தவறானவர்களை வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்வது

5) ஊடகங்களின் வன்முறைத்தாக்கம் - சினிமா, தொலைக்காட்சி,  பத்திரிக்கைகள்

6) ஒரு மிகப்பெரிய லட்சிய விசயத்தை தானேசெய்து முடிக்கவேண்டும் என்ற தீவிரமான உத்வேகம்

7) சரியான வேலை (employment)  இல்லாத சூழல். சோம்பலை அதிகப் படுத்தி, சிந்தனையைச் சிதறடிக்கும்.

8) மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுதல். சரியான மறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாத நிலை.

8) தவறிய மனநிலை - மன நோய்.


என்ன செய்யலாம்?

தீவிரவாதத்தைக் குறைப்பதில் குடும்பத்தின் பங்கும், சமூகத்தின் பங்கும் மிக அதிகம். சரியான குடும்ப சூழலும் சமூக சூழலும் ஏற்படுத்தினால் வருங்காலத்தில் தீவிரவாதிகள் உருவாவதைக் குறைக்கலாம்.

ஊடகங்களின் வன்முறை, சமூக ஒழுக்கத் தாக்குதல்களை நிறுத்தவேண்டும்.

சரியான அரசாங்கமும் அதிகாரிகளும் அமைந்து, அமைதியான, சமத்துவமான  சூழல் ஏற்பட வேண்டும். நாட்டின் அனைத்துப்பகுதிகளுக்கும் சிறந்த சாலை, உள்கட்டுமான வசதி, கல்வி, மருத்துவ வசதிகள் செய்துதரப்படவேண்டும்.

மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.

வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஒழிக்கப்படவேண்டும். அனைவரின் மனித உழைப்பும் உபயோகப்படுத்தும்படி திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். நாட்டின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும்.

யோகாவும் தியானமும் அனைவருக்கும் கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு முழுமையடைந்த வாழ்க்கை நிலையை அடைய அனைவருக்கும் இது வழி செய்யும்.


இருக்கும் தீவிரவாதிகளை என்ன செய்யலாம்?

அனைத்துத் தீவிரவாதிகளுக்கும், யோகா, தியானம் கற்றுக் கொடுத்து அவர்களைத் திருத்த வழி செய்ய வேண்டும்.

மனநல மருத்துவம் அனைத்து தீவிரவாதிகளுக்கும் செய்யப்படவேண்டும்.

அவர்கள் தீவிரவாதிகள் ஆன காரணங்கள் ஆராயப்பட்டு, அவை சரியாக இருக்கும் பட்சத்தில்,  அதற்கான தீர்வுகள் செய்யப்படவேண்டும்.

அவர்கள் திருந்திவாழ மறுவாழ்வுத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.


யோசிக்க யோசிக்க நல்லாவே இருக்கு... ஆனா நடைமுறையில் செயல் படணுமே.... அதுக்கு ஆண்டவன் அனுக்கிரகம் ரொம்பவே தேவை.

ஆண்டவா ஏதாவது செய்யுங்க!! சுந்தரமஹாலிங்கமே சரணம்!!! சதுரகிரியாரே போற்றி!!!

கால் சென்டர் - ஒவ்வொரு தொகுதிக்கும்....

நம் நாட்டில் எது எதுக்கெல்லாமோ கால் சென்டர் வைத்து டோல் ஃபிரி நம்பர் குடுத்து சேவை தருகிறார்கள். ஏன் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு டோல் ஃபிரி நம்பர் கொடுத்து அரசு அதிகாரிகள் சேவை செய்யக்கூடாது??? இது பற்றிய எனது சிந்தனைகள்...

100,101,102,103.... இப்பிடி வரிசையா மக்களுக்கு சேவை செய்யும் துறைகளைத் தொடர்பு கொள்ள போன் நம்பர்கள் தருகிறார்கள். ஆனால் நமது நாட்டில் பொதுவாக மக்களுக்கு அதிக தொடர்புடைய துறைகளுக்கும் இந்த வசதி விரிவு படுத்தப்படவேண்டும். முடிந்தால் அனைத்து அரசு சேவைகளும் ஒரே எண்ணில் கிடைக்கச்செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நம் ஏரியாவில் மின் இணைப்பு சரியில்லை, தண்ணீர் வரவில்லை, சாக்கடைத் தேக்கம், ரேசனில் பொருள் கிடைக்கவில்லை (அல்லது எப்போது கிடைக்கும் என்ற விவரம்) மற்றும் இதுபோன்ற உள்ளாட்சி சம்பந்தப்பட்ட குறைகளுக்கு ஒரு டோல் ஃப்ரீ நம்பர் தந்து தகவல் தர அல்லது யாரைத் தொடர்பு கொள்ளலாம் (அவர்களின் போன்நம்பர், முகவரி உட்பட)  என்ற விவரம் பெற இந்த சேவை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

 இதற்கான தேவை இப்போது இருக்கிறது. இதை அந்தந்தத் தொகுதியின் வார்டு கவுன்சிலரோ, தொகுதி சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினரோ இதை செய்ய முன் வரவேண்டும். ஏன் தொகுதியின் குறை நிறைகளைத் தெரிந்து கொள்ளவும், வளர்ச்சிப்பணிகளில் ஏற்படும் தொய்வு, குறைகளைத் தெரிந்து களையவும் இது பயன்படும்.

முடிந்தால், ஆர்வமுள்ள,  ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், காவலர்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு ஒரு சில கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து,  வரும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் / குறைகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கலாம்.

இதற்கு ஆகும் செலவை, சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியில் இருந்து அளிக்கலாம். (முடியுமா என்று தெரியவில்லை)...


யோசிக்க நல்லாத்தான் இருக்கு.. ஆனா செய்வாங்களான்னு தெரியல...

கடவுளே!!! இப்பிடி நல்ல விசயங்கள் நடக்க நீங்கதான் ஆவன செய்யணும்.

ஓம் நம சிவாய!!! சதுரகிரியாரே போற்றி!!!!!

Thursday, January 27, 2011

நேர்மையின் மரணம்....

கடந்த 25ம் தேதியில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியை சமூக விரோதிகள் பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து நெருப்பிட்டுக் கொளுத்திக் கொன்றிருக்கிறார்கள்.  நமது சமூகத்தில் நேர்மையாக நடப்பதனால் சந்திக்க விழையும் சில பரிதாபமான நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக ஆகிவிட்டது. இது தவிர, பணியில் தேவையற்ற அலைக்களிப்பு, தேவை இல்லாத பணிமாற்றம், பணி இடைநீக்கம்,  ஆசிட் வீச்சு, குடும்பத்தினருக்குத் தொல்லை, தாக்குதல் இப்படி பலவும் அடக்கம்.  

நேர்மையாகப் பணி செய்வது அவ்வளவு பெரிய குற்றமா?? ஏன் இப்படி ஆகிவிட்டது? என்ன செய்யலாம்? இதுபற்றிய எனது சிந்தனைகள்....

ஏன் இப்படி ஆனது ?

இதற்கு முதல் காரணம் குற்றச்செயல்கள் நடைபெறும்போது ஆரம்பத்திலேயே தடுக்காதது. முளையிலேயே கிள்ளி எரியாமல் விட்டது.. தும்பைவிட்டு வாலைப் பிடித்த கதையாய்ப் போய்விட்டது. இப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை முதலில் சாதாரணமான தவறுகள்   செய்யும்போதே சரியானபடி தண்டிக்காமல், அவர்களை வளரவிட்டுவிட்டு, இப்போது அவர்கள் சமூக, பண, அரசியல் செல்வாக்கோடு திகழும்போது ஒன்றும் செய்யமுடிவதில்லை.

அரசு நிர்வாகத்தில் இருக்கும் அவலமான நிலை

நிர்வாணமானவர்கள் இருக்கும் ஊரில், கோவணம் கட்டுபவன் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள். அரசு எந்திரத்தில் இப்போது அங்கங்கே ஆயில் போட்டால்தான் ஆகவேண்டிய காரியங்களே ஆகும் நிலையிருக்கிறது. அதுவும் காசுக்காக எதுவும் செய்யும் அரசும், ஊழியர்களும் பெருகிவரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அரசுப் பணிகளில் சேர, தேர்தல்களில் போட்டியிட, வெற்றிபெற திறமையைவிட பணமே பிரதானமாக ஆகிவிட்டது. ஆகவே, கிடைக்கும் பதவியை வைத்து, செலவிட்ட பணத்தை எவ்வளவு விரைவில் எடுத்து மேலும் லாபம் பார்க்கவேண்டிய நிலைக்கு பெரும்பாலானோர் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேர்மையானவர்கள் இருப்பதே அபூர்வமாகிவிட்டது.அப்படியும் நேர்மையாய் இருப்பவர்களுக்கு இச்சமூகம் "பொழக்கத்தெரியாதவன்(ர்)" என்ற பட்டப் பெயர் கொடுக்கிறது. இந்தச் சமூக சூழலில் நேர்மை என்பது சொல்லப்பட மட்டுமே கூடிய, செயல்படுத்தப்படக் கூடாத ஒன்றாக ஆகிவிட்டது.

தாமதப்படுத்தப்படும் தண்டனைகள்

நமது நாட்டில் எந்தக் குற்றத்திற்கும் தண்டனை கிடைக்க ஏற்படும் காலதாமதம் குற்றம் செய்வதை ஊக்குவிக்கிறது. எப்படியும் தப்பிவிடலாம் என்ற மனப்பான்மை வந்துவிட்டது.

தேவைகள் பெருகிப் போனது

இன்றய "Consumerism" சூழலில் விளம்பரங்களினாலும், சமூக அழுத்தத்தினாலும், தேவைகள் பெருகிப் போனது. தேவைக்காக பொருள் வாங்கியது போய், விளம்பரங்களுக்காக வாங்கவேண்டிய அழுத்தம் வந்தது.


என்ன செய்யலாம் ?

முதலில் நேர்மையான அதிகாரிகளுக்கு பணிப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும்,  சட்டப் பாதுகாப்பும் தேவைப்படுகிறது.

இவர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது, மீடியாவில் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு அந்த பிரச்சினைகளிலிருந்து வெளிவர உதவிகள் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

சமூகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள், ஊழல் செய்பவர்கள் இவர்களை ஒதுக்கிவைக்கலாம். (இவர்களுக்குத்தான் யார் தயவும் தேவை இல்லையே... :-(   ). முக்கியமாக பள்ளி கல்லூரிகளில் தவறு செய்பவர்களின் குழந்தைகளிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படச்செய்யவேண்டும். இவர்களாலேயே இவர்களின் பெற்றோரைத் திருத்த முடியும். ஏனெனில் இவர்களுக்காக சொத்து சேர்ப்பதற்காகத்தானே த்வறுகள் செய்கிறார்கள்...

குற்றச்செயல்களுக்கு உடனடியான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.  லஞ்சம் ஊழல் இவற்றுக்கான தண்டனைகளும் கடுமையாக்கப்படவேண்டும். முக்கியமாக சிலராவது கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.  அப்போதுதான் தண்டனைகளுக்கான பயம் இருக்கும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடுகிறது..



யோசிக்க நல்லாத்தான் இருக்கு... நடக்கணுமே...

மஹாலிங்கமே சரணம்... ஏதாவது செஞ்சு இந்த நிலைய மாத்துங்க.. அரோஹரா...

Tuesday, January 25, 2011

மக்கள்தொகை பெருக்கமும்.. தேச வளர்ச்சியும்...

நமது மக்கள்தொகை சீனாவை வெகுவிரைவில் முந்திவிடும் போலத் தெரிகிறது. பாரதியார்காலத்தில்(1920) 30 கோடியாக இருந்த மக்கள்தொகை இப்போது (2011) 115 கோடியாக ஆகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நமது ஜனத்தொகை 2 கோடி அதிகரித்துவருகிறது. இது நமது தேச வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. சிறு / பெருநகரங்களில் வாழும் சில கோடி நபர்களைத்தவிர பிறருக்கு இது குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.  

