Wednesday, March 30, 2011

பாவமும் புண்ணியமும்..

பொதுவாக, ஒரு மனிதன் வாழ்வில் ஏற்படும் நன்மையும் தீமையும் அவரவர் வாழ்வின் பாவ புண்ணியங்கள்படியே என்று கூறப்படுகிறது. இது எல்லாமதங்களிலும் வெவ்வேறு முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும் எனக்கு வெகு நாட்களாக இருந்த சந்தேகம் எல்லாம், இன்னிக்கு யார் அதிகம் குறுக்கு வழியில் போகிறார்களோ அவர்கள் தான் விரைவில் முன்னுக்கு வருகிறார்கள். அதிக பாவம் அதிக முன்னேற்றமா??

பாவம் மட்டுமே ஒரு மனிதன் செய்வதில்லை, கொஞ்சமாவது புண்ணியம் அறிந்தோ அறியாமலோ செய்திருக்கவேண்டும். இந்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அந்தப் புண்ணியம் ஏன் அவனைக் காப்பதில்லை?

ஒரு  மனிதன் ஏன் பாவமோ புண்ணியமோ செய்யவேண்டும்? எது செய்தாலும் அது பாவ புண்ணியத்தில் பதிந்துவிடுமா??

பாவமோ புண்ணியமோ சேராமல் எப்படி வாழ்வது??

இது பற்றி எனது பலவித நண்பர்களுடன் நான் (பல வருடங்களுக்கு முன்)  விவாதித்த  பொழுது நான் புரிந்துகொண்டதன் சாராம்சமே இந்தப் பதிவு.


முதலில் ஒரு மனிதனுக்கு பாவமும், புண்ணியமுமே அவன் ஞானத்தை மறைக்கும் திரைகள். ஆம்.. புண்ணியமும் ஒரு மனிதனை ஞானத்தை விட்டு விலகச்செய்யும்.

ஒரு மனிதன் பாவம் செய்யும் போது பாவம் சேர்வது போல புண்ணியம் செய்யும்போது புண்ணியமும் சேரும். ஆனால் (வெகு)சில நேரங்களில் சில பாவங்கள் புண்ணியத்தையும் சில புண்ணியங்கள் சில பாவத்தையும் தொலைக்க வல்லவை. அது மட்டும் விதி விலக்கு. அது தவிர, அனைத்து பாவ புண்ணியங்களும் சுமைதான்.

ஒரு மனிதன் இந்த உலகில் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்ய முனையும்போது, சில செயல்களை செய்ய நேரிடுகிறது.  அதை கர்மா என்று சொல்கிறார்கள். இந்த கர்மா தான் பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுகிறது.

இவ்வாறு கர்மா பாவமாகவோ புண்ணியமாகவோ மாறுவதற்குக் காரணம் ”நாம்” அந்த கர்மாவை செய்கிறோம் என்ற அகங்கார எண்ணமும், அந்த கர்மாவினால் ஏற்படும் பலன், விளைவுகளைப்பற்றிய சிந்தனைகளுமே. எனவே அகங்காரத்தை விட்டுவிட்டால் நாம் செய்யும் கர்மா எதுவும் நம்மை சேராது. பலனுக்காக கர்மா செய்யாமல் இருந்தாலும் சேருவதில்லை.

அகங்காரம் இல்லாமல் நமக்கு ஒரு அடையாளம் இருக்காது. எனவே நாம் செய்யும் கர்மாக்களை கடவுளே செய்வதாக பாவனை செய்துகொண்டு செய்தால் நாளடைவில் இந்த கர்மாக்கள் சேர்வது மட்டுப்படும், குறையும். எப்போது கர்மாக்களை கடவுள் நிலையில் நம்மை நிறுத்தி செய்கிறோமோ அப்போது அது தவறான செயலாக இருந்தால் நமக்கு உடனடியாகத் தெரிந்து தப்பித்துக் கொள்ளலாம்.

பாவ புண்ணியத்தின் பலன்கள் இடம், பொருள், ஏவல், காலம் இவை பொறுத்தே ஒரு மனிதனுக்கு வழங்கப்படுகிறது. ஒரு மனிதனின் புண்ணிய பலன்கள் அனுபவிக்கும் காலத்தில் பாவமூட்டை அமைதியாக இருக்கிறது. அவன் அந்த புண்ணியத்தின் அகந்தையில் மேலும் செய்யும் பாவங்கள் அதில் சேர்ந்துகொண்டே போகிறது.

பல நேரங்களில் ஒருவன் பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன்களை ஒருசேர அனுபவிக்க நேரிடுகிறது. அப்போது அவற்றின் வீரியத்துக்குத் தகுந்தாற்போல் பாவத்தின் விளைவுகளை புண்ணியம் தடுக்கமுடியாவிட்டாலும், குறைக்கவாவது செய்கிறது.

தனி மனிதனுடைய பாவ புண்ணியங்கள் நம் உலகத்தின் பொது மனதில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. நம் சமூகத்தில், வன்முறைகளும், சமூக விரோத செயல்களும்,  லஞ்ச ஊழலும் பெருகுவதற்கு தனிமனித பாவபுண்ணியங்களால், பொது மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே மூல காரணம்.

நாம் இருக்கும் காலம் கலிகாலம் எனப்படுகிறது. இந்த கலிகாலத்தில் கெட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், நல்லவர்களை கஷ்டப்படுத்தும் விதமாகவுமே காரியங்கள் நடைபெறுமாம். எனவே குறுக்கு வழியில் செல்பவர்களே அதிக முன்னேற்றத்தை அடைவது தவிர்க்க முடியாது.

இந்த பாவமும் புண்ணியமும் நாம் இறந்த பிறகும் நம்மைத் தொடர்வதாகவும் அவற்றை பல பிறவிகள் எடுத்து அனுபவித்து கழிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதையே சித்தர்கள் பிறவிப்பிணி என்று சொன்னார்கள்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் இந்தமாதிரி பாவ புண்ணியங்கள்ல இருந்து எங்களுக்கு விடுதலை குடுத்து, ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Friday, March 25, 2011

ஆன்மீக ஞானம்

எனது ஆன்மீகப்பயணத்தில் ஞானம் பற்றியும் ஞானிகள் பற்றியும் நான் கேள்விப்பட்ட விஷயங்களின் தொகுப்பே இந்தப்பதிவு..

நான் ஆன்மீகப் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது, ஞானம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? எப்படி அடைவது? அது வந்ததற்கான அடையாளங்கள் என்ன??? இப்படி பல கேள்விகள் எனக்குள் தொக்கி இருந்தது.

பதில் தெரியாமல் பலரையும் தொந்தரவு செய்திருக்கிறேன். கடைசியில் ஓரளவுக்கு விசயம் தெரிந்த சில நண்பர்கள் அது பற்றி என்னுடன் பகிர்ந்தது :


1) முதலில் ஞானம் என்று ஒன்று இருக்கிறது என நம்பவேண்டும். இந்த நிலையில்  அதிகம் கேள்விகள் கேட்பவகளுக்கு அது பின்னால் புரியாமலே போய்விடும்.

2) அதற்கு வழிகாட்டும் குரு ஒருவரை அடையவேண்டும். நானே அடைந்துகொள்கிறேன் என்பது இங்கு வேலைக்காகாது. ஞானம் அடையும் வேட்கை உடைவர்களுக்கு குரு தானாக அமைவார் என்றும் கூறுகிறார்கள்.

3) அவர் காட்டும் பாதையில் கேள்விகேட்காமல் செல்லவேண்டும். அதிக கேள்விகள் அதிக தாமதம்.


ஞானம் என்பது தான் ஒரு மனிதன் அடைய வேண்டிய உண்மையான உன்னதமான இலக்கு. பணமோ, பதவியோ, புகழோ இல்லை.  ஞானம் அடையாமல் இவைகளை அடைந்தால் பேரழிவுதான்.

எல்லா மதங்களும், ஆன்மீக சாதனைகளும் மனிதனை ஞானத்தை நோக்கியே தள்ளுகின்றன. 

ஞானத்தை அடைய பல படிகள் இருப்பதாக கூறப்பட்டாலும் எதுவுமே இந்த  வரிசைப்படிதான் நடக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

பல பிறவிகளில் சாதனை செய்தும் ஞானம் அடையாதவர்களும் உண்டு. ஒரே வினாடியில் ஞானம் அடைபவர்களும் உண்டு.  எனவே இதற்கு கால அவகாசமும் கணித்துக் கூற முடியாது.

ஒரு ஆகாசம் போல, காலம் போல, ஒரு கட்டுக்குள், ஒழுங்குக்குள் அடைக்க முடியாதது ஞானம். ஆனாலும் அது கட்டுப்பாடான ஒழுக்கமானது.


ஞானத்தை மனிதனாகிய நாம் அடைகிறோம் என்று கூறுவதைவிட, மனிதனாகிய நம்மை ஞானமே தேடி வந்தடைய வேண்டும். இல்லாவிட்டால் அடைய முடியாது.

“அவனருளால் அவன் தாள் வணங்குதல்”

ஞானத்தை அடையும் கருவியே நம் மனம். அந்தக் கருவியை சுமக்கும் வாகனமே நம் உடல். நம் மனத்தின் உயிர் ஞானம். எனவே இது நம்மை நாமே தேடுவதுபோன்றது.


