Friday, April 29, 2011

ஞானமும் மாயையும்...

”இந்த உலக வாழ்வே மாயம். இங்கு இருப்பதெல்லாம் மாயை.”

இப்படிப்பட்ட கருத்துகளோடு சிலர் ஆன்மீகத்தில் இருக்கிறார்கள். மேலும் இவர்கள் ஞானம் அடைவதற்காக குடும்பத்தை விட்டுவிடுதலே முதல் படி என்றும் பிரச்சாரமும் செய்தார்கள்.

முதலில் இது எனக்கு புரியவில்லை. கடமையை விடுத்து சன்னியாசம் கொள்வது மாயையா? அல்லது கடமையை ஒழுங்காக செய்வது மாயையா?? இது குறித்த குழப்பம் இன்னும் சில இடங்களில் இருக்கிறது.

எது மாயை என்ற சிந்தனை அதிகமாகி அது பற்றி என் நண்பர்களுடன் விவாதித்த போது கிடைத்த தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் இந்த உலகம் மாயை அல்ல. இதில் இருப்பவர்களும் மாயை அல்ல. நம் உறவுகள் மாயை அல்ல. நம் குடும்பம் மாயை அல்ல. எல்லாமே நிஜம்.

ஆனால் நம் அகங்காரத்தின் பொருட்டு இவற்றின்பால் ஏற்படும் உணர்வுகள்தான் மாயை.

அளவுகடந்த / விடமுடியாத  - காதல், காமம், பயம், ஆசை, பேராசை, பாசம் போன்ற உணர்வுகள் - மாயை

நம் பிறப்பின் நிமித்தமும், வளர்ப்பின் நிமித்தமும் நமக்கு ஏற்படும் உறவுகளும், கடமைகளும், அதை நிறைவேற்ற அகங்காரம் விடுத்து நாம் செய்யும் கர்மங்களும் - நிஜம்.

நமக்கு ஏற்படும் வியாதிகள் நிஜம். அதை நினைத்து நாம் வருந்துவதும் உழல்வதும் பயப்படுவதும் மாயை.

நமக்கு விதிக்கப்பட்ட கடமைகள் நிஜம். ஆனால் அதை நினைத்து கோபப்படுவது மாயை.


மனிதன் வாழ்வில் உணர்வுகள் இல்லாமல் வாழ முடியுமா?? நிச்சயம் முடியாது.

ஆனால் அந்த உணர்வுகள் எதற்காக, எவ்வளவு வெளிப்படவேண்டும் என்ற தேவையான வரையரைக்குள் இருந்தால் அது நிச்சயம் மாயையாக இருக்காது.

உணர்வுகளின் அளவுகள் தீவிரமாகும்போது அவை நம் நரம்பு மண்டலத்தில் செயல் பட ஆரம்பிக்கிறது. அதில் ஏற்படும் அழுத்தம் உடல், மன வியாதியாக பரிணமிக்கிறது.


எனவே மாயை என்பது நமக்கு வியாதியாகவும், மன அழுத்தமாகவும் மாறி நம் வாழ்வின் நோக்கத்தை சிதைத்து விடுகிறது.

ஒவ்வொரு வாழ்வின் நோக்கமும் ஞானம் அடைவதே... அதை நமக்கு மறக்கடிப்பதே இந்த மாயையின் நோக்கம்.

இந்த மாயையில் இருந்து நாம் விடுபட்டு ஞானத்தை அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...




Thursday, April 28, 2011

ஞானமும் அகங்காரமும்...

சுய அகங்காரம் (ஈகோ) அற்ற நிலையில் ஞானம் எளிதில் வெளிப்படும்.  நம் அகங்காரமும் அதன் விளைவுகளும்தான் ஞானத்தை நம்மிடம் இருந்து மறைக்கும் திரை.

முதலில் எது அகங்காரம் என்று வரையறை செய்வோம்.


1) நான் வேறு / மற்றவர்கள் வேறு என்ற வேறுபடுத்தும் உணர்வே அகங்காரம்.