இவ்வளவு வேகமாக வளரும் மக்கள்தொகையால் ஏற்படும் விளைவுகள் என்ன? ஏன் மக்கள்தொகை இவ்வளவு வேகமாக வளர்கிறது? இதன்  நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நன்மைகளை வளர்த்து தீமைகளைக் களைய என்ன செய்யலாம்? எனது சிந்தனைகள்....

ஏன்? :
ஒரு தம்பதியினர் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதும், பிறப்பு விகிதம் அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பதும், மக்களின் வாழ்நாள் அதிகரிப்பதும் காரணிகள்.

படித்த/படிக்காத   விழிப்புணர்வு உள்ளவர்களைவிட விழிப்புணர்வு இல்லாதவர்களாலேயே அதிகம் மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படுகிறது. இவ்வளவு மக்கள் தொகை பெருகினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறியாமை.  எனவே மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டும்.

மத சம்பந்தமான நம்பிக்கைகளும் மக்கள்தொகை பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. இதற்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், மத சம்பந்தமான தெளிவு ஊட்டலும் தேவை.

ஆண் குழந்தைகள் மீது இருக்கும் மோகம். ஒரு ஆண் குழந்தைக்காக பல பெண்களைப் பெற்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இதிலும் மோசமாக, சில பிறந்த பெண்குழந்தைகளைக் கொல்லும் கொடுமையும் இங்கு நடந்திருக்கிறது. இவ்வாறு ஆண்குழந்தைகளே பெற்றுக் கொண்டு இருந்தால் உலகத்தின் சமநிலை பாதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். இதற்கும் சரியான விழிப்புணர்வும், சமூக வழிகாட்டலும் அவசியம்.

வறுமையில் வருமானத்திற்காக அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளல். இதற்கும் சரியான விழிப்புணர்வும், சமூக வழிகாட்டலும் அவசியம்.


நன்மைகள் :
மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் நன்மைகள் என்ன?

முதல் நன்மை அதிகமான மனித சக்தி நம்மிடம் கிடைக்கிறது. ஒரு ஏழைக் குடும்பத்தில் 5 குழந்தைகள் இருந்தால் ஐவர் சம்பாத்தியம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. குடும்பம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது.

இதை பாதுகாப்புத்துறையிலும் மற்றும் மனித வளம் அதிகம் தேவைப்படுகின்ற துறைகளிலும் உபயோகப்படுத்தலாம்.

அதிக மனிதவளம் உள்ளதால் பல துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட சிறந்த மனிதவளத்தை உருவாக்கலாம். தடையற்ற ம்னிதவளம் பல தொழில்கள் சிறக்க தூண்டுகோலாக இருக்கும்.

அதிக மக்கள்தொகை உள்ள இடங்கள் பல பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. குறைந்த செலவில் நிறைய பொருட்கள் தயாரித்து விற்க ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

தீமைகள் / சவால்கள் :

1) மக்கள்தொகைக்குத் தகுந்தவாறு உணவு உற்பத்தியைப் பெருக்குதல். இது ஒரு பெரிய சவாலாக இப்போது ஆகிவிட்டது. விவசாயம் ஒரு வருமானமில்லாத சிறு தொழிலாக ஆகிவிட்டதால் பெரும்பாலான சிறு / குறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப் புறங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்ததும், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக ஆக்கிவருவதும் முக்கியக் காரணிகள்.

தீர்வு :
விவசாயத்தை மீட்டெடுக்கவும், விளச்சலைப் பெருக்கவும், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் உடனடி நடவடிக்கை தேவை. புதிய  பசுமைப் புரட்சி ஏற்பட வேண்டும்.

இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நம்மிடம் இருக்கும் வளமான நிலங்களையும், அபரிமிதமான மனித வளத்தையும் வைத்து இதை நாம் மிகவும் சிறப்பாக செய்ய முடியும். செய்தால் உலகிற்கே உணவு அளிக்கும் வகையில் நாம் வளர முடியும்.

இது பற்றிய முந்தய பதிவு :  விவசாயம் முன்னேற.... .


2) அனைவருக்கும் சிறந்த இருப்பிடம் அமைத்தல் :  
தனிவீடுகள் அதிகரித்த்தும், அடுக்குமாடி வீடுகள் குறைவாக இருப்பதுவுமே காரணம். நம்மிடம் இருக்கும் நிலத்தின் ஒவ்வொரு அடியையும் சரியாகப் பயன்படுத்தாததும் முக்கியகாரணம். பெரும்பாலான இடங்களில் சரியான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி சரியாக இல்லை. மானாவாரியாக விவசாய / தரிசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சிறு சிறு கட்டிடங்கள் கட்டிக்கொண்டே செல்வதும் ஒரு காரணம். இதனால் நகரங்கள் மிகவும் விரிவடைந்து பொதுமக்கள் போக்குவரத்தும் ஒரு பிரச்சினை ஆக ஆகிவிட்டது.

பல தனியார்கள் தேவையில்லாமல் நிலத்தில் முதலீடு என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தாமல் வைத்திருப்பதால், ஒரு பெரிய நில மதிப்பு உயர்விற்குக் காரணமாகவும் ஆகிவிட்டது. சாமானியர்கள் வீடு /  வீடுகட்டநிலம் வாங்க முடியாத நிலையும் ஆகிவிட்டது.

தீர்வு :
நில உச்ச வரம்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப் பட வேண்டும்.  பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு வரிவிதிக்கப்படவேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்படாத நிலங்களுக்கு ஒரு விலை கொடுத்து அரசாங்கம் வாங்கிகொள்ள ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

நகர்ப்புறங்களில் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவேண்டும்.   அனைவருக்கும் சிறப்பான குடிநீர் மற்றும் சாக்கடை வசதி செய்து தரப்படவேண்டும்.

இதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிகம் தேவை " Political Will" . ஓட்டு அரசியலை மறந்து மக்கள் நலனை சிந்தித்து செயல்படும் தலைவர்கள் தேவை.


3) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கல் :
இப்போது இருக்ககூடிய அரசுகள் குறுகிய நோக்கில் செயல்பட்டு வருவதால், பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. மனித வளம் அதிகம் தேவையான தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததும் ஒரு முக்கியக் காரணி.

இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து , சிறு / பெரு நகரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கினார்கள். இது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. நகரங்களில் போதுமான வசதிகள் இல்லாத நிலையில் இந்த இடப்பெயர்ச்சியும் சேர்ந்து கொள்ள இது ஒரு இடியாப்பச்சிக்கலாக நீடிக்கிறது.

தீர்வு :
அதிக மனித சக்தி தேவைப்படும் தொழில்களையும், உள்ளூர் வாசிகளை அதிகம் உபயோகப்படுத்தும் தொழில்களையும் ஊக்குவிக்கவேண்டும். NREG போன்று சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு சிறப்பாக  செயல்படுத்தப்படவேண்டும். இவற்றில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

தொழில் வளர்ச்சி நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களுக்கும் எட்டும்படி செய்ய வேண்டும். இது பற்றிய முந்தய பதிவு : கிராமங்களும்.. நகரமயமாக்கமும்...

4) சிறந்த தொழில் பயிற்சி நிலையங்கள் / கல்விக்கூடங்கள் அமைத்தல். 
மக்கள் தொகைப்பெருக்கத்தை நாம் உபயோகப்படுத்துவதற்கு இவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களை அதிக அளவில் ஏற்படுத்தக் கூடிய சிறந்த தொழில் பயிற்சி நிலையங்கள் / கல்விக்கூடங்கள் அதிக அளவில் இல்லை. இருக்கும் சில சிறந்த கல்விக்கூடங்களில் கற்பவர்களும் பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

நமக்குத் தேவையான அளவில் சிறந்த டாக்டர்களை / எஞ்சினீயர்களை ஏற்படுத்தக் கூடிய கல்விக்கூடங்கள் அறுகியே இருக்கின்றன. சிறந்த டெக்னிசியன்களை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிக் கூடங்களும் மிகக் குறைவே... இருக்கக் கூடிய சில சிறப்பு கல்வி / பயிற்சி நிலையங்களிலும் கட்டணம் மிக அதிகம்.

தீர்வு :
அதிகமான கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கல்விக்கட்டணங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துக் கல்விகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் சூழல் ஏற்படவேண்டும்.

அதிகமான சிறந்த ஆசிரியர்கள் உருவாக்கப்படவேண்டும். அவர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படவேண்டும். படிக்கும்போதே பிற துறைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5) தரமான பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.மக்கள் தொகை பெருகும்போது, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுவது நிச்சயம். இதற்கு சிறந்த தரக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும். இதில் தவறு செய்யும் நபர்கள் / அதிகாரிகள் கடுமையாக உடனடியாக தண்டிக்கப்படவேண்டும். உடனடியான கடுமையான தண்டனையே இதற்கு உடனடித் தீர்வு.

6) தரமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்தல்
அதிக  சிறந்த மருத்துவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மருத்துவ வசதி உறுதி செய்யப்படவேண்டும்.

அதிகப் படியான அரசு மருத்துவமனைகள் ஏற்படுத்தப் பட்டு, சிறப்பாகப் பராமரிக்கப்படவேண்டும். இதுபற்றிய முந்தய பதிவு அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

7) குற்றங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துதல்
மக்கள்தொகை பெருகும்போது பெருகும் குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் படைகள் அமைக்கப்படவேண்டும். அதிகப் படியான போலீசார் நியமிக்கப்பட வேண்டும். இருக்கும் போலீஸ் நிலையங்கள் நவீனப் படுத்தப்படவேண்டும்.  போலீசாருக்கு சிறந்த புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இவர்கள்  பொதுமக்களுடன் கலந்து பணியாற்ற சிறப்புப் பயிற்சிகள் ஏற்படுத்தப் படவேண்டும்.

சிறைகளில் கைதிகளுக்கு மனநலப் பயிற்சிகள் வழங்கப் படவேண்டும். திகார் சிறையில் இருப்பதைப் போல கைதிகள் மறுவாழ்வுக்கு சிறப்பு ஏற்படுகள் நாடு முழுவதும் செய்யப்படவேண்டும். குற்றவாளிகள் திருந்தி வாழ வழிவகை செய்யவேண்டும்.


மக்கள்தொகை  குறைய / பெருகுவதைக் குறைக்க என்ன செய்யலாம் ?
இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட சிறந்த பிரச்சாரங்கள் தொடர்ந்து செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு தம்பதியும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொளவதை ஊக்குவிக்கலாம்.

இரண்டுக்கு மேற்பட்ட குழந்தை இருப்பவர்களுக்கு...

அரசு சலுகைகள் மறுக்கப்படல்
தேர்தலில் போட்டியிடத் தடை
அரசுப் பணியில் சேரத் தடை

இப்படிப்பட்ட தண்டனைகள் தரப்படலாம்.


பரம்பொருளே!! இத்தனை குடைச்சல் தரும் மக்கள்தொகை கட்டுக்குள் வர நீங்கள் தான் ஒரு வழி செய்யவேண்டும். ஓம் நம சிவாய....

Friday, January 21, 2011

ஆன்மீகமும் அரசியலும்....

நமது தேசத்தில் அரசியலும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்ததாகவே இருந்து வந்திருக்கிறது.. ஒரு அரசியல் இயக்கம் நடத்துவதும் ஒரு ஆன்மீக இயக்கம் நடத்துவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இரண்டிற்கும் ஒரேவிதமான தேவைகள்தான்..ஒரேவிதமான சவால்கள்தான். என்ன அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து சேவை (???) செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள் சமூகத்தில் கலந்து சேவை (???) செய்கிறார்கள்.

