Wednesday, March 30, 2011

பாவமும் புண்ணியமும்..

பொதுவாக, ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படும் நன்மையும் தீமையும் அவரவர் வாழ்வின் பாவ புண்ணியங்கள்படியே என்று கூறப்படுகிறது. இது எல்லாமதங்களிலும் வெவ்வேறு முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும் எனக்கு வெகு நாட்களாக இருந்த சந்தேகம் எல்லாம், இன்னிக்கு யார் அதிகம் குறுக்கு வழியில் போகிறார்களோ அவர்கள் தான் விரைவில் முன்னுக்கு வருகிறார்கள். அதிக பாவம் அதிக முன்னேற்றமா??

பாவம் மட்டுமே ஒரு மனிதன் செய்வதில்லை, கொஞ்சமாவது புண்ணியம் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கவேண்டும். இந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அந்தப் புண்ணியம் ஏன் அவனைக் காப்பதில்லை?

ஒரு  மனிதன் ஏன் பாவமோ புண்ணியமோ செய்யவேண்டும்? எது செய்தாலும் அது பாவ புண்ணியத்தில் பதிந்துவிடுமா??

பாவமோ புண்ணியமோ சேராமல் எப்படி வாழ்வது??

இது பற்றி எனது பலவித நண்பர்களுடன் நான் (பல வருடங்களுக்கு முன்)  விவாதித்த  பொழுது நான் புரிந்துகொண்டதன் சாராம்சமே இந்தப் பதிவு.


முதலில் ஒரு மனிதனுக்கு பாவமும், புண்ணியமுமே அவன் ஞானத்தை மறைக்கும் திரைகள். ஆம்.. புண்ணியமும் ஒரு மனிதனை ஞானத்தை விட்டு விலகச்செய்யும்.

ஒரு மனிதன் பாவம் செய்யும் போது பாவம் சேர்வது போல புண்ணியம் செய்யும்போது புண்ணியமும் சேரும். ஆனால் (வெகு)சில நேரங்களில் சில பாவங்கள் புண்ணியத்தையும் சில புண்ணியங்கள் சில பாவத்தையும் தொலைக்க வல்லவை. அது மட்டும் விதி விலக்கு. அது தவிர, அனைத்து பாவ புண்ணியங்களும் சுமைதான்.

ஒரு மனிதன் இந்த உலகில் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய முனையும்போது, சில செயல்களை செய்ய நேரிடுகிறது.  அதை கர்மா என்று சொல்கிறார்கள். இந்த கர்மா தான் பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுகிறது.

இவ்வாறு கர்மா பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுவதற்குக் காரணம் ”நாம்” அந்த கர்மாவை செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமும், அந்த கர்மாவினால் ஏற்படும் பலன், விளைவுகளைப்பற்றிய சிந்தனைகளுமே. எனவே அகங்காரத்தை விட்டுவிட்டால் நாம் செய்யும் கர்மா எதுவும் நம்மை சேராது. பலனுக்காக கர்மா செய்யாமல் இருந்தாலும் சேருவதில்லை.

அகங்காரம் இல்லாமல் நமக்கு ஒரு அடையாளம் இருக்காது. எனவே நாம் செய்யும் கர்மாக்களை கடவுளே செய்வதாக பாவனை செய்துகொண்டு செய்தால் நாளடைவில் இந்த கர்மாக்கள் சேர்வது மட்டுப்படும், குறையும். எப்போது கர்மாக்களை கடவுள் நிலையில் நம்மை நிறுத்தி செய்கிறோமோ அப்போது அது தவறான செயலாக இருந்தால் நமக்கு உடனடியாகத் தெரிந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பாவ புண்ணியத்தின் பலன்கள் இடம், பொருள், ஏவல், காலம் இவை பொறுத்தே ஒரு மனிதனுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனின் புண்ணிய பலன்கள் அனுபவிக்கும் காலத்தில் பாவமூட்டை அமைதியாக இருக்கிறது. அவன் அந்த புண்ணியத்தின் அகந்தையில் மேலும் செய்யும் பாவங்கள் அதில் சேர்ந்துகொண்டே போகிறது.

பல நேரங்களில் ஒருவன் பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன்களை ஒருசேர அனுபவிக்க நேரிடுகிறது. அப்போது அவற்றின் வீரியத்துக்குத் தகுந்தாற்போல் பாவத்தின் விளைவுகளை புண்ணியம் தடுக்கமுடியாவிட்டாலும், குறைக்கவாவது செய்கிறது.

தனி மனிதனுடைய பாவ புண்ணியங்கள் நம் உலகத்தின் பொது மனதில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம் சமூகத்தில், வன்முறைகளும், சமூக விரோத செயல்களும்,  லஞ்ச ஊழலும் பெருகுவதற்கு தனிமனித பாவபுண்ணியங்களால், பொது மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே மூல காரணம்.

நாம் இருக்கும் காலம் கலிகாலம் எனப்படுகிறது. இந்த கலிகாலத்தில் கெட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், நல்லவர்களை கஷ்டப்படுத்தும் விதமாகவுமே காரியங்கள் நடைபெறுமாம். எனவே குறுக்கு வழியில் செல்பவர்களே அதிக முன்னேற்றத்தை அடைவது தவிர்க்க முடியாது.

இந்த பாவமும் புண்ணியமும் நாம் இறந்த பிறகும் நம்மைத் தொடர்வதாகவும் அவற்றை பல பிறவிகள் எடுத்து அனுபவித்து கழிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதையே சித்தர்கள் பிறவிப்பிணி என்று சொன்னார்கள்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் இந்தமாதிரி பாவ புண்ணியங்கள்ல இருந்து எங்களுக்கு விடுதலை குடுத்து, ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

2 comments:

பாலா said...

அன்புள்ள சங்கர் குருசாமி,

அருமையான பதிவு இது,

பாவ புண்ணியங்களை பற்றிய தெளிவான கருத்துகள் அடங்கிய பதிவு.

ப‌த்திர‌கிரியாரின் பார்வையில்...

தானென்ற‌ ஆண‌வ‌முந் தத்துவ‌முங் கெட்டொழிந்தே
ஏனென்ற‌ பேச்சுமிலா தில‌ங்குவ‌து தெக்கால‌ம் ?

மாய‌த்தை நீக்கி வருவினையைப் பாழாக்கிக்
காய‌த்தை வேறாக்கிக் காண்ப‌துனை எக்கால‌ம் ?



பாலா‍

Sankar Gurusamy said...

பாலா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...