ஏதாவது ஒரு பிறவியில் எப்படியாவது யார் மூலமாகவாவது இந்த ஞானம் மனிதனை அடைகிறது. அதை படைத்தவனே அறிய முடியும்.


கடவுளே!! மஹாலிங்கம், நீங்கதான் எங்களுக்கு ஞானத்தை விரைவில் கொடுத்து அருளணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

Monday, March 21, 2011

மீண்டும் இலவசங்கள்....

இலவசங்கள் பற்றிய முந்தய பதிவு :

இலவசங்கள் - தேவையா? என்ன குடுக்கலாம் (!) (?)


சென்ற சட்டமன்றத்தேர்தலில் தேர்தல் அறிக்கைகள் தான் கதாநாயகியாக செயல்பட்டன. ஏனெனில் அவற்றில் ஏராளமான இலவசத் திட்டங்களும், சில மக்கள் நல(??) கவர்ச்சித் திட்டங்களும் இருந்தன. இப்போது 2011 தேர்தலிலும், இலவசங்கள் முன்னிருத்தப்படுகின்றன. முன்பு டிவி, இப்போது கிரைண்டர், மிக்சி, லேப்டாப், அரிசி என்று பட்டியல் நீள்கிறது. மாற்றுக் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் வேறு என்ன இலவசங்கள் அறிவிக்கப்படும் என்ற பரபரப்பு நிலவுவதை தடுக்க முடியவில்லை.

நாய்க்கு எலும்புத்துண்டு வீசுவது போல, மக்களுக்கு இந்த இலவசங்கள் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு கடைசியில் திருவோடும், பிச்சை எடுக்க அரசு அலுவலகங்களுமே மிஞ்சும் என்று தோன்றுகிறது.

யாருமே இது நமது வரிப்பணம் என்று சிந்திப்பது இல்லை. உண்மையில் வருமான வரிக் கட்டுபவர்கள் தான் வரிக் கட்டுகிறார்கள் என்று எண்ணுகிறார்கள். நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் வரி கட்டப்பட்டிருக்கிறது..

அன்றாடம் உபயோகப்படும், சோப்பு, துணிமணிகள், மற்றும் பல அன்றாட உபயோகப்பொருள் அனைத்துக்கும் அரசு வரி விதிக்கிறது. அதில் வரும் வரி வருமானத்தைக் கொண்டுதான் இந்த இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.

மேலும் மக்களை நிரந்தரக் குடிகாரர்களாக ஆக்கி, அதில் வரும் வருமானமும் அதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

இங்கு யாருக்கும் யோசிப்பதற்கு அவகாசமில்லை. ”கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு இதுவும் கிடைக்காது.” என்ற மனோபாவமே மேலோங்கி இருக்கிறது.

பொதுமக்கள் சிந்தனையில் இப்போது, நமது அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பற்றி கீழ்க்கண்ட சிந்தனையே பொதுவாக இருக்கிறது :

1) நமக்குத் தேவையானபோது இவர்கள் உதவுவதில்லை
2) நமக்குத் தேவையானவற்றை இவர்கள் செய்யப்போவதில்லை.
3) இவர்கள் இஷ்டம்போல பொது சொத்துகளை கொள்ளை அடிக்கிறார்கள்.
4) இவர்கள் இஷ்டம்போல ஊழல் செய்து சொத்து சேர்க்கிறார்கள்.
5) இவ்வாறு செய்வது அவர்களின் பிறப்புரிமை. இவ்வாறு செய்யாதவர்கள் / செய்யத் தெரியாதவர்கள் - பிழைக்கத் தெரியாதவர்கள்.
6) இவர்களிடம் இருந்து, நமக்கு சந்தர்ப்பம் வரும்போது, நாமும் முடிந்த அளவு பிடுங்கிக்கொள்ளவேண்டும்.

இந்த மனநிலையில்தான், மக்கள் வோட்டுப் போட பணம் வாங்குவதும், இல்வசங்களுக்காக ஓட்டுப் போடுவதும் நடக்கிறது.

இந்தத் தேர்தலிலும் நாம் (பதிவர்கள், சமூக ஆர்வலர்கள்,  பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள்) எவ்வளவுதான் கூவினாலும் மக்கள் தீர்ப்பு, யார் அதிக இலவசங்கள் தருவார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும்போலத்தான் தெரிகிறது.

என்ன செய்வது, கடைசியில், நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து நம் மக்களை பிச்சைக்காரர்களைவிடக் கேவலமாக ஆக்கிவிட்டார்கள்.


கடவுளே!!! என் தேசத்தை நீங்கதான் காப்பாத்தணும்....

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

Friday, March 18, 2011

நம் ஜனநாயகம் ஒரு பணநாயகம்....

நேற்று பாராளுமன்றத்தில், சில உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விஷயமாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு கேபிள் பற்றி,  நடந்த புயலைப் பார்த்துவிட்டு, நம் நாட்டில் நடப்பது ஜனநாயகமா அல்லது பண நாயகமா என்ற சந்தேகம் மீண்டும் வந்துவிட்டது .

இதற்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒருமுறை பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் பணத்தை எடுத்து லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புயலைக் கிளப்பியுள்ளார்கள்.

மேலும், ஒருமுறை அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் பெற்றதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.

இதைவிடக் கேவலமாக, சில கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்காக, லஞ்சம் கேட்ட உறுப்பினர்களை சில ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பி தேசத்தின் மானத்தை காற்றில் பறக்க விட்டனர்.

இவ்வளவுக்குப்பிறகும் நாம்தான் உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது.

என்ன செய்வது? இங்கு ஜனநாயகத்தின் எல்லாமட்டத்திலும், எல்லாவற்றிற்கும் பணம் விளையாடுகிறது...

தேர்தலுக்கு முன் :

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

தனித்து நிற்கவும் பணம். - கட்சிகளுக்கு

தேர்தலில் நிற்க பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

தேர்தலில் நிற்காமலிருக்கப் பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

ஓட்டு சேர்க்க பணம். - வாக்காளர்களுக்கு

ஓட்டு பிரிக்கப் பணம். - வேட்பாளர்களுக்கு

ஓட்டு போடப் பணம். - வாக்காளர்களுக்கு

தேர்தலுக்குப் பின்:

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

கூட்டணி மாற வைக்க பணம்.- கட்சிகளுக்கு

பிரதிநிதிகள் ஓட்டுப் போடப் பணம்.  - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

பிரதிநிதிகள் ஓட்டு மாற்றிப் போடப் பணம். - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்காமல் இருக்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

தமக்கு சாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு

எதிரிகளுக்கு பாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு


இன்றைய சூழலில் அரசியல் என்பது மக்கள் சேவை என்பது போய், பணம் சம்பாதிக்கும் அல்லது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு தொழில் என்ற நிலை வந்துவிட்டது. இதுவே நம் ஜனநாயகத்துக்கு விதிக்கப் பட்ட சாபக்கேடு.

யார் ஆண்டாலும் பணம், பணம், பணம்.....

நம் தேசத்தின் பணப்புழக்கம், நம் ஜனநாயகத்தைச் சுற்றியே இருக்கிறது. அதனால்தான் இன்று நல்லவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.

இருக்கும் சில நல்லவர்களும் துரத்தி அடிக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நம் ஜனநாயகத்தை இனி பணநாயகம் என்றே அழைப்போம். இந்தப் பண வெள்ளத்தில் மக்கள் நலன் என்ற வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை நேர்மையாளர்கள் வேதனையோடு கவனிக்கிறார்கள்.


கடவுளே!!! இந்த நிலை மாறி அரசியல் என்பது மக்கள் சேவை என்ற உணர்வு உள்ளவர்கள் நம் பிரதிநிதிகளாகி, பணநாயகம் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் காப்பாற்றப் பட நீங்கள்தான் அருள் செய்யணும்.

ஓம் நம சிவாய... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி....

Wednesday, March 16, 2011

வாக்காளர்களே விழிப்படையுங்கள்!!!

இப்போது தேர்தலில் பிரச்சாரம் செய்ய அனைத்து தலைவர்களும் தயாராகி வருகிறார்கள். விரைவில் நம் தலைவர்கள் தொகுதி வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு தங்களின் கட்சிக்கு வாக்கு சேகரிக்க வருவார்கள். இந்த பிரச்சாரங்கள் செய்யும்போது நம் ஆழ்மனதில் என்ன நடக்கிறது என்பது பற்றிய எனது சிந்தனைகள்..

இதுபற்றி சரியாகப் புரிந்து கொள்ள முதலில் நாம் விளம்பரப்படுத்துதல் பற்றி நன்றாக அறிய வேண்டும்.

இப்போது எந்த ஒரு பொருளையும் விளம்பரப்படுத்துகிறார்கள். அவ்வாறு விளம்பரப்படுத்துவதற்கு முன் நம் மனதில் அது பற்றி ஒரு அபிப்ராயம் இருக்கும். இந்த விளம்பரத்தைப் பார்த்த பிறகு நம் மனதில் ஒரு நேர் அல்லது எதிர்மறை மாற்றம் ஏற்படும். அதே பொருளைப்பற்றி மீண்டும் மீண்டும் விளம்பரம் வரும்பொழுது அந்தப் பொருளை நம் தேவைக்கேற்ப வாங்க தூண்டும். இதுவே விளம்பரங்களின் யுக்தி.