உண்மையான் தேசப்பற்றும், தனிமனித ஒழுக்கமும் கொண்ட ஒரு சில அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும் இருந்தால் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஆனால் இன்று இருக்கக் கூடிய ஆன்மீகவாதிகள் பெரும்பாலும், அரசுக்கு சார்பாகவே அறியப்படுகிறார்கள். எந்த ஆட்சி நடக்கிறதோ அந்த ஆட்சியாளருக்கு சார்பாக (சில நேரங்களில்  பினாமியாக????)  ஆகிவிடுகிறார்கள்.

உண்மையான ஆன்மீகவாதிகளை மறைக்கவே பல போலி ஆன்மீகவாதிகள் உருவாக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதுவும் இப்போது வரிசையாக போலி சாமியார்கள் பிடிபட்டுக்கொண்டு இருக்கும் சூழலில் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்றே படுகிறது. இது பற்றி எனது சிந்தனைகள்..

இன்று ஒரு ஆன்மீக இயக்கம் ஆரம்பிக்கவும் சிறப்பாக நடத்தவும்,  ஒரு சிறந்த "Public Relation"(PR) - திறமையே அதிகம் தேவை. இயக்கத்தைப் பற்றி நல்ல செய்திகள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரவழைப்பது, அற்புதங்கள் பற்றி பிரச்சாரம் செய்வது, புது அன்பர்களை அதிகம் ஈர்ப்பது,  என்று சில திறமைகள் இருந்தாலே ஒரு ஆன்மீக இயக்கம் நடத்திவிடலாம்.

மக்களிடம் இருக்கக் கூடிய ஒருசமூக அங்கீகாரத்துக்கான ஏக்கத்தை இந்த மாதிரி ஆன்மீக இயக்கங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. ஒவ்வொருவருக்கும் மனதளவில் ஒரு வெற்றிடம் இருக்கவே செய்கிறது. முழுமையான திருப்தி உள்ள மனிதனைக் காண்பது மிகவும் அரிது. அவர்களின் அன்றாடத் தேவைகள் அதிகரிப்பதும், மன அழுத்தங்கள் , புற அழுத்தங்கள் அதிகரிப்பதும் இந்த மாதிரியான ஒரு ஆன்மீகத்தேடலை நோக்கி அவர்களை உந்துகிறது. இல்லை என்றால் அவர்கள் மனநல மற்றும் உடல் நல மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.

நம் தேவைகளுக்கும், நமக்கு கிடைப்பவைகளுக்கும் உள்ள இடைவெளிதான் நமது மனதிருப்தியின் அளவுகோல். இந்த இடைவெளியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் மன அழுத்தத்திற்கு ஆட்படுகிறார்கள். அந்த இடைவெளியைக் குறைக்க மனித முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இவர்களுக்கு ஓரளவுக்கு மன அமைதி தருவதற்கு, நமது பண்டைய யோகா, தியான, மூச்சுப் பயிற்சி முறைகளை முறையாகக் கற்ற, கற்பிக்கத்தெரிந்த  யாராலும் முடியும். இப்படிக் கற்றுத் தரபவர்கள் குரு ஆகிறார்கள். இந்த குருமார்களை மனிதர்கள் நம்பத்தொடங்குகிறார்கள். இதுவே ஒரு ஆரம்பப் புள்ளி.

இவர்களை மேலும் ஒரு பொதுக் குறிக்கோளை நோக்கி உந்தித் தள்ளி, தனது நோக்கங்களை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர்களே போலி சாமியாராக ஆகிறார்கள்.  அதாவது, உலக அமைதி, உன்னத உலகம், பசியற்ற சமூகம், நோயற்ற சமுதாயம் மற்றும் பல..

இது மனித மனதில் உள்ள ஒரு ஹீரோ நோக்கிற்கு தீனிபோட்டு அவர்களை Exploit செய்வது ஆகும். சிறுவயதில் நமக்கு கார்ட்டூன்கள் மேல் அதிக ஆர்வம் ஏற்பட இது ஒரு முக்கிய காரணி. இந்தக் காரணியை பெரியவர்கள் ஆனதும் இப்படிப்பட்ட போலி சாமியார்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

இந்தப் போலி சாமியார்களை நமது அரசியல்வாதிகள் பயன் படுத்திக்கொள்கிறார்கள்.

என்ன செய்யலாம் :

யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மட்டும் கற்றுக் கொள்ளலாம். அவர்களின் இயக்கங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை இவற்றுக்கு அளிக்கலாம்.

இவற்றை முறையாகக் கற்று, இடைவிடாமல் பயிற்சி செய்து வந்தாலே நமக்கு தேவையானவை கிடைத்துவிடும். இயக்கங்கள் சொல்லும் பெரிய நோக்கங்களுக்கு செவி சாய்த்து, நமது நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்யாமல் இருக்கலாம்.

தேவை இல்லாத வணிகரீதியிலான "Merchandise" களில் இருந்து தள்ளியே இருக்கவேண்டும். சிறப்பு தரிசனம், குருவின் சிறப்பு ஆசி என்று வணிகப் படுத்தப் பட்ட விசயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தக் கலிகாலத்தில் இதை சரியாக செய்து வந்தாலே, தனிமனித ஒழுக்கம், மனக்கட்டுப்பாடு  அதிகரிக்கும். நமக்கு நாமே வழிகாட்டும் திறமை வாய்க்கும்.

மாட்டிக் கொள்ளாதவரை அனைத்து இயக்கங்களுமே உத்தமமானவையே!!!! இவற்றை வேறுபடுத்துவது மிகக் கடினம். நாம்தான் உஷாராக விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.



கடவுளே!! மஹாலிங்கம் !!!!போலிகள்கிட்ட இருந்து எங்கள எல்லாம் காப்பாத்து!!!!! ஓம் நம சிவாய !!! சதுரகிரியாருக்கு அரோகரா!!!!

Wednesday, January 19, 2011

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமா ?????

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமா ????? அதாவது, இந்த ஊழல், லஞ்சம், கருப்புப் பணம், வறுமை, விலைவாசி மற்றும் பல விசயங்களில் சரியான நடவடிக்கை இருக்குமா??? எனது சிந்தனைகள்...

ஆட்சி மாறும்போது, அதில் பங்குபெறுபவர்கள் மட்டுமே மாறுகிறார்கள்... காட்சிகள் அப்படியேதான் இருக்கும்.... என்ன .. அன்று எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இன்று ஆளும் கட்சியாகவும், அன்று ஆளும் கட்சியாக இருந்தவர்கள் இன்று எதிர்கட்சியாகவும் மாறுகிறார்கள்.. மற்றபடி, ஆட்சி நடத்தும் விதம், முன்னாள் ஆளும் கட்சிகள் மீது உள்ள புகார்கள் மேலான நடவடிக்கை எடுப்பதுபோன்ற ஒரு தோற்றம் (உண்மையில் எடுப்பதில்லை), வீர வசனங்கள், சில நாட்கள் தூய ஆட்சிபோல நடந்து கொள்ளுதல் இதுபோன்ற காட்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். சில நாட்கள் ஆட்சிகட்டிலில் இருந்தபின், மீண்டும் அதேபோல ஊழல், லஞ்சம், விலைவாசி போன்ற பிரச்சினைகள் தலைதூக்கும்....

ஏனென்றால் இன்று அரசியல் ஒரு வியாபாரம். பெரும் பணமுதலீடு செய்து பல காலம் காத்திருந்து, ஆட்சி வந்தவுடன் முதலீட்டை எப்படி பல மடங்காக எடுக்கவேண்டும் என்ற தந்திரம் தெரிந்த வியாபாரிகளால் நடத்தப்படும் ஒரு நிறுவனம். இன்று ஒரு கட்சியில் இருப்பவர்கள் நாளை மாற்றுக்கட்சியில் சேர்ந்து கொளகைமுழக்கம் இடுவார்கள். மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்பி கண்ணீர்வடித்து கட்டிக்கொள்வார்கள்.  அதேபொல கூட்டணி என்ற பெயரில் ஒரு நாடகம் நடக்கும். அதில் வில்லன் ஹீரோ வுடனும், ஹீரோயின் காமெடியனுடனும் டூயட் பாடும் அதி அற்புதக் காட்சிகள் அரங்கேறும்.

இவைகளைப் பார்த்து நம் போன்றபாமரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து "வாழ்க,  ஒழிக" கோஷங்கள் போடவேண்டும். வெட்கக்கேடு....

இந்த அரசியல் விளையாட்டில் எந்தப் பாகுபாடும் இல்லை. திராவிடக் கட்சிகள் ஆளும் தமிழகமோ, கம்யூனிஸ்ட் ஆளும் மேற்கு வங்கமோ, காங்கிரஸ் ஆளும் ஆந்திரமோ, பாரதீய ஜனதா ஆளும் கர்நாடகமோ எந்த விதமான வேறுபாட்டுடன் இல்லை.

இவ்வளவு ஏன்? ஒரு முறை மாவோயிஸ்ட் டுகள் கூட நேப்பாளத்தில் ஆட்சியைப் பிடித்து அவர்களும் அப்படியே என்று காட்டிக் கொண்டார்கள்.

"இன்றைக்கு உண்மையில் தவறு செய்யாதவர்களில்  பெரும்பான்மையானோர் தவறு செய்ய சந்தர்ப்பம் வாய்க்காதவர்களே"

நேர்மையானவர்கள் கூட இப்படிப்பட்ட சூழலில் மாட்டிக்கொண்டு மாறிவிடுகிறார்கள் அல்லது மாற்றப்பட்டு விடுகிறார்கள். இது பற்றி எனது முந்தய பதிவு : ஏன் இப்படி இருக்கிறார்கள்???

ஏன் இந்த நிலை???

இதற்கு முக்கிய காரணம் தனிமனித ஒழுக்கம் குறைந்தது.

"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்"

என்று வள்ளுவப் பெருந்தகை அன்றே சொல்லியிருக்கிறார்.

கேவலமான தொலைக்காட்சித் தொடர்கள், மோசமான சினிமாக்கள் இவை மனித மனங்களில் ஏற்படுத்திய தீய எண்ணங்களின் விளைவுகள் இப்போது ஒரு புதிய சந்ததியினரின் "Gene" களைப் பாதித்து, நேர்மையான எண்ணங்களை குலைத்துவருகிறது. ஆம்.. நமது சிந்தனைகளின் ஆற்றல் நமது சந்ததிகளையும் நமது சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

தனிமனித ஒழுக்கம் என்பது சீர்கெட முக்கிய காரணிகளாக சினிமாவும், தொலைக்காட்சிகளும் இருக்கின்றன. அதுவும் இவை இப்போது அரசியல் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாகவும் ஆகிவிட்டன.

இவற்றைத் தட்டிக்கேட்கும் பொறுப்பில் ஒருகாலத்தில் இருந்த பத்திரிக்கைகளில் பெரும்பான்மையானவை இப்போது அவற்றில் பங்குதாரராக மாறிவிட்ட சூழல் மிகவும் பரிதாபமானது.

சுதந்தரமாக இருப்பதாக நாம் எண்ணும் இந்த வலைப் பதிவுலகமும் வெகு விரைவில் பத்திரிக்கைகளின் வரிசையில் சேரும். இது காலத்தின் கட்டாயம். இதை ஏன் கூறுகிறேன் என்றால் இப்போது பதிவுலகில் வோட்டுக் காக , ஹிட்டு க்காக பதிவுகள் இடுதல், இவைகளைப் பின்பற்றி பதிவுகளை வரிசைப் படுத்துதல் தொடங்கி இருக்கிறது. இதில் நமது வோட்டுப் பொறுக்கிக் கட்சிகள் (இவர்கள் இதில் மிகவும் தேர்ந்தவர்கள்)  பங்கு கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை. அவர்கள் செய்யும் ஒரு "Organised" ஆக்கிரமிப்பில் இருந்து பதிவுலகம் தம்மைக் காத்துக் கொள்ள இப்போதே ஆயத்தமாக வேண்டும்.