2) எந்த காரணத்தால் சுகமும், துக்கமும் நம் மனதைப் பாதிக்கிறதோ அதுவே அகங்காரம்.

3) ஒரு செயல் செய்ததால் ஏற்படும் விளைவுகளை எண்ணி ஏற்படும் உணர்வுகளும் அகங்காரத்தின் வெளிப்பாடுகள்தாம்.

4) நான் என்ற அகங்கார நிலையில் செய்யும் செயல்கள் கர்மாவை உண்டு பண்ணும். அதாவது நம் நரம்பு மண்டலங்களில் ஒருவித நேர்மறை அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.


உண்மையைக் கூறினால் நம் அகங்காரம்தான் நம் அடையாளம். அது இருப்பதால்தான் நம்மால் இந்த உலகில் வாழ முடிகிறது. 

நான் வாழ்கிறேன், நான் செய்கிறேன், என்னால்தான் நடந்தது, நான் தான் செய்யவேண்டும், என்னால்தான் முடிந்தது, என் மூலம்தான் நடக்க வேண்டும், நான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுகிறேன் என்ற உணர்வுகள் எல்லாம் அகங்காரத்தின் வெளிப்பாடுகள். 

இந்த உணர்வுகள்தான் நம்மைப்பற்றி நமக்குள் / சமூகத்தில்  ஒரு உயர்ந்த அபிப்பிராயம் /அந்தஸ்து / மரியாதை  தரும்நிலையில் வைத்திருக்கின்றன.

ஆனால் ஞானம் வேண்டுமெனில் இதை விட்டுத்தான் ஆகவேண்டும். இந்த அகங்காரத்திரை விலகினால்தான் ஞான தரிசனம் கிடைக்கும்.

இதனால் நாம் யார் என்ற கேள்விக்கு உண்மையான பதில் கிடைக்கும்.  ஞானம் இதைவிட சிறப்பாக நம்மை வாழ வைக்கும்.


கடவுளே மஹாலிங்கம்.. உடனடியா இந்த அகங்காரம் அகன்று ஞானம் வர அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!

Wednesday, April 27, 2011

எது காலம்???

காலம் என்பது எங்கே இருக்கிறது? எதை காலம் என்று சொல்கிறோம்? ஓடும் கடிகாரம்தான் காலமா? இது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த சிந்தனைகள் :

காலம் என்பது நம் ஐம்புலன்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புலன்களால் நாம் உணரும் வெளிஉலக உணர்வுகள் நம் மனதில் உள்வாங்கும் போதுதான் காலம் என்பது உணரப்படுகிறது.

மிகச்சரியாக சொன்னால் காலம் என்பது நம் மனதின் உள்வாங்கும் அலைவரிசை (frequency).  இந்த அலைவரிசைக்குத் தகுந்தாற்போல் நம் உடலமைப்பும், புலன்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஐம்புலன்களும் வேலைசெய்யாமல் இருக்கும்போது, நமக்கு காலத்தின் பாதிப்பு தெரிவதில்லை. உதாரணம் தூங்கும் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள். சில சமயம் 10 நிமிடம் தூங்கியதுபோல இருக்கும்.. ஆனால் 4-5 மணிநேரம் தூங்கி இருப்போம்.  இன்னும் சில சமயம் வெகு நேரம் தூங்கியதுபோல இருக்கும். ஆனால் 10-15 நிமிடம் தான் ஆகி இருக்கும்.

சில நேரங்களில் நாம் மனம் ஒருமுகப்பட்டு ஒரு காரியத்தில் மூழ்கி இருக்கும் போதும் இதேபோல நமக்கு காலத்தின் கணக்கு புரிபடுவதில்லை. இது ஒரு வித தியானம் போல. தியானம் செய்யும் போதும் சில நேரங்களில் இந்த அனுபவம் ஏற்படும்.