அதுவும் அந்த விளம்பரத்தில் ஏதாவது ஒரு பிரபலம் இருந்துவிட்டால் இன்னும் ஆழமாக அது மனதில் ஊடுருவும். இப்படி பலர் மனதில் அந்த விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அது பற்றிய ஒரு பொது அபிப்பிராயத்தை உண்டுபண்ணுகிறது.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மனம் இருப்பதுபோல ஒரு பொது மனமும் எல்லாருக்கும் பொதுவாக இருக்கிறது. ஒரு பொருளைப்பற்றி பெரும்பாலோர் மனதில் எழும் சிந்தனைகள் இந்த பொதுமனதில் பதிந்திருக்கும். அந்தப்பொருள் பற்றி ஒன்றும் தெரியாத ஒருவர் அந்த பொருளைப்பற்றி கேள்விப்படும் / சிந்திக்கும் போது அந்த பொதுமனதில் இருக்கும் ஒரு நேர் அல்லது எதிர்மறை அபிப்பிராயம் அவர் மனதில் தானாக பிரதிபலிக்கும். அதற்குமேலும் வலுசேர்க்கும் விதமாக மேற்படி விளம்பரங்களை அவர் கேட்க/பார்க்க நேரிடும்போது அந்த அபிப்பிராயம் மேலும் வலுப்பெறுகிறது. இதை ஆங்கில‌த்தில் "Brand Building" என்று கூறுகிறார்க‌ள்.

இவ்வாறு ஒருவர் ஒரு பொருளை சந்தைப்படுத்துவ‌தற்கு அதன் விளம்பரப்படுத்துதல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. குறைந்தபட்ச தரம் அந்த பொருளுக்கு இருக்கும் வரை விளம்பரங்கள் அந்தப் பொருளை நிச்சயம் விற்றுக் கொடுக்கும்.


இந்த விளம்பரத் தத்துவத்தில்தான் நம் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நம் ஆழ்மனதில் செயல்படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒரு பிராண்ட் போல. அதற்கென்று ஒரு பெயர் (நல்லதோ கெட்டதோ, சூழ்நிலைக்குத்தகுந்தவாறு) இருக்கிறது. பொது மனதில் இந்த நற்பெயரை மேலும் வளர்த்து அதை வாக்குகளாக மாற்றவே இந்த பிரச்சாரப்போராட்டம். 

இந்த களேபரத்தில், இனிமேல் மக்களுக்கு நல்லது செய்பவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, இப்போது கெட்டது செய்பவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என்பதே பிரதானமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே நம் அரசியல் கட்சிகள், நல்லது செய்வதை மறந்துவிட்டு, மக்கள் மனதில் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி, மாற்றி மாற்றி குதிரை ஏறிக்கொண்டு இருக்கின்றன. உஷார்....

எனவே, வாக்காளர்களே விழிப்படையுங்கள்.. போலி விளம்பரம் போன்ற பிரச்சாரங்களை நம்பாமல், உங்கள் தொகுதியின் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும் வேட்பாளர் யார் என ஆராய்ந்து அவருக்கு வாக்களிக்க முன்வாருங்கள். அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அல்லது சுயேச்சையாக இருந்தாலும்.  

நமக்குத் தேவையான உண்மையான மாற்றம் நமக்கு நல்லது செய்பவர்களாலேயே ஏற்படும். எனவே அப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்க நாம் முயற்சி செய்வோம்.

கடவுளே, இப்படிப்பட்ட நல்லது செய்பவர்களை வாக்காளர்களுக்கு அடையாளம் காட்ட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!!

Tuesday, March 15, 2011

தேர்தலும் பணமும் நம் ஜனநாயக்கடமையும்

இப்போதெல்லாம் அடிக்கடி செய்திகளில் வாகன சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் கண்டுபிடிக்கப்படுவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ 20 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.

அதுவும் பிடிபட்டது மட்டுமே இவ்வளவு என்றால், பிடிபடாதது, பிடித்தும் கண்டுகொள்ளாமல் (??) விடப்பட்டது எவ்வளவு இருக்கும் என கணக்குப் பண்ண முடியவில்லை.

இந்த தேர்தல் நேரத்தில் வாகன சோதனை செய்வதால் மட்டும் இவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் சில மாதங்களுக்கு முன்பிருந்தெ இந்த சோதனை நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது. உண்மையில் நம் நாட்டில் பணத்துக்கு பஞ்சமில்லை என்றே தோன்றுகிறது.

இவ்வளவுக்கும் ஒரு வேட்பாளர் ரூ 15 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறதாம்(???). ஆனால நிஜத்தில் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது கண்கூடு. இந்தப் பணம் இவர்களுக்கு வாகன செலவுக்கு மட்டுமே பத்தாது. மேலும் பேச்சாளர்கள் செலவு, தொண்டர்களுக்கு பேட்டா, பிரியாணி, பேனர், தலைவர்கள் பிரச்சார செலவு, வாக்காளர்களுக்கு இலவசம்(???), பணம், சில முக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு கவனிப்பு என்று ஒரு வேட்பாளரின் குறைந்தபட்ச தேர்தல் செலவு ரூ 5 கோடி இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால் இதெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் நம் அரசு,தேர்தல் கமிஷன் இல்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வேட்பாளரும் தாக்கல் செய்யும் கணக்கைமட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டுகொள்வதில்லை போலும்.

இந்த தேர்தல் திருவிழாவில் பலனடைவோர் பலர். முதலில் அந்தந்த‌க் கட்சியின் தொண்டர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் கும்பிடுபோடுவார்கள்.(மற்ற நேரத்தில் மதிக்க வேண்டியதில்லையே).

பேனர் எழுதுபவர்கள், வாகன ஓட்டிகள், கார், ஆட்டோ வாடகைக்கு விடுபவர்கள், கொடி,தோரணம் செய்பவர்கள், கட்டும் தொழிலாளிகள், மேடை அமைப்பளர்கள், மைக்செட் வாடகைக்கு விடுபவர்கள், சில பேச்சாளர்கள், மேடைப் பாடகர்கள், கலைஞர்கள், மாஜிக் நிபுணர்கள், ஆட்டக்காரர்கள், மிமிக்ரி ஆர்டிஸ்ட், இவர்களுக்கு தேர்தல் வரை யோகம்தான். ஒரே விஷயத்தில் இவர்கள் கறாராக இருந்தால் போதுமானது.. பணம்.

இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது?? நன்கொடை என்றபெயரில் வரும் பணம் பெரும்பாலும் கருப்புப் பணமே... இதை மீண்டும் சம்பாதிக்க இவர்கள் ஏதாவது வழி செய்வார்கள் என்ற நப்பாசையில் தரப்படுவது. அல்லது தேர்தலில் நிற்க வாய்ப்பு எதிர்பார்த்து தரப்படுவது.

நியாயமாக கணக்குப்பார்த்தால், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு 5 பெரிய வேட்பாளர்கள் போட்டியிட்டால் மொத்த தேர்தலுக்கும் செலவளிக்கப்படும் தொகை ரூ 176 கோடி மட்டுமே இருக்கவேண்டும். ஆனால் கிட்டத்தட்ட ரூ5000 கோடி இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் செலவு ஆவதாக ஒரு கணக்கு கூறுகிறது. இது வேட்பாளர் செலவு மட்டுமே.. அரசாங்க செலவு தனி.

இவ்வளவு செலவு செய்து நடைபெறும் தேர்தலில் நாம் நமது ஜனநாயகக் கடமையை சரியாக ஆற்றி ஒரு சிறப்பான அரசாங்கம் உருவாவதற்கு உறுதுணையாக இருப்போம்.

ஓம் நம சிவாய!! சதுரகிரியாரே போற்றி!!!! நீங்கதான் கருணை செய்து ஒரு நல்ல அரசாங்கம் அமைய ஏற்பாடு செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

Monday, March 14, 2011

வலைப்பதிவுகளுக்கு அரசாங்கம் விதிக்கும் புதிய சட்டம்

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை யில் வந்த ஒரு செய்தி பற்றியதே இன்றய பதிவு.

வலைப்பதிவுகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் ந‌டைமுறைப்ப‌டுத்த‌ இருக்கும் ஒரு ச‌ட்ட‌த் திருத்த‌ம் ப‌ற்றிய‌ செய்தியே அது.


அது ப‌ற்றி மேலும் விள‌க்க‌மாக‌ப் ப‌டிக்க‌ கீழ்க் க‌ண்ட‌ சுட்டிக‌ளை சொடுக்க‌வும்.



இவ‌ற்றிலிருந்து நான் புரிந்து கொண்ட‌வை :

1) அர‌சாங்க‌ம் ந‌ம‌து நாட்டில் செய‌ல்ப‌டும் இண்ட‌ர்னெட் ச‌ம்ப‌ந்த‌மாக‌ சேவைக‌ள் த‌ரும் இடைத்த‌ர‌க‌ர்க‌ள்/ ம‌த்திய‌ஸ்த‌ர்க‌ள் என‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ளை முறைப்ப‌டுத்த‌ ஒரு ச‌ட்ட‌ திருத்த‌ம் கொண்டு வ‌ர‌ ஏற்பாடு செய்கிற‌து.