எனவே நமது அரசியல்முறை மாற்றி அமைக்கப்பட கருத்தாக்கம் செய்யப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இது பற்றிய எனது சிந்தனைகளின் முந்தய பதிவு : நாடாளுமன்றம் - தேவையா? - நமது தேர்தல் முறை சரியா?

அதனால ஆட்சிகள் மாறினால் காட்சிகள் பெரிதாக மாறும் என்ற நம்பிக்கை இப்பொதைக்கு இல்லை. ஒரு பிரளயம், போர், பெரிய சமூக இடர் இவை மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும் னு நினைக்கிறேன்.

கடவுளே!! ஆண்டவா!!!! சதுரகிரி வாழ் பரம்பொருளே!!! எல்லாரையும் காப்பாத்து....சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு.... அரோகரா....

Tuesday, January 18, 2011

கோவில் கொள்ளைகள்....

சமீபத்தில் ஒரு முறை நான் மதுரை அழகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். எங்களையும் சேர்த்து கோவிலில் ஒரு 7 பேர்தான் தரிசனத்துக்கு வந்திருந்தனர். வெகுநாட்களுக்குப் (சில வருடங்களுக்கு) பிறகு நான் அங்கு சென்றதால், நடைமுறை தெரியவில்லை.

வழக்கமாக செல்லும் பாதை வழியாக தரிசனத்துக்கு சென்றேன். தடுத்து நிறுத்தப்பட்டேன். கோவில் ஊழியர் ஒருவர் "சார் இது கட்டண வழி... இலவச தரிசனம் செய்யணும்னா இங்க முன்னால நின்னே தரிசனம் செஞ்சுட்டு போங்க" என்றார். உடனே நான் அப்பாவியா "இங்க மொத்தமே 7 பேர் தான் இருக்கோம், இதுக்கு எதுக்கு கட்டண முறை.. அதுவும் இங்கிருந்து பார்த்தால் சந்நிதி சரியாக தெரியவில்லை" என்றேன். "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. முன்னாடி போய் தரிசனம் வேணும்னா காசு குடுங்க" என்றார். ஒரு நபர்க்கு ரூ 10. நாம் மீண்டும் அவரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் "ஏதாவது பேசணும்னா ஆபீஸ்ல போய் பேசிக்குங்க. எங்கள்ட சொல்றதத்தான் நாங்க செய்றோம்" என்றார்.. கடைசியில் ரூ 10 கொடுத்த பிறகே முன்னே சென்று தரிசனம் செய்ய முடிந்தது.

இதே கதை தான் திருவில்லிபுத்தூர் வட பத்ர சாயி கோவிலிலும். முன்னால் நின்றுபார்த்தால் சுவாமி உருவம் முழுவதும் தெரியாது. சற்று உள்ளே சென்று பார்த்தால் தான் முழுதும் பார்க்க முடியும். இங்கும் இப்போது சுவாமியை முன்னால் சென்று பார்க்க கட்டணமுறை வந்து விட்டது.

திருச்செந்தூர் போன்ற கோவில்களில் நிலைமை இன்னும் மோசம்.

இதுபோல இன்னும் எத்தனை கோவில்களில் இப்பிடி இருக்குன்னு தெரியல. கூட்டம் இருக்கும் காலத்தில் மட்டும் இருந்த கட்டண தரிசன முறை இப்போது சுவாமி தரிசனத்துக்கே கட்டணம் கேட்கும் நிலைக்கு பரிணமித்திருக்கிறது.

என்னைப்போன்றவர்கள் ஆண்டவன் தரிசனத்துக்கே அதிக முக்கியத்துவம் தருவதால், பூசை, அர்ச்சனை கூட அதிகம் செய்வதில்லை. இப்போது அதுக்கும் வேட்டு வைத்துவிட்டார்கள்.

இந்த நிலை ஏன் ஏற்பட்டது? என்ன செய்யலாம்? எனது சிந்தனைகள்....

காரணிகள் :

இந்த நிலைக்கு முதல் காரணமாக சொல்லப்படுவது, கோவில்களுக்கு வருமானத்துக்கு வழி செய்வது.

மேலும், எப்பிடி கட்டணம் கேட்டாலும் குடுத்துத்தானே ஆகணும்ங்கற கோவில் நிர்வாகத்தினரின் திமிர் மனப்பான்மை.

கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாமல், அவை சிலரின் சொந்த உபயோகத்துக்காகயும் லாபத்துக்காகவும் மாற்றப்பட்டது.

நமது கோவில்களையோ, பக்தியையோ, பாரம்பரியத்தையோ பற்றி தெரியாதவர்களால் கோவில்கள் நிர்வாகம் செய்யப்படுவது.

இவைபற்றிய அக்கறை உடைவர்களை கோவில் நிர்வாகத்தில் பங்கு கொள்ள அனுமதிக்காதது.

என்ன செய்யலாம் :

கோவில் சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு முறையாக ஆவணப்படுத்தப் படவேண்டும். அவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளோர்மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும். முறையாக குத்தகை ஏலம் விடப்பட்டு சிறந்த வருமானம் அந்த சொத்துக்களிலிருந்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இது குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

வருமானம் அதிகம் உள்ள கோவில்களோடு சிறு கோவில்கள் இணைக்கப்பட்டு, அவற்றிற்கும் வருமானத்தில் ஒரு பங்கு தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

அந்தப் பகுதியில் உள்ள வியாபாரிகள், சமூக நல சங்கங்கள் சேர்ந்து  நலிந்த பாரம்பரிய கோவில்களுக்கு நிதி உதவிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

உண்மையிலேயே பக்தியும், கடவுள் நம்பிக்கையும், பிறமனிதர் மீது மரியாதையும் தெரிந்தவர்கள்தான் திருக்கோவில் நிர்வாகத்தில் அனுமதிக்கப்படவேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள ஆர்வமுள்ளவர்களும் நிர்வாகத்தில் பங்குபெற அனுமதிக்கவேண்டும்.


இதெல்லாம் செய்வதற்கு முதலில் நல்ல மனம் அரசுக்கு வர வேண்டும். என்ன செய்வது, நமது இந்து மதக் கோவில்களை (அதுவும் வருமானம் வர வழி உள்ள கோவில்களை) மட்டும் அரசு உடைமையாக்கி பாரபட்சம் காட்டும் சூழலில், இந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் ஓவர்தான்..

மஹாலிங்கம்... நீங்கதான் மனசு வச்சு இந்தக் குறைகளைத் தீர்த்து வைய்யுங்க... ஓம் நம சிவாய...சதுரகிரியாரே சரணம்....

Monday, January 17, 2011

ஏன் இப்படி இருக்கிறார்கள்???

இன்று அரசின் ஒவ்வொரு துறையிலும், லஞ்சம், ஊழல் என்று தினமும் பத்திரிக்கை செய்தி வருகிறது.  இன்று இருக்கும் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஏன் இப்பிடி இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.

1) தாமதமும் ஒரு சலிப்படைந்த தன்மையும் : முதலில், நமது அரசின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மைக்காக ஒரு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறு பொருள் வாங்குவதற்குக்கூட டெண்டர்விட்டு, கமிட்டி போட்டு, ஒரு பெரிய சடங்குபோல பல படிகள் கடந்துதான் வாங்க முடியும். இதற்கு சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை ஆகிறது. சில நேரங்களில் அதற்குள் அந்தப் பொருளுக்கான தேவையே இல்லாமல் போய்விடும்.  இதனால் ஒரு சில சின்னத்தேவைகளைக் கூட உடனடியாக நிறைவேற்ற முடியாததால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இது எந்த மனிதனுக்கும் ஏற்படக்கூடியதே... இவர்களுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

யோசித்துப் பார்த்தால் மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று உண்மையாக நினைத்து பதவிக்கு வருபவர்கள் உணரும் முதல் தடை இது.

தீர்வு : அரசுப் பதவிக்கு வருபவர்கள் அனைவருக்கும் சிறந்த மனப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். முடிந்தால் முதல் சில ஆண்டுகளுக்கு, சில நேர்மையான அதிகாரிகள் / அமைச்சர்களை  "Mentor"  ஆகக் கொண்டு,  வழிகாட்டல், பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இந்த சலிப்பு ஏற்படாமல் இருந்தாலே நேர்மையான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நிச்சயம் உருவாவர்கள். (ஆனால் சில தவறான அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், இப்படிப்பட்ட, "Mentor" பணி செய்ய நேரிட்டால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும்... அதை இப்போது பார்த்தும் வருகிறோம்)

 
2) பாரம்பரியம் : எந்த ஒரு வேலை செய்யவும் ஒரு முன்னுதாரணத்தை எதிர்பார்த்தல். இதற்கு முன்பு இதுபோல செய்திருக்கிறார்களா? எப்பிடி செய்தார்கள்? ஒருவேளை அவ்வாறான ஒரு முன்னுதாரணம் இல்லாவிட்டால் முடிந்தது கதை... அந்த வேலை நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவேளை நடந்திருந்தால் இதற்குமுன் எப்படி செய்யப்பட்டதோ அதை அடிஒற்றியே செய்யப்படும். அது எவ்வளவு மோசமான பின்விளைவுகள் உள்ளதாக இருந்தாலும்.

தீர்வு :  முன்னுதாரணம் இல்லாத காரியங்களுக்கான வழிகாட்டுதல்கள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வேலைகள் பாகுபாடு காட்டாமல் முடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரசு வேலைகளுக்கும் சரியான "Target" நேரங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இது முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அதிகாரிகளும் / அமைச்சர்களும் நேர்மையான முறையில் பணி செய்யவேண்டும்.

 
3) பயம் : சில பல அரசு ஊழியர், அமைச்சர்களின் கைங்கரியத்தினால், உண்மையிலேயே நல்லன செய்யும் நபர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். தவறு செய்பவர்களைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்படும் புதிய நடைமுறைகள் உண்மையில் தவறு செய்யாதவர்களை மாட்டுவிக்கவும், பயமுறுத்தவும் அதிகம் பயன்படுகிறது. இதனால் பல நேர்மையான அதிகாரிகளும் அமைச்சர்களும் வலுவான முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.

தீர்வு : தவறுகள் நடக்கும்பொழுது புதிய நடைமுறைகள் ஏற்படுத்துவதற்குப் பதிலாக, இருக்கும் நடைமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படவும், அதை கடைபிடிக்காதவர்களுக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்.  இவ்வாறு செய்தாலே தவறு செய்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. தவறு செய்தால் தண்டனை கிடைக்க பல ஆண்டுகள் ஆவதும் இவ்வாறு தவறு செய்பவர்கள் திருந்தாதற்கு முக்கிய காரணம்.

4)  கட்சிகள், பலம் மிகுந்தவர்களின் தலையீடு : நேர்மையாக பணியை ஆரம்பிக்கும்போது, இப்படிப்பட்ட தலையீடுகள் உற்சாகத்தைக் குறைத்து, முனைமழுங்கச்செய்துவிடுகின்றன.

தீர்வு :  தலையீடுகள் ஏற்படும்பொழுது கடைப்பிடிக்க ஒரு நடைமுறை ஏற்படுத்தப்பட்டு "Record" செய்யப்படவேண்டும்.(இது ஏற்கனவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் "Unofficial" ஆக).   அதில் தலையிடும் சம்பந்தப்பட்ட அனைவரின் பெயரோடு ஒரு "Report" தயார் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையின் "Notice Board" மற்றும் பத்திரிக்கைகளுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்தத் தலையீடு சரியானதாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக் கொள்ளவும், தவறாக இருக்கும் பட்சத்தில் நிராகரிக்கவும் அதிகாரிகள் தைரியம் கொள்ளவேண்டும்.