எனவே காலம் என்பது நம் மனதால் உணரப்படும் ஒன்று. எனவே மனதைக் கட்டுப்படுத்தினால் காலம் கட்டுக்குள் இருக்கும்.


இந்த சிந்தனையின் விளைவாக வந்த சில விதண்டாவாத கேள்விகள் :

1) நம் மனதின் காலமும், பிற உயிரினங்களின் காலமும் வேறு வேறாக இருக்குமா?

2) விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், நீர்வாழ்  உயிரினங்கள் இவற்றின் காலக் கணக்கு எப்படி இருக்கும்?

3)  நம் மனிதனின் காலத்தின் படி நாம் பயணம் செய்யும் வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியானால் நாம் வேறு ஒரு உயிரினத்தின் கால நிர்ணயத்தின் படி மனிதனின் மனோவேகத்திலும் பயணிக்க முடியுமா??

4) எல்லா மனிதனுக்கும் ஒரே மாதிரி இந்த அலைவரிசை இப்போது இருக்கிறது. ஏதாவது சில மூலிகைகள், வேதிப் பொருட்கள் இந்த அலைவரிசையை மாற்றும் வல்லமை இருக்குமோ???

5) நாம் இருக்கும் பூமியின் ஈர்ப்பு விசையின் விளைவு இந்த காலத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறது??? இதே நாம் வேறு வித ஈர்ப்பு உள்ள கிரகங்களில் காலம் என்பது மாறுபடுமா? அது நம் மனதின் கால அலைவரிசையை பாதிக்குமா???

6) உயிரினங்களின் சராசரி வாழ்நாளுக்கும் இந்த கால அலைவரிசைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

7) நம் உடல் வயதாவதற்கும், நம் மனம் காலத்தை உணர்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா???


இந்த கேள்விகளுக்கு பதில் இன்னும் புரியவில்லை.  இந்த காலம்தான் இதுக்கும் பதில் சொல்லணும்.

கடவுளே மஹாலிங்கம் இந்த காலத்தைப்பற்றி இன்னும் தெளிவாப் புரிய நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Monday, April 25, 2011

ஞானமும்.. மதங்களும்..

ஞானம் என்பது மதம் சார்ந்ததா? ஒரு மதத்தை சாராமல் ஞானம் அடைய முடியாதா? எந்த மதத்தில் இருந்தால் ஞானம் கிடைக்கும்? இவை மிகவும் கடினமான கேள்விகள். நம் ஆழ் மனதில் ஞானம் என்பது மதத்துடன் சம்பந்தப்பட்டதாகவே அறிந்திருக்கிறோம்.

உண்மையில் ஞானம் என்பது மதம் சம்பந்தப்பட்டதல்ல. கடவுள் என்பதுவும் ஞானத்துக்கான ஒரு வழியாக இருந்தாலும், அவரின் உருவமோ பெயரோ அதற்கு முக்கியமில்லை. மேலும் கடவுள் இல்லாமலும் ஞானம் அடையலாம்.

மதங்கள் மனிதனை நல் வழிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டன. எப்பொழுது மனிதன் நல் வழியில் இருக்கிறானோ அப்போதே அவன் ஞானப் பயணம் ஆரம்பமாகி விடுகிறது.

உண்மையில் நம்மை அறிவதற்கு இயற்கையாக இருக்கும் ஒரு பாதைதான் நமது இந்த உலக வாழ்க்கை.

ஆத்ம சாதகங்களான குரு உபதேசமும், ஆழ்ந்த பக்தியும், தியானமும் யோகமும் அதைப் பயணத்தை விரைவு படுத்துகின்றன.

இந்த மதத்தினர்தான் ஞானம் அடைய முடியும் என்றோ, இவர்கள் அடைய முடியாது என்றோ நிச்சயம் இல்லை.