2) இதில் அக‌ஸ்மாத்தாக‌ ப்ளாக்க‌ர் என‌ப்ப‌டும் வ‌லைப்ப‌திவர்க‌ளையும்  சேர்த்துவிட்ட‌து.

3) அதாக‌ப்ப‌ட்ட‌து, பதிவர்களாகிய‌ நாம் செய்ய‌க்கூடாத‌வ‌ற்றை கீழ்க்க‌ண்டவாறு ப‌ட்டிய‌லிட்டுள்ளார்க‌ள்.

 
Article 2) The intermediary shall notify users of computer resource not to use, display, upload, modify, publish, transmit, update, share or store any information that : —

(a) belongs to another person;

(b) is harmful, threatening, abusive, harassing,  blasphemous, objectionable, defamatory, vulgar, obscene, pornographic, paedophilic, libellous, invasive of another’s privacy, hateful, or racially, ethnically or otherwise objectionable, disparaging, relating or encouraging money laundering or gambling, or otherwise unlawful in any manner whatever;

(c) harm minors in any way;

(d) infringes any patent, trademark, copyright or other proprietary rights;

(e) violates any law for the time being in force;

(f) discloses sensitive personal information of other person or to which the user does not have any right to;

(g) causes annoyance or inconvenience or deceives or misleads the addressee about the origin of such messages or communicates any information which is grossly offensive or menacing in nature;

(h) impersonate another person;

(i) contains software viruses or any other computer code, files or programs designed to interrupt, destroy or limit the functionality of any computer resource;

(j) threatens the unity, integrity, defence, security or sovereignty of India, friendly relations with foreign states, or or public order or  causes incitement to the commission of any cognizable offence or prevents investigation of any offence or is insulting any other nation.

ஒரு விஷ‌ய‌த்தை முறைப்ப‌டுத்துவ‌து என்ப‌து வ‌ர‌வேற்க‌த்த‌குந்த‌து என்றாலும், இப்போத‌ய‌ அர‌சிய‌ல் சூழ‌லில், எந்த‌ வித‌மான‌ பொருளாதார ஆதாய‌த்துக்கும் ஆசைப்ப‌டாம‌ல் உள்ள‌தை உள்ள‌ப‌டி கூறிக்கொண்டு இருக்கும் ப‌திவுல‌கிற்கு இந்த‌க் க‌ட்டுப்பாடுக‌ள் ஒரு க‌டிவாள‌மாக‌வே இருக்கும் என்று தோன்றுகிற‌து.

மேலும் ந‌ம் ச‌ட்ட‌த்தை அம‌ல்ப‌டுத்துப‌வ‌ர்க‌ள் இதைத் த‌வ‌றாக‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ சாத்திய‌க்கூறுக‌ள் அதிகமாக‌வே தோன்றுகிற‌து. இதைப் ப‌ய‌ன்ப‌டுத்தி அர‌சாள்ப‌வ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதுப‌வ‌ர்க்ளை முட‌க்க‌ முய‌ற்சிக‌ள் அதிக‌ம் மேற்கொள்வார்கள் என்றே எண்ணுகிறேன்.

இனிமேல் வ‌லைப்ப‌திவு எழுதுப‌வ‌ர்க‌ள் ஒரு வ‌ழ‌க்குரைஞ‌ரை அம‌ர்த்திக் கொண்டு எழுதுவ‌து ந‌ல்ல‌து என்றே தோன்றுகிற‌து.

 
ம‌ஹாலிங்க‌ம்!!! நீங்க‌தான் இத‌னால் எந்த‌ பிர‌ச்சினையும் ந‌ம் சக வ‌லைப்ப‌திவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌டாம‌ல் பாதுகாக்க‌ணும்!!!

ஓம் ந‌ம‌சிவாய‌!!! ச‌துர‌கிரி சுந்த‌ர‌ ம‌ஹாலிங்க‌த்துக்கு அரோக‌ரா!!!

நன்றி : Times of India News paper, http://www.cis-india.org/

Friday, March 11, 2011

ஜனநாயகத்துக்குத் தகுதியானதா நமது தேசம்????

நமது நாட்டில் இப்போதெல்லாம் லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், கோடிகளில் ஊழலும் மிகவும் சகஜமாக ஆகிவிட்டது.

1) எந்த அரசாங்க போஸ்டிங்குக்கும் ஒரு வசூல் வேட்டை நடத்தப்படுவது வாடிக்கையாக ஆகிவிட்டது. அதற்கு போட்டிபோட்டுக்கொண்டு மக்கள் லஞ்சம் கொடுக்க முன்வருகிறார்கள்(ஒரே போஸ்டிங்குக்கு 2 / 3 பேர் வரை வசூல் செய்கிற கொடுமையும் நடக்கிறது).

2) பெரும்பாலான அரசு ஊழியர்களும் அரசியல்வாதிகளும் தம் கடமையை செய்வதற்கே கையூட்டுப் பெறுவதும்,  அது சகஜமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதும் மிகவும் கேவலமான ஒன்று.

3) ஓட்டுப் போடுவ‌த‌ற்கும், ஓட்டு வாங்குவ‌த‌ற்கும் ப‌ண‌ம் த‌ர‌வேண்டும் என்ற‌ ஒரு மோச‌மான‌ முன்னுதார‌ண‌த்தை ந‌ம் தாய்த் த‌மிழ‌க‌ம் ஏற்ப‌டுத்திக் கொடுத்து இருக்கிற‌து.. இப்போதே இந்த‌ தேர்த‌ல் அறிக்கையில் இலவசம் மிக்சியா கிரைண்ட‌ரா என்ற‌ வாக்குவாத‌ம் ந‌ட‌க்கிற‌தாம்... தூ... வெட்கக்கேடு.

4) நீதிப‌திக‌ளும் ல‌ஞ்ச‌ம் கொடுத்து நிய‌மிக்க‌ப்ப‌டுகிறார்க‌ள் என்று ஒரு கேர‌ள‌ அமைச்ச‌ர் கொழுத்திப் போட்டு வாங்கிக் க‌ட்டிக் கொண்டார். இன்னும், ந‌ம் உச்ச‌ நீதிம‌ன்ற‌ ஒரு முன்னாள் நீதிப‌தியின் உற‌வின‌ர்க‌ள் வ‌ருமான‌த்துக்கு அதிக‌மாக‌ சொத்து சேர்த்திருப்ப‌தாக‌ வ‌ருமான‌ வ‌ரித்துறை கேஸ் ந‌ட‌த்துகிற‌து.

5) ஒரு க‌வ‌ர்ன‌ர் விப‌ச்சார‌ அழ‌கிக‌ளுட‌ன் உல்லாச‌மாக‌ இருப்ப‌துபோல‌ வீடியோ எடுத்து வெளியிடுகிறார்க‌ள்.

6) ஒரு துற‌வி ஒரு ந‌டிகையுட‌ன் உல்லாச‌மாக‌ இருப்ப‌துபோல‌ வீடியோ வெளியாகிற‌து.

7) போலீசைப் ப‌ற்றிக் கேட்க‌வேண்டாம். அவ‌ர்க‌ள் மான‌ம் ஒவ்வொரு நெடுஞ்சாலை ஓர‌மும் ஒவ்வொரு சிக்ன‌லின் முன்பும் காற்றில் ப‌ற‌க்கிற‌து. ஒரு க‌ம்ப்ளைய்ண்ட் கொடுக்க‌ தைரிய‌மாக‌ போலீஸ் ஸ்டேச‌ன் போக‌ முடிய‌வில்லை.

8) ராணுவ‌த்திலும் த‌ள‌வாட‌ங்க‌ள் வாங்குவ‌திலும், ராணுவத்துக்கு சொந்த‌மான‌ நில‌ங்க‌ளை கொள்ளை அடித்த‌திலும் அவர்களின் லட்சணம் ச‌ந்தி சிரிக்கிற‌து.

9) ஒவ்வொரு தொழில‌திப‌ரும் ஏதேனும் ஒரு வித‌த்தில் ல‌ஞ்ச‌ம் கொடுப்ப‌து வாடிக்கையாக‌ப் போகிவிட்ட‌து. அர‌சிய‌ல் க‌ட்சிகளுக்காக‌ட்டும், அமைச்ச‌ர்க‌ளுக்காக‌ட்டும் அவ‌ர்க‌ள்தான் இதை முக்கிய‌மாக‌ ஊக்குவிக்கிறார்க‌ள்.


இன்னும் ஏராள‌மாக‌ ந‌ம் ச‌மூக‌, அர‌சிய‌ல் அமைப்பில் ல‌ஞ்ச‌மும் ஊழ‌லும் ஒழுக்கமின்மையும் பூர‌ண‌மாக‌ ஒரு ர‌த்த‌ப் புற்றுநோயைப் போல‌ ஊடுறுவி விட்ட‌து.


இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மக்களையும் இவர்கள் விடவில்லை. ந‌ம‌து தேச‌த்தைச் சேர்ந்த‌ மக்க‌ள் வெளிநாடுக‌ளில் க‌ஷ்ட‌ப்ப‌டும்போது கூட‌ உத‌விசெய்ய‌ ம‌ன‌மில்லாத‌ அர‌சாங்க‌ம்தான் இங்கு ந‌டைபெறுகிற‌து. உதார‌ண‌ம் ‍ இல‌ங்கை, எகிப்து, லிபியா, ஆஸ்திரேலியா, வ‌ளைகுடாநாடுக‌ள், ம‌ற்றும் ப‌ல‌. தூத‌ர‌க‌ங்க‌ள் பெய‌ருக்கு, பொம்மை அலுவ‌ல‌க‌ங்க‌ளாக‌ இய‌ங்குகின்ற‌ன‌வோ என்ற‌ ச‌ந்தேக‌மும் வ‌ருகிற‌து.


ந‌ம‌து வ‌ரிப்ப‌ண‌ம் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்டு க‌ருப்புப்ப‌ண‌மாக‌ வெளிநாடுக‌ளில் யார்யார் பெய‌ரிலோ ப‌துக்க‌ப்ப‌டுவ‌தைப் பார்க்கும்போது ஒரு ச‌மூக‌ப் பிர‌க்ஞை உள்ள‌ குடிம‌க‌னாக‌ என்னால் ம‌னமுவந்து வ‌ரிகட்ட‌ முடிய‌வில்லை. நான் ஏன் வ‌ரிக‌ட்ட‌வேண்டும் என்ற‌ சிந்த‌னை இய‌ற்கையாக‌ எழுகிற‌து.(என்ன‌ செய்வ‌து? வேற‌ வ‌ழி இல்லை)

எவ்வ‌ள‌வோ இல்லைக‌ள் இருந்தாலும் ந‌ம் தேச‌ம் என்ற‌ ப‌ற்று ம‌ட்டும் குறைய‌வே இல்லை.


இத‌ற்கு தீர்வு என்ன‌வாக‌ இருக்க‌முடியும் என்று யோசித்த‌போது என்னால் கீழ்க்க‌ண்ட‌ கேள்விக‌ளைத் த‌விர்க்க‌ முடிய‌வில்லை.


1)நாம் உண்மையிலேயே ஜ‌ன‌நாய‌க‌த்துக்குத் த‌குதியுட‌ய‌வ‌ர்க‌ள் தானா?

2)இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு சுத‌ந்திர‌ம் ந‌ம‌க்குத் தேவையா?

3)சில / பல‌ ஆண்டுக‌ள் (இந்த‌ நோயைக் குண‌ப்ப‌டுத்த) சுத‌ந்திர‌த்தையும் ஜ‌ன‌நாய‌க‌த்தையும் விட்டுக் கொடுத்தால்தான் என்ன‌??

இப்போது ந‌ம‌க்குத் தேவை ஒரு மாவீர‌ன் சுபாஷ் ச‌ந்திர‌ போஸ் போன்ற‌ ஒரு வீர‌மும் விவேக‌மும் துணிவும் உள்ள‌ ஒரு இரும்புத் த‌லைமை. அது எங்கிருந்து வ‌ரும் என்றும் புரிய‌வில்லை.


ஒரு தன்னலமில்லாத தலைவனின் ராணுவ‌ ஆட்சி ந‌ம‌க்கு இப்போத‌ய‌ உட‌ன‌டித் தேவை... யார் கொடுப்பார்கள் என்றுதான் தெரியவில்லை...

ஆண்டவா.. மஹாலிங்கம்!!! என் சிந்தனை சரியான்னு தெரியல... ஆனா இதுதான் சரின்னு எனக்குப் படுது...


உங்க கடாட்சம் பூரணமாக வெளிப்பட்டு, இந்த ரத்தப் புற்றுநோயை உடனடியாக் குணப்படுத்தி என் பாரதத் தாய் மீண்டும் தரணியில் தலை நிமிர்ந்து நிற்க வழிசெய்ய ஆவன செய்யுங்கள்...


சதுரகிரிவாழ் சுந்தரனே போற்றி!!!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா........

Thursday, March 10, 2011

பாக‌ம் 2 - நமது வரிப்பணம் எங்கே செல்கிறது???

நமது ‍வரிப்பணம் எங்கே செல்கிறது??? -இதன் முதல் பாகம் படிக்க இங்கே சொடுக்கவும்..

ஒரு அரசாங்கத்துக்கு நாம் வரி என்று பலவகைகளில் கொடுப்பது எதற்காக?

1) நமக்கு நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த‌
2) சிற‌ந்த‌ அர‌சு நிர்வாக‌ம் ஏற்ப‌டுத்த
3) நம் பாதுகாப்புக்கு ராணுவம், போலீஸ், துணைராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படைகள்,ஏற்படுத்த
4) நம் தேசத்துக்கு ஒரு மதிப்பு சர்வதேச அரங்கில் ஏற்படுத்த‌


ஆனால் நம் தேசத்தில் இப்போது நடப்பது என்ன?

உள்கட்டமைப்பு வசதிகள்

பெருநகரங்களுக்கு மட்டும் ஓரளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற சிறு குறு நகரங்கள், கிராமங்கள், முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும், சாலைவசதிகளும் இன்னும் சரியான முறையில் ஏற்படுத்தப்படவில்லை...


அரசு நிர்வாகம்

இதைப்பற்றி தனியாகக் கூற வேண்டாம்... ஒரு அரசாங்க வேலை வாங்கவேண்டுமென்றால் லஞ்சம் தர வேண்டும் என்ற நிலை. ஏதாவது அரசு சம்பந்தப் பட்ட பணி நடைபெற லஞ்சம் தரவேண்டிய நிலை. மிகத் தாமதமாக வழங்கப்படும் நீதி.. தாமதப்படுத்தப் படும் தண்டனை நடைமுறைகள்.


போலீஸ், ராணுவம், பாதுகாப்புப்படைகள்

ஒருமுறை த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் காவ‌ல்துறையின் ஈர‌ல் கெட்டுவிட்ட‌து என்று ச‌ட்ட‌ ச‌பையில் கூறினார். அது இன்னும் ச‌ரியாக‌ வில்லை என்றே தோன்றுகிற‌து. ராணுவ‌த்திலும், ஊழ‌லும், ல‌ஞ்ச‌மும் வ‌ன்முறையும் ஊடுறுவ‌ ஆர‌ம்பித்து இருக்கின்ற‌ன‌.. தேச‌ப் பாதுகாப்பு என்ப‌து கேள்விக்குறியாக‌ இருக்கிற‌து.


ந‌ம் தேச‌த்துக்கு ம‌திப்பு

இதுப‌ற்றி வெளிநாடு வாழ் ச‌கோத‌ர்க‌ள் தான் ச‌ரியாக‌க் கூற‌ முடியும். இப்போது,2ஜி ஸ்பெக்ட்ர‌ம், ஆத‌ர்ஷ், காம‌ன்வெல்த் போட்டி ஊழ‌ல்க‌ளின் க‌ருணையால் ந‌ம‌து தேசத்தின் ம‌திப்பு ச‌ர்வ‌தேச‌ ச‌ந்தையில் அத‌ல‌ பாதாள‌த்தில் தான் இருக்கிற‌து.


இவ்வ‌ள‌வு இருந்தும் ந‌ம‌க்கு ஓர‌ள‌வுக்கு சில‌ விச‌ய‌ங்க‌ள் கிடைத்திருக்கின்ற‌ன‌ :

1) சில ஆப்பிரிக்க‌ நாடுக‌ள் போன்ற‌ பாதுகாப்புக் குறைபாடுக‌ள் இல்லை. குற்ற‌ங்க‌ள் ச‌ற்று குறைவு.

2) இப்ப‌டிப் ப‌ட்ட‌ நிலையிலும் ஓர‌ள‌வுக்கு நிலையான‌ அர‌சாங்க‌ம் இருப்ப‌தால் தொழில் வ‌ள‌ர்ச்சி அடைத‌ல்..

3) ந‌ம‌க்கு நாமே என்று சுய‌ந‌ல‌முட‌ன் வாழ‌ நினைத்தால் ஓர‌ள‌வுக்கு த‌டையில்லா வாழ்க்கைமுறை.

4) இன்னும் ந‌ம் க‌லாச்சார‌ பாரிய‌ம்ப‌ரிய‌ வேர் நிலையாக‌ இருப்ப‌தால் மேற்கு நாடுக‌ள் போன்ற‌ ஒரு ஒழுக்க‌க் கேடு வ‌ராம‌ல் இருப்ப‌து.

5) ஓரளவுக்கு கருத்து சுதந்திரம் ஆரோக்கியமாக இருப்பது.

 
இது போதுமா? இவையும் எவ்வளவு நாள் நிலைக்கும்?? தெரியவில்லை... ஆனால் இப்போது இருக்க‌க்கூடிய‌ நிர்வாக‌ சீர்கேட்டைப் பார்க்கும்போது ரொம்ப‌ நாள் இந்த சந்தோஷம் நீடிக்கும் என்று தோன்ற‌வில்லை.

காலமும் கடவுளும்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்த மார்ச் மாதத்தில் கட்ட வேண்டிய வருமான வரிகளெல்லாம் மொத்தமாக பிடித்தம் செய்வதைப் பார்க்கும் போது மனம் வெம்புகிறது. இதில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு பல்வேறு ஊழல்கள் செய்யப்பட்டு கடத்தப் படுவதைக் கேள்வியுறும்பொழுது நெஞ்சு கொதிக்கிறது.