5) பேராசையும் ஆதிக்கமனப்பான்மையும் : "உண்மையில், தவறு செய்யாதவர்களில் பெரும்பாலோனோர், தவறு செய்ய சந்தர்ப்பம் வாய்க்காதவர்களே...." இது நான் எங்கோ கேட்ட பொதுமொழி. உண்மையில் ஒருவருக்கு அப்படிப்பட்ட பதவி கொடுக்கப்படும்பொழுது இயல்பாக ஏற்படும் ஆதிக்கமனப்பான்மை, கண்முன் நடைபெறும் சில  தவறான நிகழ்வுகள், பெரும்பான்மை நபர்களை தங்களின் இயல்பான நிலையிலிருந்து பிறழவைத்துவிடுகிறது. பதவிக்கு வரும் முன்பாக நேர்மையும் சிறந்த கொள்கையும் கனவும் கொண்டிருப்பவர்கள் பதவிக்கு வந்த பின் மாறிவிடுவதற்கு இது  ஒரு முக்கியமான காரணி. என்னதான் சிலகாலம் தங்கள் கொள்கையில் பிடிப்பாக இருந்தாலும், காலப்போக்கில் மேற்கண்ட பல் வேறு காரணிகளுடன் கூட்டு சேர்ந்து இந்த நிகழ்வு ஏற்படக்காரணமாகிறது.

தீர்வு : இந்தக் காரணிக்கான நிரந்தரத் தீர்வு நமது "Gene" லயும், வளர்ப்புலயும், கல்விமுறையிலும் தான் இருக்கு. நாம எல்லாரும் எப்போதும் நேர்மையாக இருக்க சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். இது நம்முடய சந்ததிக்கு நிச்சயம் செல்லும். நமது குழந்தைகளை வளர்க்கும்போது இதை அழுத்தமாக சொல்லி வளர்க்க வேண்டும். கல்விக்கூடங்கள், இதில் பெரும் பங்கு ஆற்ற முடியும். தனிமனித ஒழுக்கமும், நேர்மையும் சில தலைமுறைகள் தொடரும்பொழுதே இந்தக் காரணி மாறமுடியும். பெரிய தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஒரு பயத்தை உண்டுபண்ணியும் இதை தற்காலிகமாக நிறுத்தலாம். ஆனால் நிரந்தரத்தீர்வு எதிர்காலத்தில் மட்டுமே.

இவ்வளவுக்கும் நடுவுல (மாட்டிக்காம) வேலை செய்யுற நமது அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உண்மைலேயே ரொம்ப திறமைசாலிகள்தான். ஆனா இந்தத் திறமைய இவங்க நேர்மையான விசயங்களுக்கு அதிகமாப் பயன்படுத்தினா நாடு நல்லா இருக்கும்.

இந்த நிலைமைலயும் இவ்வளவு தாமதமாவும் இவ்வளவாச்சும் நலப் பணிகள் நடக்குதேன்னு சந்தோசப்பட்டுக்கவேண்டியதுதான்.

ஓம் நம சிவாய ..... சதுரகிரியாரே இந்த நாட்டக் காப்பாத்து....

Wednesday, January 12, 2011

அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

இன்றைக்கு அரசு மருத்துவமனைகள் இருக்கும் நிலை மிகவும் பரிதாபமானது. பெரும்பான்மை ஏழை மக்கள் இப்போதும் அரசு மருத்துவமனைகளையே நம்பி உள்ளனர். நானும் சில சந்தர்ப்பங்களில் அரசு மருத்துவமனைகளின் சேவையை உபயோகப்படுத்தி இருக்கிறேன். அழுக்கான வராண்டாக்கள், பெட் இல்லாத கட்டில்கள், வராண்டாவில் சிகிச்சைபெறும் நோயாளிகள், நாற்றம் எடுக்கும் கழிவறைகள், சுகாதாரமில்லாத உணவு வகைகள் மற்றும் பல சோகங்கள். இவ்வளவு இருந்தும் நமது அரசு மருத்துவமனை மருத்துவர்களின் சேவை மகத்தானது. சிறந்த மருத்துவர்கள், மோசமான சூழல் - நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிக்கவே இவற்றை இப்படி வைத்திருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது. இப்போது, கலைஞர் காப்பீட்டுத்திட்டம் வேறு வந்து தனியார் மருத்துவமனைகளை மேலும் வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

ஏன் இந்த நிலை? மாற்ற என்ன செய்யவேண்டும்?   எனது சிந்தனைகள்....

இப்போதய நிலை:

போதுமான துப்புறவுத் தொழிலாளிகள் இல்லை. இருக்கும் சில தொழிலாளிகளும் சோர்ந்துபோய் தன்னால் முடிந்ததை செய்துவிட்டு அவ்வளவுதான் செய்யமுடியும் என்று விட்டுவிடுகிறார்கள்.

பொதுமக்களுக்கும் நமது அரசு மருத்துவமனைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வது இல்லை. வராண்டாவிலேயெ ஆங்காங்கே எச்சில் துப்புவது, கழிவறைகளை சரியாக உபயோகிக்காதது, மற்றும் பல...

சுகாதார பராமரிப்புப் பொருள் வாங்க போதுமான நிதிவசதி இல்லை.

போதுமான மருத்துவர்கள் இல்லை. இருக்கும் மருததுவர்களுக்கும் சம்பளம் போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு ஒரு சுகாதார அமைச்சர் கட்டாய கிராம மருத்துவசேவை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தபோது எழுந்த எதிர்ப்புதான் நினைவுக்கு வருகிறது.

போதுமான மருத்துவ உபகரண வசதிகள் இல்லை. இருக்கும் உபகரணங்கள் பழுதானால் அவற்றை சரி செய்வதற்கு பலநாள், வாரம், மாதம் காத்துக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.


ஏன் இப்பிடி இருக்கு ?

மிக முக்கிய காரணம் அரசின் அலட்சியப் போக்கு. அரசின் இந்த அலட்சியப்போக்கு சில பல பணியாளர்களையும், மருத்துவர்களையும்,  செவிலியர்களையும்  ஆட்கொண்டது.

போதுமான மருத்துவர்கள் இல்லாதது. அவர்களுக்கான சம்பளம் குறைவாக இருப்பது.

நிரந்தரமாக போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது. பற்றாக்குறையோடே அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் நடைபெறுகின்றன.


என்ன செய்யலாம் :

முதலில் அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான சுழல் நிதி அளிக்கவேண்டும்.  போதுமான கருவிகள், உபகரணங்கள் வாங்கப்படவேண்டும். இதற்கு, அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களோ, ரோட்டரி, லயன்ஸ் கிளப் களோ ஆவன செய்ய வேண்டும்.

போதுமான பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு சிறந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்களின் சிறந்த சேவைகளுக்கு பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும்.  இதற்கும், அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களோ, ரோட்டரி, லயன்ஸ் கிளப் களோ ஆவன செய்ய வேண்டும்.

அதிகப்படியான மருத்துவர்கள் உருவாவதற்கு ஆவன செய்யப்படவேண்டும். இப்போது இருக்கும் கல்லூரிகளில் இடங்களை அதிகப்படுத்தியோ அல்லது மேலும் சில கல்லூரிகளைத் துவக்கியோ, இதை கட்டாயம் உடனடியாக செய்யவேண்டும்.

எங்கெங்கு அரசுக் மருத்துவமனைக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்பட வேண்டுமோ    அவை உடனே செய்யப்படவேண்டும். அரசு இதற்கு உடனடியாக நிதி ஒதுக்கி ஆவன செய்யவேண்டும்.

அரசாங்கத்தின் சுகாதாரக் கண்காணிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, அவர்களின் பணிவேகம் முடுக்கிவிடப்படவேண்டும்.

மேலும் பல அரசு மருத்துவமனைகள் கட்டப்படவேண்டும். அங்கு குறையில்லாமல் பணியாளர்களும், செவிலியர்களும், மருத்துவர்களும் நியமிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு தனியார்மருத்துவமனையும் சில பெட்களை ஏழைகளுக்கு என்று ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் கடுமையாக அமல்படுத்தப் படவேண்டும்.

பொது மருத்துவமனை சுத்தமாக இருப்பதற்கு சில துப்புறவு செய்யும்  மிசின்கள் வாங்கவேண்டும்.

பொதுமக்கள் பொறுப்புடன் மருத்துவமனைகளை சுத்தமாகப் பராமரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.  அப்போதுதான் அங்கு இருக்கும் நிலை அவர்களுக்குத் தெரிந்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள். சமீபத்தில் ஒரு கலெக்டர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க அனுமதித்தது செய்தியாக வந்தது. அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள சில குறைகளை  நிவர்த்தி செய்ய நடவடிக்கையும் எடுத்தார். இதுபோல அனைத்து அரசு அதிகாரிகளும், அமைச்சர் பெருமக்களும் செய்யவேண்டும்.


செய்வார்களா??? ஏக்கமாக இருக்கிறது... கடவுள்தான் மனசு வைக்கணும்... ஆண்டவா போற்றி.....

இலவசங்கள் - தேவையா? என்ன குடுக்கலாம் (!) (?)

இது தமிழகத்துக்குத் தேர்தல் ஆண்டு. ஒவ்வொரு கட்சியும் என்ன இலவசமாக் குடுத்து ஓட்டுக்கள கவர்பண்ணலாம்னு மண்டயப்பிச்சுக்கிட்டு இருக்கரதா இங்க கொல்கத்தாவுல கேக்குராங்க....(???? !!!!) ஏன்னா இங்க மேற்கு வங்கத்துல அதெல்லாம் கிடையாதாம்... தமிழக வாக்காளர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறார்கள்...

இந்த இலவசங்கள் சரியா, தப்பாங்கறதவிட தேவையா?  தேவைஇல்லையாங்கறது தான் முக்கியம். நம் தமிழக முதல்வர் இதுபத்தி சொல்லும்போது, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் இருக்கும் என்றார். இது குறித்து என்னுடய சிந்தனைகள்.

நான் நம் முதல்வர் சொல்வதை வழிமொழிகிறேன். நிச்சயமாக ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தேவைதான். ஆனால் என்ன குடுக்குறதுங்கறதுதான் பிரச்சினையே...  டிவி, காஸ் அடுப்பு, இலவச விவசாய(???)  நிலம் (அதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும்), வீடு கட்ட பணம் (இதுவும் ஒரு குறிப்பிட்ட ஆட்களுக்கு மட்டும்), ஒரு ரூபாய்க்கு (உபயோகப்படுத்த முடியாத) அரிசி, இப்பிடி நிறையக் குடுக்குறாங்க இப்ப...

இந்த இலவசத்துலயே ஒரு ரூபாய் அரிசித்திட்டம் சிறந்தது. அதுவும் நல்ல அரிசியாப் பாத்துக் குடுத்தாங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும். (இதுல பதுக்கல் கடத்தல் இவைகள தடுத்து நிறுத்துனாங்கன்னா அதி சிறந்த திட்டமா இருக்கும்).

விவசாயத்துக்கு இலவச மின்சாரம், இலவச பம்புசெட் - இன்னும் சிறப்பானது.

ஆனா மத்ததெல்லாம் இலவசமாக் குடுக்கத் தேவை இல்லைன்னு நினைக்கிறேன். 

வேற சில விசயங்கள் இலவசமாத் தேவைப்படுது.. அதுல என்ன குடுக்கலாம், எப்பிடிக் குடுக்கலாம் ??? இலவசத்த இரண்டு வகையாப் பிரிக்கலாம். நேரடி இலவசம், மறைமுக இலவசம்.