கடவுளே இல்லை என்று கூறுபவர்களும்  கடவுளை தூஷிப்பவர்களும் கூட நல்ல மனதும் கருணை சிந்தனையும் பரந்த தன்னலமில்லா  உள்ளமும் கொண்டு வாழ முடியும் என்றால் அவர்களாலும் ஞானம் அடைய முடியும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உள்ளாற ஆழ்ந்து வரவேண்டும். அப்படி வருவதற்குத்தான் யோகமும், தியானமும், பக்தியும் உதவி செய்கின்றன. இவற்றை மதத்திலிருந்து பெறுபவர்கள் நிச்சயம் ஞானம் அடைவார்கள்.

மதம் இல்லாமல் பெற்றவர்களும் ஞானம் அடைவர்.

எல்லா மதத்திலும் பல நல்ல விசயங்களும் சில இந்த காலக்கட்டத்துக்கு தேவையில்லாத விசயங்களும் இருக்கின்றன. ஒரு அன்னப்பறவை போல தேவையானவற்றை கடை பிடித்து தேவை இல்லாதவற்றை விலக்கினாலே நல் வழி புலப்படும். அந்த தெளிவே நம்மை ஞானத்தை நோக்கி இட்டுச் செல்லும்.


கடவுளே எல்லாருக்கும் இந்த தெளிவு ஏற்பட்டு ஞானம் அனைவருக்கும் சித்திக்க அருள் செய்யுங்க.

சதுரகிரியாரே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Friday, April 22, 2011

யார் இங்கு உத்தமர்...

நம் நாட்டில் இன்றைய சூழலில் ஒருவர் உத்தமராய் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை யோசிக்கும்போது புரிகிறது.

இங்கு பெரும்பாலானோர் ஏதாவது ஒரு விதத்தில் லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக : டிரைவிங் லைசன்ஸ் எடுக்க,  ரேசன் கார்டு வாங்க / மாற்ற, ஒரு பத்திரம் பதிவு செய்ய, ஒரு கம்யூனிட்டி சர்ட்டிபிகேட் வாங்க, ஒரு பிறப்பு இறப்பு சான்றிதழ் வாங்க, ஒரு ரயில் பர்த் ரிசர்வேசன் வாங்க, போக்குவரத்து விதி மீறலுக்காக,  வீடு கட்ட அனுமதி வாங்க, வேலை வாய்ப்பகத்துல நம்பர் வாங்க, இப்பிடிப் பல..

அதேமாதிரி பெரும்பாலானவர்களுக்கான நேர்மை சில சின்ன விசயங்கள்ல தவறி விடுகிறது. உதாரணமாக  வரிசையில் நிக்கும்போது முன்னே போவது, சில தவறான தகவல் தந்து சலுகைகள் வாங்கிக்கறது, பொது இடங்களில் அசிங்கம் பண்ணுவது, பொது இடங்களில் கிடைக்கும் பொருளை தானே வச்சுக்கிறது, இப்பிடி சில...

இந்த வலைல நாம் நம்மை அறியாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம். எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நாமும் செய்வோம் என்று செய்து கொண்டிருக்கிறோம்.

நிர்வாணிகள் வாழும் ஊரில் உடை அணிந்தவன் பைத்தியக் காரன் என்பது போல இப்படிப்பட்ட சூழலில் ஒருவன் இந்த ஜோதியில் ஐக்கியமாகாமல் இருந்தால் அவனை நிச்சயம் பைத்தியம் என்றுதான் சொல்வார்கள்.

எனவே நம் மக்களில் பெரும்பாலோனோர்  இங்கு ஏதாவது ஒரு விதத்தில் ஊழல் வாதிகளே.. இன்னும் சுருக்கமாக சொன்னால் நாம்  10 ரூபாய் கொள்ளையில் பங்காளிகள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பல கோடி ரூபாய் ஊழலில் பங்காளிகள். அவ்வளவே.

இது நம் அரசியல்வாதிகளுக்கு ரொம்ப வசதியாக போய் விட்டது. யாராவது அவர்களை எதிர்ப்பதுபோல தோன்றினாலே இதுபோன்ற சில பழய விசயங்களை கிளரி அவர்களின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்குவதில் இவர்கள் வல்லவர்கள்.