நேற்றய (09 மார்ச் 2011) Headlines Today செய்தியில்  தோராயமாக‌ சுமார் 8 லிருந்து 30 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய கருப்புப் பணம் ஒவ்வொரு ஆண்டும் நம் பாரத தேசத்திலிருந்து மட்டும் சுரண்டப்படுவதாக தெரிவித்தார்கள். இதுவும் மிகவும் குறைந்தபட்ச மதிப்பீடு என்று வேறு கூறி வயிற்றெரிச்சலைக் கிளப்பினார்கள்.

ஒன்றும் புரியவில்லை... எனக்குதான் மறை கழண்டு விட்டதா என்றும் தெரியவில்லை... கடவுள் தான் இந்த தேசத்தை இந்த துரோகிகளிடம் இருந்து காப்பாத்தணும்...


கடவுளே காப்பாத்து. சதுரகிரியாரே சரணம்... மஹாலிங்கமே போற்றி....

நமது ‍வரிப்பணம் எங்கே செல்கிறது???

நேற்று (09-03-2011)  இரவு Headlines Today நியூஸ் சேன‌லில் க‌ருப்புப்ப‌ண‌ம் எவ்வாறு வெளிநாடுக‌ளில் ப‌துக்க‌ப்ப‌டுகிறது என்று ச‌ற்று விரிவாக‌ காண்பித்தார்க‌ள். அது ப‌ற்றி, அதிலிருந்து, நான் புரிந்து கொண்ட‌  வ‌ரையிலான‌ ஒரு ப‌திவு :

இப்போது ஒருவ‌ரிட‌ம் பணம் / க‌ருப்புப்ப‌ண‌ம் அதிக‌மாக இருக்கிற‌து அல்ல‌து அதிக‌மாக‌ ச‌ம்பாதிக்க‌ முடியுமாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் (இங்கு ஊழல் அர‌சிய‌ல்வாதிக‌ள், முறைய‌ற்ற‌ வ‌ழியில் வ‌ருமான‌ம் ஈட்டுப‌வ‌ர்க‌ள், ஈட்ட‌ முற்ப‌டுப‌வ‌ர்க‌ள், ஊழ‌ல் அர‌சு அதிகாரிகள், சர்வதேச தீவிரவாதிகள் என்று போட்டுக் கொள்ளலாம்) என்று வைத்துக்கொள்வோம். இந்த‌ மாதிரி Tax Heavens என்று சொல்ல‌க்கூடிய நாடுக‌ளில் இருக்கக் கூடிய‌ பாங்குக‌ளின் அதிகாரிக‌ள் இவ‌ர்க‌ளை அணுகுவார்க‌ள். அல்ல‌து இவ‌ர்களே ஏற்க‌னேவே இந்த‌ மாதிரி நாடுக‌ளில் அக்க‌வுண்ட் இருக்கும் ஆசாமிக‌ளிட‌ம் சொல்லி என‌க்கும் ஒரு அக்க‌வுண்ட் வேண்டும் என்று ஏற்பாடு செய்ய‌ச் சொல்வார்க‌ள்.

இந்த‌ மாதிரி மீட்டிங்குகள் பெரும்பாலும் GULF Countries என்று சொல்ல‌க்கூடிய‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ந‌ட‌க்கும் ஏதாவ‌து ஒரு விழாவில் (க‌லை விழா, ஷாப்பிங் திருவிழா,கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பல) ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ச‌ந்தேக‌ம் வ‌ராத‌ப‌டி ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு ந‌ட‌க்கும்.

இப்போது அந்த‌ வ‌ங்கிக‌ளின் ஏஜெண்ட் அவர்க‌ளிட‌ம் உள்ள‌ அமௌண்ட்க்குத் த‌குந்தாற்போல‌ ஏதாவ‌து ஒரு நம்பிக்கையான‌ ந‌ப‌ரையோ அல்ல‌து அந்த‌ நாட்டில் உள்ள‌ ஒரு வ‌க்கீலையோ அல்ல‌து அந்த‌ நாட்டில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ ஏதாவ‌து ஒரு ட்ர‌ஸ்டையோ அல்ல‌து அந்த‌ நாட்டில் உள்ள‌ ஏதாவ‌து ஒரு க‌ம்ப‌னியையோ அவர்க‌ளின் Nominee நாமினியாக‌ இருக்க‌ச்செய்வார்க‌ள்.

அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் ப‌ண‌த்துக்குத் த‌குந்தாறபோல் அவ‌ர்க‌ளே ஒரு புது க‌ம்ப‌னியையோ அல்ல‌து ஒரு புது ட்ரஸ்டையோ புதிதாக‌வும் தொட‌ங்கிக் கொள்ள‌லாம்.

இங்கு க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ முக்கிய‌ விஷ‌ய‌ம் :

1) இந்த‌ அக்க‌வுண்ட்க்காக‌ அவ‌ர்க்ள் நேர‌டியாக‌ போக‌வேண்டிய‌தில்லை.
2) அவ‌ர்கள் ப‌ற்றி எந்த‌த் த‌க‌வ‌லும் தெரிவிக்க‌ வேண்டிய‌தில்லை பெய‌ர் உட்ப‌ட‌...(????)

இப்போது இந்தியாவில் இருந்து ப‌ண‌ம் எவ்வாறு இந்த‌ அக்க‌வுண்ட் க‌ளுக்கு அனுப்ப‌ப் ப‌டுகிற‌து என்று பார்போம்.

1) Over Invoicing  : அந்த‌ நாடுக‌ளில் இருக்கும் ஏதாவ‌து ஒரு க‌ம்பெனியில் இருந்து ஏதாவ‌து ஒரு பொருள் அல்ல‌து சர்வீஸ் செய்த‌தாக‌ இந்தியாவுக்கு அனுப்புவார்க‌ள். அத‌ன் உண்மையான‌ விலை ரூ 100 என்றால் அத‌ற்கு ரூ 10,00,000 க்கு பில் அனுப்புவார்க‌ள். அந்த‌ பில்லுக்கு ப‌ண‌ம் செலுத்துவ‌துபோல‌ இந்தியாவிலிருந்து ப‌ண‌ம் அந்த‌ நாட்டிற்கு ப‌த்திர‌மாக‌ப் போய் சேர்ந்துவிடும். அங்கு இருக்கும் இந்த‌ வ‌ங்கி அதிகாரிக‌ளும் இவ‌ர்க‌ளின் நாமினி க‌ளும் இந்த‌ப் ப‌ண‌த்தை ப‌த்திர‌மாக‌ இவ‌ர்க‌ளின் அக்க‌வுண்ட் க‌ளில் செலுத்தி விடுவார்க‌ள்.

2) ஒரு முறை இந்தியாவிலிருந்து த‌னி விமான‌த்தில் ப‌ண‌மாக‌ எடுத்து வ‌ந்து செலுத்தி இருக்கிறார்க‌ளாம்.

3) ஹ‌வாலா முறை : ப‌ண‌த்தை இங்கு இருக்கும் ஹ‌வாலா ஏஜெண்ட் க‌ளிட‌ம் கொடுத்தால் அவ‌ர்க‌ள் அந்த‌ நாட்டில் கொடுத்துவிடுவார்க‌ள்.

 
இந்த‌ மாதிரி நிறைய‌ நாடுக‌ளிலிருந்து (180 என்று கூறினார்கள்) ப‌ண‌ம் இவ்வாறு அந்த‌ Tax Heavens க‌ளுக்கு க‌ட‌த்த‌ப்ப‌ட்டு ப‌துக்கப் ப‌டுவ‌தாக‌க் கூறினார்க‌ள்.

இந்த‌ நாடுக‌ளிலிருந்து இவ்வாறு ப‌துக்கி வைத்திருப்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லை சில‌ ஆண்டுக‌ளுக்கு முன் அமெரிக்கா மிர‌ட்டி வாங்கிக் கொண்ட‌தாக‌வும் செய்தி க‌சிகிற‌து. (இப்போது புரிகிற‌து ஏன் இந்த‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அமெரிக்காவுக்கு அடிமையாக‌ இருக்க‌ விரும்புகிறார்க‌ள் என்று)

இந்த‌ வ‌கைமுறைக‌ளைப் பார்க்கும் போது என‌க்குத் தோன்றுவ‌து எல்லாம் பொறிவைத்து எலிப் பிடிக்கும் உபாய‌ம் தான்.

1) முதலில் இந்த‌மாதிரியான் Tax Heavens க‌ளை ஏற்ப‌டுத்துவ‌து (பொறி)

2) அதில் வ‌ள‌ரும் நாடுக‌ளில் இருக்கும் ஊழல் அர‌சிய‌ல்வாதிக‌ளையும் தொழில் அதிப‌ர்க‌ளையும் அர‌சு அதிகாரிக‌ளையும் தீவிர‌வாதிக‌ளையும் முத‌லீடு செய்ய‌த் தூண்டுவ‌து (வ‌டை)

3) அந்த‌ விவ‌ர‌ங்க‌ளை அந்த‌ நாடுக‌ளிருந்து வாங்கி அவ‌ர்க‌ளை மிர‌ட்டுவ‌த‌ற்குப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து. (பொறியில் எலி சிக்கிக் கொண்ட‌து)

இதையெல்லாம் பார்க்கும்போது ந‌ம‌து ஊழல் அர‌சிய‌ல் வாதிக‌ளும் அதிகாரிக‌ளும் ந‌ம‌து பார‌த‌ மாதாவின் மான‌த்தை விலைக்கு விற்றுவிட்டார்க‌ள் என்றே எண்ண‌த் தோன்றுகிற‌து.