இவை நேரடியான இலவசங்கள் :

1) இலவசக் கல்வி - சிறந்த தரத்துடன், புத்தகங்க்களுடன் - குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை முடிந்தால் கல்லூரிப் படிப்புவரை - அனைத்துப் பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் - அனைவருக்கும் - 3 வேளை ஊட்ட சாப்பாட்டுடன் 

2) இலவச சிறந்த மருத்துவ வசதி - எல்லாக் குடிமக்களுக்கும்

3) களர் மற்றும் விவசாயம் செழிக்காத நிலங்களைப் பண்படுத்த - இலவச ஆலோசனை மற்றும் அதை சரிசெய்ய முழு வசதிகள், கருவிகள், பொருட்கள் இலவசமாகத் தரப்பட வேண்டும்.

4) ஒவ்வொரு விவசாய வட்டத்துக்கும் - 1 டிராக்டர் மற்றும் ஒவ்வொரு விவசாயிக்கும் குறிப்பிட்ட அளவு டீசல் - இலவசமாக

5) சிறு, குறுந் தொழில் முனைவோருக்கான கருவிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

6) ஒவ்வொரு கிராமத்துக்கும் இலவச இணைய வசதி செய்து தரப்பட வேண்டும்.
    
7) இலவசப் பயிர்ப் பாதுகாப்பு இன்சுரன்ஸ். 

8) சுத்தமான குவாலிடியான சானிடரி நாப்கின் - அனைத்துப் பெண்களுக்கும்.. இலவசமாக

9)சுத்தமான குவாலிடியான காண்டம் மற்றும் கருத்தடை சாதனங்கள்.   இலவசமாக

இவை மறைமுக இலவசங்கள் :

1) விவசாய, கைத்தொழில், சிறு, குறுந் தொழில் முனைவோருக்கு வட்டியில்லாக்கடன்.

2) குடும்பத்தில் முதல் வீடு வாங்குவோருக்கு, கட்டுவோருக்கு சலுகை வட்டியில் கடன்

கீழ்க்கண்ட அடிப்படை வசதிகள் அனைத்துப் பகுதிகளுக்கும் இலவசமாக செய்துதரப்பட வேண்டும் :

1) சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சப்ளை- 24 மணி நேரமும்

2) சிறந்த சாக்கடை வசதி 

3) சுத்தமான கழிவரை வசதிகள்

4) சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

இந்த இலவசங்களத் தவிர கீழ்க்கண்ட வசதிகள் ஏற்பட்டா, தானா தொழில்கள், வேலைவாய்ப்புகள் வளர்ந்து மக்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.

1) கிராமத்தில் தொடங்கப்படும் மற்றும் 95% உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் வரிச் சலுகை.

2) 24 மணிநேரத் தடையில்லா மின்சாரம்

3) சிறந்த சாலை மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி அனைத்துக் கிராமங்களுக்கும், சிறு, பெரு நகரங்களுக்கும்

4) ஒவ்வொரு விவசாய வட்டத்துக்கும் ஒரு குளிர் பதனிடு வசதியோடு கூடிய ஒரு சிறந்த சேமிப்புக் கிடங்கு.

5) விவ்சாய, கைத்தொழில் மற்றும் கைவினைப்பொருள்களை அவர்களே விற்றுக்கொள்ள சிறந்த சந்தை வசதி.... மற்றும் இப்பொருள்களை அரசாங்கம் நியாயமான விலையில் வாங்கி விற்கும் சிறப்பு அங்காடிகள்.


யோசிக்கும்போதே சந்தோசமா இருக்கு... நடந்தா இன்னும் புளகாங்கிதமா இருக்கும்...

ஆண்டவா,  சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்... மனசு வைய்யுங்க.... மலையேறி வந்து மொட்ட அடிச்சுக்கிரதா வேண்டிக்கிறோம்.... அரோகரா....

Friday, January 7, 2011

விலைவாசி உயர்வும், அதற்கு தீர்வும் (?)

என் உறவினர் ஒருவர் விளையாட்டாக சொன்னது : "இன்றைய தேதியில் பை நிறைய காசு குடுத்து கை நிறைய காய்கறி வாங்க வேண்டி உள்ளது."  இது உண்மையில் பெரிய விபரீதம். இந்தோனேசியாவில் 10,000, 1,00,000 க்கு எல்லாம் ருபயா நோட்டு குடுக்கிறார்கள். ரஷ்யாவில் பெரஸ்ட்ராய்க்காவுக்குப் பிறகு கரன்சி நோட்டுகளை டாய்லெட் பேப்பரா யூஸ் பண்ணாங்களாம். அதுபோல நம் நாட்டிலும் நடந்துவிடும் போல இருக்கிறது.

ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ 100 த் தொட்டுவிட்டு லேசாகக் கீழிறங்கி ரூ 60 - 70 ல் நிற்கிறது (தரமும் அதுக்குத் தகுந்தாற்போல மிகவும் கீழிறங்கிவிட்டது). ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ 100 க்கு விற்கிறது (???). ஒரு கிலோ தக்காளி ரூ 60 க்கு விற்கிறது. சீனி, அரிசி, பருப்பு, பால், பூண்டு, மளிகை சாமான் அனைத்துப் பொருள்களின் விலையும் விண்ணைத் தாண்டி சென்று விட்டது... ஒரு குடும்பத்தின் மாத மளிகை பட்ஜெட் கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தது 3 மடங்கு உயர்ந்துவிட்டது. பெருநகரங்களில் வீட்டு வாடகையும் இதுபோல பல மடங்கு உயர்ந்துவிட்டது.  

இந்த லட்சணத்தில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும், விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடியுமா என்று தெரியவில்லை என்று பேட்டிவேறு கொடுத்து எரிச்சலைக் கிளப்புகிறார்கள். (இவர்களை எதற்குத் தேர்ந்தெடுத்தோம் என்றே புரியவில்லையோ இவர்களுக்கு)

இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்ன செய்யலாம்? எப்பிடி செய்யலாம்? எனது சிந்தனைகள்...

காரணங்கள் :

1) தனிமனிதனின் தேவைகள் உயர்ந்து. நேற்றய ஆடம்பரப் பொருள் இன்று அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக ஆனது. உதாரணம் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிசின், மிக்சி, ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் ....  இவற்றைப் பூர்த்திசெய்ய, இப்போதய லாபக் கணக்குகள் போதாமல் இருப்பது.  இதற்காக அதிக லாபத்துக்கு பொருள்களை விற்பனை செய்ய முயல்வது.

2) (பண, அதிகார) பலம் கொண்ட தனிமனிதர்களின்  பேராசை. விளைவு, பதுக்கல்,  monopoly, அதிக லாபத்துக்குமட்டுமே பொருள்களை விற்பனைசெய்தல்.

3) சில கட்சிகளுக்கு நன்கொடை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அன்பளிப்பு (???)  கொடுத்து விலையை உயர்த்திக்கொள்ளும் குறுக்கு புத்தி உடைய மனிதர்கள் மற்றும் நிறுவனங்கள்.

4) பொருட்களின் விலையை கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் பெரும்பான்மை அதிகாரிகள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், கடமையை செய்யாமல் இருப்பது. (என்ன செய்வது, நமது அமைச்சருக்கு கிரிக்கெட்டையும், சொந்த வேலைகளையும் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது :-(   )

5) ஒரு சாராரின் வாங்கும் சக்தி அதிகரித்தது. ( இவர்களைத்தான் நம் முதல்வர், ஒருமுறை விலைவாசி உயர்வு பற்றிய கேள்விக்கு, தி நகரிலும் நகைக் கடைகளிலும் இருக்கும் கூட்டத்தை உதாரணம் காட்டிப் பதில் கூறினார்). இவர்களைக் காரணம் காட்டி மற்றவர்களுக்கும் தரப்பட்ட விலைவாசி உயர்வு.  தேச வளர்ச்சியின் பயன் பரலாக இல்லாமல், ஒரு வீக்கம் போல ஒரு சாரார் மட்டும் வளர்ந்தது. மேலும் அவர்களை வளர்க்கவே அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவது.

6) மக்கள்த்தொகைப் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல உற்பத்தியைப் பெருக்காதது. Demand - Supply -  Gap அதிகரித்தது. சொல்லப்போனால் இப்போது உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த நிலையில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை ஏற்றுமதிக்கு அனுமதித்தது.

7) ஊக வணிகத்தில் உணவுப்பொருள்களை மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அனுமதித்தது. நாளைய விலையை இன்றே அதிகரிக்கும் பேராசை வியாபாரிகளின் ஆசைக்கு ஊக்கம் கொடுத்தது. விவசாயிக்கு இதனால் எந்தப்பயனும் இல்லை :-(

என்னால் யோசிக்க முடிந்த காரணிகள் இவைதான். நண்பர்கள் மற்றும் இதைப் படிப்பவர்கள் வேறு ஏதாவது காரணிகள் பற்றிக் கூறினால் சேர்த்துக்கொள்ளலாம்.

என்ன செய்யலாம் :

1) எப்படி அரசாங்கத்தால் TASMAC சரக்குகளை RETAIL முறையில் விற்க முடியுமோ அப்பிடியே,  காய்கறி மற்றும் மளிகைப்  பொருள்களை விற்பனை  செய்ய கடைகளை அமைத்து நடத்தவேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக பொருள்களை வாங்கி இவற்றில் நேர்மையாக விற்பனை செய்யும் பொழுது இரண்டு நன்மைகள் ஏற்படும். ஒன்று வெளி மார்க்கெட்டில் உள்ள பொருள்களின் விலை தாமாகக் குறையும். மற்றும் இதனால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் ஏதுவாக இருக்கும்.

2)  பதுக்கல்காரர்களை தயவு தாட்சணியம் இல்லாமல் தண்டிக்கவேண்டும். அதிகாரிகள் இவர்கள் மீது நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கத்தவறும் அதிகாரிகள் உடனே தண்டிக்கப்படவேண்டும்.

3) இப்படிப்பட்ட பேராசைக்கார நிறுவனங்கள் மற்றும் பதுக்கல்காரர்களுடன் சார்ந்த அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுதும் குடும்பத்துடன் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

4)  உணவுப்பொருள் உற்பத்தி அதிகரிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகள் அமைந்த பகுதிகளில் இவர்களைக் கொண்டே விவசாயம் செய்ய ஏற்பாடு செய்யலாம். இது ஒரு சிறந்த மனப் பயிற்சியும் கூட.

5)  தரிசாகக் கிடக்கும் விவசாய நிலங்களை உடனடியாகக் கண்டறிந்து அங்கு விவசாயம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஸ்பான்சர் செய்யவேண்டும்.

6) வேல்யூ செயின் எனப்படும் உற்பத்தி இடத்திலிருந்து இறுதி உபயோகிப்பாளர் வரை ஒரு பொருள் செல்லும் இடங்களை கணிணி மயமாக்கி, தேவை இல்லாத இடைத்தரகர்களை ஒழித்து, ஒவ்வொருவருக்குமான லாபவிகிதங்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு விநியோகம் செய்வது முறைப்படுத்தப்படவேண்டும். இதற்கு இப்போது இருக்கக் கூடிய பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள், சந்தை வல்லுநர்கள் உதவி செய்யவேண்டும்.

7) ஊக வணிகத்தை மொத்தமாகத் தடை செய்யவேண்டும். இதற்குப் பதிலாக இருப்பு வணிகம் என புதிய முறையில் இருப்பு இருக்கும் விவசாயப்பொருள்களுக்கு ஒரு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். இதற்கும் இப்போது இருக்கக்கூடிய பொறியியல் மற்றும்  மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள், சந்தை வல்லுநர்கள் உதவி செய்யவேண்டும்.

8) தேசத்தின் வளர்ச்சி பரவலாக்கப்பட வேண்டும். இதற்குத் தேவையான உள் கட்டுமானப் வசதிகள், தடையில்லா மின்சார வசதி உடனடியாக நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

என்னால் யோசிக்க முடிந்த தீர்வுகள் இவைதான். நண்பர்கள் மற்றும் இதைப் படிப்பவர்கள் வேறு ஏதாவது தீர்வுகள் பற்றிக் கூறினால் சேர்த்துக்கொள்ளலாம்.


ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல  எழுதிவிட்டேன். இதெல்லாம் சரியா, எவ்வளவு தூரம் சாத்தியம்  ன்னுகூடத் தெரியல. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது.  ஒரு சாமானியன்னான நானே இந்த அளவுக்கு யோசிக்கும் போது, ஒரு பெரிய அரசாங்கம் எவ்வளவு யோசிக்கணும், செய்யணும். ஏன் இப்பிடி இருக்காங்கன்னு புரியல. யாராவது (?) யாருக்காவது (?)  ஏதாவது (?) குடுத்து அமைதியா இருக்கச் சொல்லீட்டாங்களான்னும் தெரியல. அந்த சதுரகிரியாருக்குத்தான் வெளிச்சம்.

ஓம் நம சிவாய!!!! மஹாலிங்கமே போற்றி!!!! எங்களை எல்லாம் தயவு செஞ்சு இதுல எல்லாம் இருந்து காப்பாத்து.....

கிராமங்களும்.. நகரமயமாக்கமும்...

இன்று பெரும்பான்மையான நகரவாசிகள் கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களே. பண்டிகை தினங்களிலும் விடுமுறை தினங்களிலும் வெளியூர்ப் பேருந்துகளிலும், ரயிலிலும் அலைமோதும் கூட்டம் இதற்கு சாட்சி.

நன்றாகப் படித்து, நகர்ப்புறங்களில் மட்டுமே இருக்கக்கூடிய வேலைவாய்ப்புக்கு வருபவர்கள் ஒருபுறம். கிராமங்களில் செய்து வந்த தொழில்கள் நசிந்து நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒருபுறம். என இரு வேறு துருவங்கள் போல புலம் பெயர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஏன் இவ்வளவு மக்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு பெருநகரங்களுக்கு வருகிறார்கள்? அவர்களுக்கு அந்த ஊர்களில் பிழைப்புக்கு வழி இல்லையா?இந்த நகரங்கள் வருவதற்கு முன் இவர்கள் எங்கு இருந்தார்கள்? அப்போது பிழைப்புக்கு என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? இப்போது அவர்கள் யாரைத் தேடிப் போகிறார்கள்? ஏன் இந்த நிலைமை? இதற்கு என்ன செய்யப்பட வேண்டும்? எனது சிந்தனைகள்...

காரணிகளும் தீர்வுகளும்:

1) காரணி : படிப்புக்கான வேலைவாய்ப்புகள் பெருநகரங்களில்தான் இருக்கின்றன. தொழில்மயமாக்கம் பரவலாக்கப்படாமல் ஒருசில நகரங்களைச் சுற்றியே இருப்பதால் இந்த நிலை. படித்தவர்கள் தில்லிக்கும், மும்பாய்க்கும், சென்னைக்கும், இது போன்ற நகரங்களுக்கும் புலம் பெயர்வதற்கு இதுவே காரணம்.

தீர்வு : தொழில் மயமாக்கம் பரவலாக்கப்படவேண்டும். சிறந்த சாலை வசதிகள் நாடு முழுவதும் செய்து தரப்பட வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் தரமான 4 / 6 வழி சாலைகள் அமைக்கப்பட வேண்டும். அதிக அளவில் துறைமுகங்களும் விமான நிலையங்களும் நாடு முழுவதும் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பகுதி / மாநிலப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

2) காரணி : சிறந்த படிப்புக்கான வசதிகள் நகர்ப்புறங்களில் மட்டுமே இருப்பது. பெரும்பாலான கிராமப்புறங்களில் கல்லூரி வசதிகள் இல்லை. இருக்கும் சில கல்லூரிகளின் தரமும் பெரும்பாலும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் படிப்புசார்ந்து மாணவர்கள் புலம் பெயர்கிறார்கள்.

தீர்வு :  சிறந்த கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட வேண்டும். அந்தப் பகுதியின் மாணவர்களுக்கு, சேர்க்கையில் முன்னுரிமை வழங்கவேண்டும்.

3) காரணி : நசிந்துபோன விவசாயம் மற்றும் கிராமம் சார்ந்த தொழில்கள். இந்தியாவின் ஜனத்தொகைக்கு அதிக மக்களுக்கு வேலைதரக்கூடிய சாத்தியம் உள்ள துறை. விவசாயத்திலும், அது சார்ந்த கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் இருந்த பலர் இன்று நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புத்தேடி வருகின்றனர்.

விளைவு : இவர்களுக்கு சரியான சம்பளத்தில் வேலைவாய்ப்பு அமைவது இல்லை. சிறு விலைவாசி உயர்வும் இவர்களை மற்றவர்களைவிடக் கடுமையாகப் பாதிக்கிறது. வாடகை உயர்வு, விலைவாசி உயர்வு, வீட்டுக்குப் பணம் அனுப்புவதற்கான நிர்ப்பந்தம் இவற்றுக்கிடையில் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகும் வர்க்கம் இதுவே. இவர்களுக்கும் முதலில் சொல்லியவர்களுக்குமான இடைவெளி இப்போது அதிகமாகிக்கொண்டு போகிறது.இதனால் விளிம்பு நிலைக்குத்தள்ளப்படும் இவர்கள் போதுமான வருமானம் இல்லாததால் மீண்டும் கிராமங்களுக்குத் தள்ளப்படுகிறார்கள். அங்கும் போதுமான தொழில் வாய்ப்புகள் இல்லாததால் வன்முறை, நக்சலிஸம் இவை நோக்கி ஈர்க்கபடுகிறார்கள். தைரியம் இருப்பவர்கள் கடன் வாங்குகிறார்கள். இல்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தீர்வு : விவசாயம் மற்றும் கிராமம் சார்ந்த பொருளாதார வளர்ச்சிக்கு உடனடியாக முக்கியத்துவம் தரவேண்டும். இது சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ஊக்குவிப்புவழங்கவேண்டும். NREG போன்ற திட்டங்கள் யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டது போலத்தான். இதில் இருக்கும் நடைமுறை ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும். இதுபோன்ற திட்டங்கள் இன்னும் அதிகமாக செயல் படுத்தப்பட வேண்டும். இதற்கான ஆராய்ச்சித்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அவற்றிற்கு முன்னுரிமையும் ஊக்குவிப்பும் வழங்கப்படவேண்டும்.


நமது அரசாங்கம் நினைத்தால் நிச்சயம் இவை அனைத்தையும் செய்ய முடியும். என்ன செய்வது, அவர்களுக்கு இதைவிட பெரிய தலைவலிகளான ஊழலை மறைப்பது,  புது ஊழலுக்கு வழி கண்டுபிடிப்பது, எதிர்க்கட்சிகளை சாடுவது, கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்வது, ஓட்டுப் பொறுக்குவது ன்னு பல வேலைகள் இருக்கு...

அதனால, கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் ஏதாவது செஞ்சு இதுகள்லாம் செயலாக ஏற்பாடு செய்யணும்னு கேட்டுக்கரேன்.. ஏதோ என்னால முடிஞ்சது...

Thursday, January 6, 2011

விவசாயம் முன்னேற....

நம் நாடு இந்தியா விவசாய நாடு. பெரும்பான்மையான கிராம மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே நம்பி இருக்கிறார்கள். ஆனால் விவசாயத்துக்கான வசதி வாய்ப்புகள், வருமான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியாக விவசாயம் செய்தால்தால் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

விவசாயம் என்பது எங்கோ கிராமத்தில் செய்யப்பட்டு, விளைபொருள்களைமட்டும் நாம் வாங்கிக்கொள்ளும் இன்றைய நிலையில், முதலில் நமக்குத்தேவை அதுபற்றிய விழிப்புணர்வு. எனது நண்பனது மாமா விவசாயம் செய்து வந்தார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, மிகவும் விரக்தியுடன் "இந்த நாய்ப் பொழப்பு நம்மளோட போகட்டும் தம்பி" என்றார். "ஏன் அப்பிடி சொல்றீங்க"-னு கேட்டதுக்கு அவர் சொன்ன பதில் : "விவசாயிக்கு சலுகை, பெருமை எல்லாம் அவன் அத உட்டுட்டு வேற தொழிலுக்குப் போயிரக்கூடாதுங்றதுக்காகத்தான். அவன் முன்னேறி வேற தொழிலப் பாக்கப் போயிட்டா மத்தவங்களுக்கு சாப்பாடு கிடைக்காதுல்ல. அதான். இது ஒரு நிலை இல்லாத வருமானம் தர்ர தொழிலா இருந்தது. இப்ப இது நஷ்ட்டத்த மட்டுமே தர்ரதா ஆயிருச்சு. கொஞ்சம் நிலத்த வித்து என் பையன  இஞ்சினியருக்குப் படிக்கவச்சிருக்கேன்.  மீதி நிலத்த ஏதாவது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு வித்துட்டு நானும் அவன் கூடப் போயிரப்போரென்". கேட்டுட்டு ரொம்ப கஷ்டமாப் போயிருச்சு. இது இவருக்கு மட்டும் உள்ள பிரச்சினையாகத் தெரியவில்லை. இப்போது வருமானத்துக்கு வேறு வழியே இல்லாதவர்கள் மட்டுமே விவசாயத்தை செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலை நிச்சயம் மாறவேண்டும். இதற்கு நாம் என்ன செய்யவேண்டும்... அரசாங்கம் செய்யவேண்டியது என்ன?

அரசாங்கம் செய்யவேண்டியது :

விவசாய நிலங்களை பிற உபயோகத்துக்கு மாற்றுவதை தடை செய்யவேண்டும்.

விவசாய நீர் ஆதாரங்களான குளம், குட்டை, கண்மாய், ஏரி, அணை, வாய்க்கால் இவைகளைப் பாதுகாக்கவேண்டும். கரைகளை பலப் படுத்த வேண்டும். தூர்வாரி செம்மைப் படுத்தவேண்டும். கழிவுநீர், நன்னீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவேண்டும். இவைகளில் நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.

இயற்கைமுறை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கூட்டுறவு முறை விவசாயத்துக்கு மற்றும் பண்ணை சார்ந்த விவசாயத்துக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

சிறு விவசாயிகளுக்கு அனைத்து வங்கிகளிலும் வட்டியில்லாக் கடன் வழங்கப்படவேண்டும். அதற்கு பயிர்ப் பாதுகாப்புக்கும்  இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்யவேண்டும். ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும்.

தரமான விதைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் வருடம் முழுவதும் வேலைவாய்ப்பும் வருமான வாய்ப்பும் தரவேண்டும்.

ஒவ்வொரு விவசாயவட்டத்துக்கும் (5கி மீ சுற்றளவுக்கு)  விவசாய விளைபொருள்களைப் பாதுகாக்கும் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்துகொள்ள அனுமதிக்கவேண்டும். அந்த விலைக்கு வியாபாரிகள் வாங்க முன்வராதபோது அரசாங்கமே அவைகளை வாங்கி சில்லரைக் கடைகள் மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதற்கு இணைய, கணிணி வசதிகளை உபயோகிக்க வேண்டும். ஊகவணிகத்துக்குப் பதிலாக இருப்பு வணிகத்துக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

அனைத்து விவசாயக் கிராமங்களுக்கும் நல்ல சாலைவசதி செய்து தரப்பட வேண்டும்.

தடையில்லா மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் சலுகை விலையில் வழங்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செலவிடப்படும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும்( காலை 10லிருந்து 12 வரை, மதியம் 2 லிருந்து 4 மணிவரைம, இரவு 11 முதல் 3 மணிவரை  இதுபோல).