ஒரு அழுக்கான அரசாங்க அமைப்பை உருவாக்கி திட்ட மிட்டு மக்களை அதனுடன் உறவாட விட்டு அவர்களையும் அழுக்காக்கி, ஒரு சமூகத்தையே கெடுத்த பெருமை நம் அரசியல் தலைவர்களை சேரும்.

நம் நாட்டில் பிக் பாக்கெட் காரனுக்கு அடி உதையும், கோடிகளில் கொள்ளை அடிப்பவனுக்கு சலாமும் கிடைக்கும். இதை பற்றி எதுவும் செய்யாமல் இருக்கும் இந்த அரசாங்கம் எதுக்கு? கூட்டுக் கொள்ளையில் மேலும் பலரை இழுத்துவிடவா??

நம் தேசத்தின் மீது உண்மையான அக்கரை கொண்ட யாருக்கும் இதைப் பற்றி நினைக்கும் போது ரத்தம் கொதிக்கும்.

இதுக்கு என்னதான் வழி??? என்றாவது இது முடியுமா??? நமக்கு விமோசனம் உண்டா??


என்னால கீழ்க் கண்ட வழிகளைத்தான் நினைக்க முடியுது :

1) இருக்கிற அனைத்து ஊழல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திருந்தி தம் சொத்துக்களை நாட்டுடைமையாக்கி உண்மையான் சேவையை, நல்லாட்சியை தருவது. இதுக்கு சாத்தியம் ரொம்ப குறைவு ன்னாலும் இதுதான் மிக சுலபமான தீர்வு.

2) நம் ராணுவம் நாட்டை ஆட்சி செய்வது. ஒரு தேசப்பற்றுள்ள ராணுவ வீரன் இதை சுத்தம் செய்வது. எல்லாருக்கும் கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக பழகீரும். குறைந்தது ஒரு 10 வருடம் இந்த தண்டனை நம் தேசத்துக்கு / ஜனநாயகத்துக்கு தேவை.

3) ஒரு ஊழிப் பிரளயம் மாதிரி வந்து நம் தேசத்தின் / உலகத்தின் வரை படமே மாறிப் போறது. இது ரொம்ப கஷ்டம். இதில் தப்பிச்சவங்களுக்கு அதுக்கப்புறம் ஒவ்வொரு வினாடியும் / நாளும் நரகத்துல இருக்குற மாதிரி இருக்கும். இது நடக்காம இருந்தா நல்லது.

இதன் வரிசை சுலபத்திலிருந்து கடினமானது வரை இருக்கிறது.. ஆனால் இவற்றிற்கான சாத்தியங்கள் வரிசை கீழிருந்து மேலாக இருப்பதுதான் கசப்பான உண்மை.

கடவுளே மஹாலிங்கம் !! இந்த மோசமான நிலையில் இருந்து என் தேசத்தையும் மக்களையும் நீங்கதான் பத்திரமா கரை சேர்க்கணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

Thursday, April 21, 2011

எது ஞானம்... அதனால் என்ன பயன்..

ஞானம் என்றால் என்ன?  அது எப்படி இருக்கும்?  அதனால் என்ன பயன்?  இதற்கு நாம் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?  இதுபோன்ற சில கேள்விகள் என் நண்பர் ஒருவரால் சில நாட்களுக்கு முன் எழுப்பப்பட்டது.

ஞானம் என்றால் என்ன?

இதற்கு ஒருவரியில் விளக்கம் இல்லை. இதற்கு முழுமையான பதில் தெரியாததால் தான் நான் இன்னும் இப்படியே இருக்கிறேன். இது பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் அதன் சுவையை சுவைத்து அறிவது போல் இருக்காது. இருந்தாலும் நான் கேள்விப்பட்ட,  அறிந்த,  புரிந்த சில சிறு விளக்கங்கள் :

1) ஞானம் என்பது தன்னை அறிதல் / உணர்தல். (படித்தல் அல்ல) எவ்வளவுதான் ஞானம் பற்றி கேள்விப்பட்டாலும், படித்து அறிந்தாலும் தனக்குள் தானே உணர்ந்து அறியும்போதுதான் அது பற்றிய முழுமையான உணர்வு கிடைக்கும். இதை யாரும் முழுமையாக இன்றுவரை விளக்க முடியவில்லை.