கேவ‌ல‌ம்.


என்ன‌ செய்ய‌லாம்???

க‌ட‌வுள் தான் இவ‌ர்க‌ளுக்குத் தண்ட‌னை த‌ர‌ணும். ஏன்னா ம‌னித‌ன் த‌ண்ட‌னை த‌ருகின்ற‌ இட‌த்தில் இப்போது இருப்ப‌வ‌ர்க‌ள்தான், த‌வ‌று செய்திருப்ப‌தாக‌த் தோன்றுகிற‌து.


மஹாலிங்க‌ம்!! இவ‌ர்க‌ளுக்கெல்லாம் த‌குந்த‌ த‌ண்ட‌னையை நீங்க‌தான் வ‌ழ‌ங்க‌ணும்.

ச‌துர‌கிரியாருக்கு ச‌ர‌ண‌ம்!!! ம‌ஹாலிங்க‌த்துக்கு அரோக‌ரா!!!!

Monday, March 7, 2011

இலங்கைத் தமிழர் பிரச்சினை...

நான் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றால் சில போராட்டங்கள் நடக்கும், சில நாட்கள் லீவு விடுவார்கள். அவ்வளவுதான் தெரியும். அந்த அளவில்தான் எனது அப்போதய பொதுஅறிவு.

எனது கல்லூரி நண்பர்கள் சிலர் இலங்கைத் தமிழர்கள். அவர்களுடன் படித்தபோது தான் அந்தப் பிரச்சினையின் உண்மையான பரிணாமம் ஓரளவுக்குப் புலப்பட்டது.

தாங்கள் பிறந்த மண்ணைவிட்டு வேறு தேசத்தில் (மூதாதையர் தேசமாக இருந்தாலும், பிறந்த தேசம் போல் வருமா?) குடியேறி, முழு உரிமைகள் இல்லாமல், வாழும் அந்த சோகம் சில காலம் என்னையும் பாதித்தது.

ஆனால் நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த போது ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது. அப்போதுதான் மொத்தமாக அவர்களைப் பார்த்து ஒரு வித பயமும் ஒரு அன்னியத் தன்மையும் ஏற்பட ஆரம்பித்தது.

அதுவரை ஆதரவாக இருந்த தமிழகத்தில் அவர்கள் உண்மையிலேயே வேண்டாதவர்களாக ஆகிவிட்டார்கள். அதன் பிறகு கெடுபிடிகள் பல ஏற்பட்டு உண்மையான அகதிகள்கூட கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள்.
பிறகு கல்லூரி முடித்த பிறகு நானும் இவர்களைப் பற்றி ஓரளவுக்கு மறந்தேவிட்டேன்(என‌க்கும் ஆயிர‌ம் பிர‌ச்சினைக‌ள்).

மீண்டும் சுனாமியின் பொழுது இல‌ங்கை நிக‌ழ்வுக‌ள் செய்தியாகின‌. பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ச‌ர்வ‌தேச‌ உத‌விக‌ள் கூட‌ ச‌ரியாக‌ சென்று சேராத‌ ப‌டி பார்த்துக் கொண்ட‌ இல‌ங்கை அர‌சின் வ‌ன்ம‌ம் மிக‌வும் கொடுமையான‌து. இறுதியாக ஈழப் போர் உக்கிரமடையத் தொடங்கிய பொழுது, அகதிகள் வருகை அதிகரித்து, ஈழப் போரின் கொடுமைபற்றிய செய்திகள் உலகம் முழுதும் இணையத்தில் வலம் வரத் தொடங்கிய பொழுது மிகவும் வருத்தப் பட்டேன். இதில் முக்கிய‌மான வ‌ருத்த‌ம் ந‌ம‌து அர‌சாங்க‌ம் இன்னும் ப‌ழைய‌ விச‌ய‌ங்க‌ளைக் க‌ருத்தில் கொண்டு இவ‌ர்க‌ளுக்கு போதுமான‌ உத‌விக‌ள் செய்யாம‌ல் இருந்த‌து. மேலும் சில‌ த‌வ‌றாக, இல‌ங்கை அர‌சுக்கு உத‌விக‌ள் செய்து த‌மிழ‌ர்க‌ளை அழிக்க‌வும் உறுதுணையாக‌ இருந்த‌து மிக‌வும் வேத‌னை அளித்த‌து. இங்கு த‌மிழ‌க‌த்தில் இருக்கும் முன்னணி த‌மிழின‌க் காவ‌ல‌ர்க‌ள் அத‌ற்கு சிறு முணுமுணுப்பு கூட‌ தெரிவிக்காம‌ல் ஊழ‌லில் திழைத்துக் கொண்டிருந்த‌து கொடுமையின் உச்ச‌ம்.

என்ன‌ செய்வ‌து? சொந்த‌ நாட்டில் இருக்கும் ம‌க்க‌ளுக்கே துரோக‌ம் செய்ப‌வ‌ர்க‌ளிட‌ம்,,கொள்ளை அடிப்பவர்களிடம், ஈழ‌த்த‌மிழ‌ருக்கு உத‌வி செய்வதற்கு எதிர்பார்ப்ப‌தே த‌வ‌றுதான்.

வெற்றிக‌ர‌மாக‌ இப்போது இல‌ங்கை அர‌சு விடுத‌லைப் புலிக‌ளை அழித்து,  ஈழ‌த்தில் ம‌று குடியேற்ற‌ம் என்ற போர்வையில் ராணுவ‌த்தின‌ரைக் குவித்து வ‌ருவ‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌.

இத‌ன் செய்தி என்ன‌வென்றால் "ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளே! உங்க‌ளுக்கு இங்கே இட‌மில்லை. வ‌ந்தாலும் பாதுகாப்புக்கு உத்த‌ர‌வாத‌ம் இல்லை.  நாங்க‌ள் எங்க‌ள் நாட்டில் எதுவும் செய்வோம். இதைப் ப‌ற்றி நாங்க‌ள் சொல்வ‌தை ம‌ட்டுமே ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌மும் ந‌ம்ப‌வேண்டும்.  நீங்க‌ள் கேள்வி கேட்க‌வோ, குர‌லெழுப்ப‌வோ உரிமை அற்ற‌வ‌ர்க‌ள். வ‌ந்து அடிமைக‌ளாக‌ இருப்ப‌த‌ற்குத் த‌யாரென்றால் வாருங்க‌ள். குடியேறுங்க‌ள். "

இதுதான் இந்த‌ நிக‌ழ்வின் ம‌றைமுக‌ச் செய்தி.

இத‌ற்குத் தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குக்கூட‌ என்னால் முடிய‌வில்லை. ஆனால் ஈழ‌த் த‌மிழர்க‌ள் உண்மையிலேயே காலத்தாலும் விதியாலும் புட‌ம்போடப்ப‌ட்ட‌ ம‌ற‌வ‌ர்க‌ள் (சாதி இல்லை... வீர‌ர்க‌ள்). எதையும் சாதிக்கும் வலிமை இப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. அவ‌ர்க‌ள் தியாக‌த்திற்கு ஒரு விடையைக் கால‌ம்தான் சொல்ல‌வேண்டும்.

ம‌ஹாலிங்க‌ம்!! என் க‌ண்ணீருக்கிடையில், உங்க‌ளிட‌ம் என்னுடைய‌ பிரார்த்த‌னை. த‌ய‌வுசெய்து இவ‌ர்க‌ளுக்கு ஒரு ந‌ல்ல‌ வ‌ழி காட்டுங்க‌ள். ஈழ‌ம் ம‌ல‌ர்கிற‌தோ இல்லையோ, ஈழ‌த் த‌மிழர்க‌ள் உல‌கில் எங்கு இருந்தாலும் அவ‌ர்க‌ளின் வாழ்வு ம‌ல‌ர‌ட்டும். அவ‌ர்க‌ளின் காய‌த்துக்கு கால‌மும் விதியும் ச‌ரியான‌ ம‌ருந்துக‌ள் இட‌ட்டும்.

சதுரகிரியாரே போற்றி!!! சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Friday, March 4, 2011

ச‌மூக‌ப் புர‌ட்சி ஏற்ப‌ட‌....

சென்ற வாரம் பட்ஜெட் உரை கமென்ட்ரி கேட்ட போது ஒரு முக்கிய விஷயம் பிடிபட்டது.நமது அரசியல் வாதிகள் எல்லாவற்றையும் பேசியே முடித்து விடுவார்கள். செயலில் ஒன்றுமே செய்வதில்லை. பொது மக்களுக்காக சேவை செய்வது என்பது எல்லாம் பொய். முதலாளிகளுக்குத்தான் சேவை செய்வோம் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.

