Friday, April 15, 2011

மக்களை விட்டு முற்றிலும் விலகிய அரசியல்வாதிகள்..

உயர்திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம் நடந்த போது லோக்பால் குழுவில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் அமைச்சர்களும் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர் என்பதே.

அப்படியென்றால் அவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதி இல்லையா? அப்படி இல்லை என்றால் ஏன்?

இந்த முக்கியமான கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.. இதற்கு பதில் இது பற்றிய டிவி விவாதங்களில் கிடைத்தது..

இப்போது நம் சமூகம் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கிறது. முதல் பிரிவு அரசியல்வாதிகள், இரண்டாம் பிரிவு அரசு அதிகாரிகள், மூன்றாம் பிரிவு பொதுமக்கள்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களை ஆள்வதற்காக இருக்கிறார்கள். அது நல்லாட்சியாக இருக்க வேண்டியதற்கு முக்கிய காரணி ஒருவ்வொருவர் மீதும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அது இப்போது இல்லாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.


அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் உண்மையில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற காரியங்களை செய்வதில்லை. எனவே அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல..

அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இவர்கள் தத்தமது சொந்த ஆதாயங்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காவுமே காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களும் மக்களுக்காக யோசிக்கப்போவதில்லை.

இப்போதய பெரும்பாலான அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் பொது மக்களைவிட்டு வெகுதொலைவு விலகிவிட்டார்கள். எனவேதான் மக்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை.

என்வேதான் நமது பொதுமக்கள் எங்கள் பிரதிநிதியும் சட்டங்கள் உருவாக்குவதில் பங்குபெறவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


இது உண்மையில் ஜனநாயகத்தின் அடிநாதத்தைக் கேலிக் கூத்தாக்குவதாக இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளான அரசியல்வாதிகளைவிட திரு அன்னா ஹசாரேயால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் நம்புவது நம் ஜனநாயகத்தின் கோர நிஜம்.


இப்போது நாம் கவனமாக இருக்கவேண்டியது கீழ்க்கண்ட விசயங்களில்தான்:

1) எப்படிப்பட்ட சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சரியாக இல்லாதபட்சத்தில் அது வீணாகவே போகும். அந்த கதி இந்த ஜன் லோக்பால் சட்டத்துக்கு ஏற்படாமல் இருக்கவேண்டும்.

2) எவ்வளவோ நேர்மையான அமைப்புகளை வெற்றிகரமாக ஆக்கிரமித்த, கெடுத்த நம் கேடுகெட்ட அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட பொதுமக்கள் அமைப்புகளையும் கெடுப்பதற்கு வெகுகாலம் ஆகாது.

இது நம் ஜனநாயகத்தின் இன்னொரு கோர முகம்.

கடவுள்தான் இதுக்கெல்லாம் ஒரு வழி சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

2 comments:

shanmugavel said...

யோசிக்க வேண்டிய விஷயம்தான்.பகிர்வுக்கு நன்றி.தமிழ்மணத்தில் உங்களுக்கு நீங்களே ஒரு ஓட்டு போட்டுக்கொள்ளுங்கள் .0 வை விட 1 பார்க்க நன்றாக இருக்கும்.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.