விவசாயத்துக்கு அரசாங்கமோ, தனியார் நிறுவனங்களோ Sponsor செய்ய வேண்டும். (இதற்கு ஈடாக விவசாய நிலங்களில் விளம்பரப்பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கலாம்-???) ஒவ்வொரு தனியார் நிறுவனமும் குறைந்தது இத்தனை ஏக்கர் விவசாயத்துக்கு Sponsor செய்ய நிர்ப்பந்திக்கவேண்டும். முடிந்தால் அவர்களே அந்த விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்று அல்லது வாங்கி பணத்தை விவசாயிகளுக்கு அளிக்கலாம்.

நாம் செய்யவேண்டியது :

நம்மால் முடிந்த அளவுக்கு விவசாய நிலங்களைப் பாதுகாக்கவேண்டும். நம்மிடம் உள்ள பாரம்பரிய விவசாய நிலங்களை விற்க நேர்ந்தால்  விவசாயிகளுக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில்களுக்கும் விற்கவேண்டும்.

நம்மிடையே நல்ல வசதி இருப்பவர்கள், விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கும் தொழில்களில் ஈடுபடவேண்டும்.


இதுக்கு மேலும் செய்ய முடிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான்... ஆண்டவா எங்க நாட்டு விவசாயிகளக் காப்பாத்துன்னு பிரார்த்தனை பண்ணணும். இல்லன்னா அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கஷ்டம்தான்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....

Wednesday, January 5, 2011

நாடாளுமன்றம் - தேவையா? - நமது தேர்தல் முறை சரியா?

சமீபத்தில் எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் நாடாளுமன்றம் செயல்படவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் பண இழப்பு ஏற்பட்டதாக செய்தி பார்த்தோம்.

நன்றாக யோசித்தால் நமக்கு இந்த நாடாளுமன்றம் எதுக்கு? வெறும் சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்துக்கள் மட்டும் போதாதா? இங்கு இருப்பவர்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தானே. இப்போதய கட்சிகள் மற்றும் தேர்தல் முறைகள் சரியா? இதுபற்றி எனது சிந்தனைகள்.

இன்று ஓட்டுப்போடுவதோடு ஒரு சாமானியனின் ஜனநாயகக் கடமை முடிந்துவிடுகிறது. இந்த நிலையை மாற்றவேண்டும். "Participatory Democrocy" - எல்லோரும் பங்குபெறும் ஜனநாயகம் தேவை.


கட்சிகள் :

1) அனைத்து கட்சிகளின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

2) கட்சிகளின் அடிப்படைக்கட்டமைப்புக்கள் பொதுமயக்கப்பட்டு(generalise), அவை ஜனநாயகமுறையில் தேர்தலில் குறைந்த பட்சம் ஒர் அளவு வாக்குகள் பெறும் பட்சத்தில்(மாநிலத்தில் 10% ஓட்டு அல்லது 10,00,000 வாக்குகள் - இதுபோல)  அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்போ, கட்சி அமைப்புக்களுக்கு  சம்பளமும்   தேர்தல் செலவுகளுக்கு பணமும் வழங்கலாம்.

3) கட்சிகளின் தேசிய / மாநிலத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அவை அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு, வருமான ஆதாரங்கள் முடிவுசெய்யப்பட்டு, அவைகளின் செயல்படுத்துதல் தன்மை(practicability) முடிவு செய்யப்படவேண்டும்.  இந்தத் திட்டங்கள் மட்டுமே manifesto - வில் சேர்க்கப்பட்டு, குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப்படவேண்டும்.

4) ஆட்சிக்கு வரும் கட்சியின் செயல்பாடுகள் அறிஞர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.

தேர்தல் :


மாநிலத்தேர்தலில் (தொகுதிகள் பெரிதாக்கப்பட்டு- ?), ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10,000 வோட்டு வாங்கும் அனைவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும். மாநில முதல்வராக கட்சி சார்பு இல்லாத ஒருவர் மாநிலப் பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவேண்டும். இந்த முதல்வர் தேர்தலில் அடுத்த 10 இடங்களில் வருபவர்கள் துணை முதல்வர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இவர்களே மாநில அமைச்சர்களாக பதவி வகிக்கவேண்டும்.

இந்தியாவில் ஒரு தேசியப் பொதுத் தேர்தல் மட்டுமே நடத்தப்படவேண்டும். ஒரு தலைவர் மட்டும் தேர்வு செய்யப்படவேண்டும். ஓரு அமெரிக்க ஜனாதிபதிபோல. இதில் கட்சி சார்புடையவர்கள் போட்டியிட தடைவிதிக்கவேண்டும். இவரே ஜனாதிபதி. இந்தத் தேர்தலில் அடுத்த 10 இடங்களில் வருபவர்கள் துணை ஜனாதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இவர்களே மத்திய அமைச்சர்களாக பதவி வகிக்கவேண்டும்.

நாடாளுமன்றத்துக்குப் பதிலாக :

நாடாளுமன்றத்துக்குப் பதிலாக மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலத்தின் பிரதிநிதிகளாக மத்திய அவையினரிடம் விவாதிக்க அனுமதிக்கப்படவேண்டும்.

ஊராளுமன்றங்கள் :

ஒவ்வொரு பள்ளி, கல்லூரி சார்ந்த பகுதிகளில் தொகுதி முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளும் ஊராளுமன்றங்கள் அமைக்கப்படவேண்டும். இவற்றில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்களிப்பு ஊக்குவிக்கப்படவேண்டும். ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களில் சில நாட்கள் இந்த ஊராளுமன்றங்கள் கூடி தொகுதியின் பிரச்சினைகள், தேவைகள், அரசுத்திட்ட செயல்பாடுகளின் தரம் மற்றும் இப்போதய நிலை இவைபற்றி விவாதிக்கவேண்டும். ஒவ்வொரு பகுதியின் அரசு அதிகாரியும் இவை பற்றிய விவரங்களை ஊராளுமன்றங்களுக்கு அளிக்கவேண்டும். ஊராளுமன்றங்களில் தொகுதியின் தேர்ந்த்டுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதிக்கவேண்டும். இவற்றின் விவாதத்தின் தீர்மானங்கள் /தீர்க்கப்படாத விஷயங்கள் உடனடியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை இந்தப் பிரதிநிதிகள் செய்யவேண்டும்.  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு இவை எடுத்துச்செல்லப்பட்டு குறைகள் களையப்படவேண்டும்.

இதில் முடியாத விஷயங்கள் சட்டமன்றத்தில் எழுப்பப்படவேண்டும். சட்டமன்றத்தில் முடியாத விஷயங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவேண்டும்.

சரியாகச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும்.


நமது தேசத்தில் புதிய சட்டங்களின் தேவையைவிட, இருக்கும் சட்டங்களை சரியாக அமல்படுத்தினாலே நமது தேசம் உன்னத நிலையை அடையும். நமது கண்காணிப்பு அமைப்புகள் சீர்குலைந்ததே நமது இன்றைய நிலைக்கு மூலகாரணம். இவற்றை சரியாக்கினால் நாமும் வல்லரசுதான். இவற்றின் அதிகாரிகள் சரியானால் நமது வளர்ச்சிப்பாதை ராஜபாட்டைதான்.

வாழ்க பாரதம்... ஜெய் ஹிந்த்...

Monday, January 3, 2011

நமது கல்விமுறை - ஒரு கனவு...

நமது தற்போதய கல்வி முறை, மனப்பாடம் செய்து அப்படியே எழுத வைப்பதை ஊக்குவிக்கும்விதமாக இருக்கிறது. இது சரியா?

ஒருவகையில் இது பணம் சம்பாதிக்கும் எளியவழியாம் ஒரு கம்பனியில் வேலை செய்து நமது சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் தகுதியை ஏற்படுத்தமட்டுமே உதவி செய்கிறது. மற்றபடி சுயசிந்தனை, சுயசார்பு, சமூகப்பொறுப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, அரசியல் சிந்தனை இவைகளை வளர்த்துக்கொள்ள இந்தக்கல்விமுறை உபயோகப்படவில்லை. நான், எனது, பணம் சம்பாதிதல் ஆகியவையே பிரதானமான நோக்கமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யவேண்டும்.

பெற்றோர் பொறுப்பு :

இன்றைய பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, தன்னால் செய்ய முடியாது விடுபட்ட பொருளாதார, புகழ் தாகத்தை தீர்க்கும் ஒரு கருவியாகவே நினைக்கிறார்கள். இன்றைய மீடியாக்களும் இதற்கு தூபம் போடும் விதமாகவே செயல்படுகின்றன.

அவ்வாறு பணம், புகழ் பெறும் குழந்தைகளுடன், தங்களின் குழந்தைகளை ஒப்பீடு செய்து அவர்களையும் அதுபோல நடக்கத்தூண்டுகிறார்கள். இவ்வாறு குழந்தைகளை நெறுக்கி, பின் அவர்களை நொறுக்கிவிடுகிறார்கள்.

நமது மதிப்பெண் சார்ந்த படிப்புகள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் விதமாகவே இருக்கிறது.

1) குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கவேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை செய்தல், தன்னைப்போல பிறரையும் கருதும் தன்மை, பிறருக்கு விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை, தைரியம், துணிச்சல்...
2) மதிப்பெண்மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்தவேண்டும்.
3) குழந்தைகளின் தனித்திறன் மற்றும் தனி ஆர்வம் உடைய துறைகளில் அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
4) நமது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஊட்ட வேண்டும்.
5) நமது கலாச்சார மதிப்புகளைக் கற்றுத்தர வேண்டும்.
6) பிற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்யாமல் இருக்கவேண்டும்.

கல்விக்கூடங்களின் பணி :

இன்றைய பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் பணம் பண்ணும் கருவிகளாக இருக்கின்றன. கல்வி என்பது வியாபரமாகிப்போனது.

1) கல்விக்கூடங்கள் குருகுலமாகவும், ஆசிரியர்கள் குருவாகவும் இருந்தநிலை மீண்டும் ஏற்படவேண்டும்.

2) அனைத்துக் கல்விக்கூடங்களையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.

3) குழந்தைகளுக்கு விளையாட்டுமுறையில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். வாழ்வியல் கல்வி போதிக்கப்பட வேண்டும். நமது தேசிய வரலாறும், தலைவர்களின் தியாகமும் போதிக்கப்படவேண்டும். நமது கலாச்சார பாரம்பரிய வரலாறு கட்டாயமாக்கப் போதிக்கப்படவேண்டும்.

4) அனைத்து பள்ளிகளில் சட்டமன்றம்போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

5) குழந்தைகளும், ஆசிரியர்களும் அவர்களின் பகுதிகளின் குறைகளைத் தொகுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

6) தமது பகுதிகளில் நடக்கும் அரசு வேலைகளில் உள்ள குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

7) மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த பள்ளி சட்டமன்றங்கள் கூடி விவாதிக்கவேண்டும். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தனது அதிகாரிகளுடன் இதில் கலந்துகொள்ளவேண்டும். அவர் கலந்துகொள்ளமுடியாத பட்சத்தில், அவரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறைகளைக் களைய ஏற்பாடு செய்யவேண்டும்.

8) இந்த சமூகப்பொறுப்பில் ஆவலுடன் பங்குபெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, ஒரு நல்ல தலைவன் உருவாக ஒரு வாய்ப்பு இளம் பருவத்திலேயே ஏற்படும்.


எழுதிப்படிக்கிரப்ப நல்லாத்தான் இருக்கு... நடைமுறையில்.... நம்ம அரசியல்வாதிகள் தன் வாரிசுகளைத்தவிர மற்றவர்கள் வளர்வதை மட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

என்ன செய்வது, சிந்திக்கவாது செய்கிறேன்... என்னிக்காவது இந்தக்கனவு நனவாகலாம்... அந்த மஹாலிங்கத்துகிட்ட வேண்டிக்கிறேன்.

ஹர ஹர மஹாதேவா போற்றி....