எனது முந்தய ஒரு பதிவில் ஒரு அன்பர் (அனானிமஸ்) "ஆலோசனை சொன்னது போதும், களத்துக்கு வந்து போராடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் இந்த பட்ஜெட் உரையைப் படித்தபோது இதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. இது மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றவது என்ற சிந்தனையுடனே தயாரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

இந்த நிலை மாற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?? இந்த நிலை மாற அரசியல் மாற்றத்தைவிட‌ ஒரு சமூக மாற்றமே அவசியமாகப் படுகிறது.

களப்போராட்டம் ஒரு முக்கியமான வழி.. அது எல்லாராலும் செய்யப்படுவது சாத்தியமாகாது. ஆனாலும் முடிந்த அளவு அனைவரும் பங்குகொள்ள முயற்சி செய்யவேண்டும். இதில் இரண்டு வகை இருக்கிறது. சாத்வீக வழி. வன்முறை வழி.

சாத்வீக வழியில் போராடும் மக்களுக்கு அரசுவன்முறை பரிசாக வழங்கப் பட்டு சில பல மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆந்திராவில் நடந்த போலீஸ் தாக்குதல். அல்லது போராட்ட உரிமையே மறுக்கப்பட்டு வன்முறைக்குத் தூண்டுகிறார்கள்.

எனவே பொதுமக்களும் பெரும்பாலும் சாத்வீக போராட்டத்துக்கு வரும்போது அரசியல் சார்பு உடைய போராட்டங்களுக்கே வருகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதில் ஆதாயமாக பணமோ அல்லது உணவோ அல்லது மதுவோ அல்லது இவை அனைத்துமோ வழங்கப்படுகிறது. போராட்டஙகளுக்கு ஆட்கள் சேர்ந்த நாள் போய் ஆட்களை சேர்க்கவேண்டிய நாள் வந்து விட்டது.

மேலும் நம் மக்க்ளுக்கு ஒரு குழு மனப்பான்மை பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. இப்போது நமது நிலை ஒரு நெல்லிக்காய் மூட்டை போலவே இருக்கிறது. ஒரு குழுவாக  ஒன்று சேர முனைப்பு என்பதே இல்லை. இதை குழந்தையிலிருந்தே வளர்க்கவேண்டும். திடீரென்று வராது. ஒரு கேரளாவிலோ மேற்கு வங்கத்திலோ இருக்கும் குழு மனப்பான்மை நம் தமிழகத்தில் நிச்சயம் இல்லை.

இதற்கு முக்கிய காரணம் நம்மிடையே தன்னலமற்ற தலைமை இல்லை. ஒரு போராட்டம் நடந்தால் அதனால் ஒரு அரசியல்வாதிக்கு ஆதாயம் என்றால்தான் நடக்கிறது. உண்மையில் பொதுநலம் சார்ந்து எந்தப் போராட்டமும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.இத‌னாலேயே பொது ம‌க்க‌ளுக்கு போராட‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் பெரும்பாலும் குறைந்துவிட்ட‌து.

இது திட்ட‌மிட்டே செய்ய‌ப்ப‌ட்ட‌தாக‌வே தோன்றுகிற‌து.போராடாத‌ ம‌க்க‌ளிட‌ம் ஈசியாக‌ கொள்ளை அடிக்க‌லாம் என்ற‌ எண்ண‌மே கார‌ண‌ம்.


வ‌ன்முறை வ‌ழியில் செல்லும் ம‌க்க‌ளுக்கு ந‌க்ஸ‌லைட் என்ற‌ ப‌ட்ட‌மோ, தீவிர‌ வாதி என்ற‌ ப‌ட்ட‌மோ கொடுத்து, ஒரு ச‌மூக‌த்தையே அழிக்கும் அள‌வுக்கு வ‌ன்ம‌த்துட‌ன்தான் ந‌ம‌து அர‌சாங்க‌ம் இருக்கிற‌து.

உண்மையில் இப்போது களப்போராட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் சுயமாகப் பாதிக்கப்பட்டு வேறு வழி இல்லாமலே போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களே... இவர்கள் மற்றவர்களை துணைக்கு அழைக்கும் போது உதவி செய்வது நமது கடமை என்றே எண்ணுகிறேன்.

 

க‌ள‌ப்போராட்ட‌ம் த‌விர‌ வேறு வ‌ழி ஒன்றும் உள்ள‌து. அது ஆன்மீக‌ அற‌ப்போராட்ட‌ம். இது ஒவ்வொருவ‌ரும் த‌த்த‌ம‌து ம‌ன‌துக்குள் "ந‌ன்மைக‌ள் ந‌டைபெற‌வேண்டும்" என்று தீவிர‌மாக‌ சிந்திப்ப‌தால் ஏற்ப‌டும். ந‌ம‌து இன்றைய‌ சிந்த‌னைக‌ளே நாளைய‌ செய‌ல்க‌ளாக‌ ப‌ரிண‌மிக்கின்ற‌ன‌. என‌வே ந‌ல்ல‌தையே சிந்திப்போம் நல‌ம் பெறுவோம்.

ந‌ம‌து ம‌ன‌ம் என்று த‌னியாக‌ இருப்ப‌து போல‌ எல்லாருக்கும் பொதுவான‌ ஒரு ம‌ன‌ம் என்ப‌தும் இருப்ப‌தாக‌ ஆராய்ச்சியாள‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள்.ந‌ம‌து த‌னிப்பட்ட‌ ம‌ன‌தில் ஏற்ப‌டும் சிந்த‌னைக‌ள் இந்த‌ பொது ம‌ன‌த்தில் பிர‌திப‌லிக்கின்ற‌ன‌. அந்த‌ சிந்த‌னை சற்று வ‌லிமையான‌தாக‌ இருக்கும்ப‌ட்ச‌த்தில், அதை மேலும் சில‌ர் கிர‌கித்து அதே திசையில் சிந்திக்க‌த் தொட‌ங்குகிறார்க‌ள். சில பல வ‌லிமையான‌ சிந்த‌னைக‌ள் சேரும்போது அது ஒரு பொது இய‌க்க‌மாக‌ , மௌன‌ப் புர‌ட்சியாக, இயற்கை சீற்றமாக வெடிக்கிற‌து. நிர‌ந்த‌ர‌மான‌ மாற்ற‌ம் ம‌ன‌ அள‌வில்தான் முதலில் ஏற்ப‌ட‌ வேண்டும். பிற‌கு அதுவே செய‌ல்க‌ளிலும் எதிரொலிக்க‌த்தொட‌ங்கும்.

இதைத்தான் ந‌ம‌து வ‌ள்ளுவ‌ப்பெருந்த‌கை கீழ்க்க‌ண்ட‌வாறு கூறுகிறார் :

உள்ள‌த்தால் உள்ள‌லும் தீதே பிற‌ன் பொருளை
க‌ள்ள‌த்தால் க‌ள்வேம் என‌ல்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவ‌ர் நாண‌
ந‌ன்ன‌ய‌ம் செய்து விட‌ல்.

இவ்விர‌ண்டு குற‌ள்க‌ளும் என‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வை.ஏனெனில் உள்ள‌த்தில் நினைக்கும்போதே ச‌ரியாக நினைக்க‌த்தூண்டுவ‌தும் ம‌ற்றும் ம‌ன்னித்த‌ல் மூல‌ம் மனதளவில் உள்ள ப‌கைமையை முறித்த‌ல் போன்ற‌ க‌ருத்துக்க‌ள் இன்றைய‌ சமூக‌ சூழ‌லில் மிக‌வும் தேவையாக‌ இருக்கிற‌து.

ந‌ம‌து சிந்த‌னைக‌ள் வ‌லிமையாக‌ என்ன‌ செய்ய‌வேண்டும்? இத‌ற்கு ப‌ல‌ வ‌ழிமுறைக‌ள் இருக்கின்ற‌ன‌.

1) தெளிந்த‌ ம‌ன‌நிலை எப்போதும் இருந்து, ஆழ்ந்த‌ ச‌மூக‌ சிந்த‌னையுட‌ன் இருத்த‌ல்.

2) ம‌ன‌த‌ள‌வில் மாற்ற‌ங்க‌ள் ஏற்ப‌ட‌வேண்டும் என்ற‌ தீராத‌ தாக‌ம் போன்ற‌ வேட்கை

3) இயற்கையாக இப்படிப்பட்ட மனநிலை இல்லாதவர்களுக்கு, யோகா, தியான‌ம் க‌ற்றுக் கொண்டால் இவை கைவ‌ர‌ப் பெறும்.

4) ப‌க்தியும் பிரார்த்த‌னைக‌ளும் இத‌ற்கு மேலும் வ‌லிமை சேர்க்கும்.

5) ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு ச‌மூக‌ சிந்த‌னையை ஊட்டி வ‌ள‌ர்த்த‌ல்.

இவைக‌ளை செய்தால் ஆன்மீக‌ புர‌ட்சி ஏற்ப‌ட்டு நிர‌ந்த‌ர‌ மாற்றம் ஏற்ப‌ட‌ வாய்ப்பு ஏற்ப‌டும்.

 
ஆண்ட‌வா... சதுரகிரி சுந்தரம‌ஹாலிங்க‌ம்.. நீங்க‌தான் இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிர‌ந்த‌ர‌ மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ ஏற்பாடு செய்ய‌ணும்.

ஓம் ந‌ம‌ சிவாய‌... ச‌துர‌கிரி சுந்த‌ர‌ம‌ஹாலிங்க‌த்துக்கு அரோக‌ரா....