2) ஞானம் என்பது தன்னை அனைத்திலும் உணர்ந்து அறிதல். ”நான்” என்பது எதுவோ அதுவே எல்லாமாக இருக்கிறது என்ற உணர்வு ஞானம்.

3) ஞானம் என்பது அனைத்தையும் தன்னில் உணர்ந்து அறிதல். இந்த உலகில் உள்ள அனைத்தாகவும் எது இருக்கிறதோ அதுவே ”நான்” என்பதாகவும் இருப்பதாக உணர்தல்.

4) ஞானம் என்பது படித்து அறிதல் அல்ல. உணர்ந்து அறிதல். சில நேரங்களில் இதற்கு புத்தகப் படிப்பு உதவலாம்.  ஆனால் அதுவே முக்கியமல்ல.


இதனால் யாருக்கு என்ன பயன்?
இதில் பல கேள்விகள் எழுகின்றன.  நமக்கோ அல்லது சமூகத்துக்கோ ஞானத்தால் ஏதாவது பயன் கிடைத்தால்தான் அது உண்மையான ஞானம் என்று வாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

ஞானம் அடைந்தால் நிறைய பணம் வருமா? எங்கள் கஷ்டம் தீருமா? வியாதி அகலுமா? அமானுஷ்ய சக்தி கிடைக்குமா?  மக்களை / எதிரிகளை வசியம் செய்ய முடியுமா? நம் ஊழல் அரசியல்வாதிகளை / அதிகாரிகளை தண்டிக்க முடியுமா? இயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா? போர்களை நிறுத்த முடியுமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் என் தற்போதய பதில் ஆம் மற்றும் இல்லை. 

ஞானத்தை அடைய முயற்சி செய்வது மட்டுமே நம் வேலை / கடமை. அதன் பிறகு அதை அடைவதும் அதனால் என்ன செய்யவேண்டும் என்பதும் ஞானத்தின் வேலை. ஞானத்தை அதைத் தவிர வேறு யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு கட்டளை இடவும் முடியாது.

1) யாருக்கு எப்போது என்ன தருவது என்பது ஞானத்துக்கு நன்றாகத் தெரியும்.

2) ஞானிகள் இருக்கும் இடத்தில் இயற்கையின் விதிகள் செவ்வனே செயல் படுத்தப்படும்.
3) யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில செயல்கள் நடந்தே தீரும். அவை எவை என்பதே ஞானமே முடிவு செய்யும்.  ஞானிகள் ஞானத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கிறார்கள் - ஞானத்தின் அனுமதியோடு மட்டுமே.

4) ஞானம் செயல்படும்போது சத்வ சக்திகளின் ஆதிக்கம் கூடுதலாக இருக்கும். தாமச சக்திகள் செயல்பாடுகள் மந்தமாக இருக்கும்.

5) இந்த உலகில் ஞானிகள் அதிகமாக வாழ்ந்தால் தீய சக்திகளின் ஆதிக்கம் குறைந்து நல்ல சக்திகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்.


என் சிற்றறிவுக்கு எட்டியவரை பகிர்ந்துள்ளேன். இவை தவிரவும் நிறைய இருக்கலாம். ஞானிகளின் கடாட்சத்தினால் அவை வெளிப்படும்போது மேலும் பகிர்வேன்.

இதில் சில தப்பாகவும் இருக்கலாம். இப்போதைக்கு என் புரிதல் படி எழுதி இருக்கிறேன்.  உண்மையிலேயே ஞானம் வந்தால் தான் அதுபற்றி முழுமையாக கூறமுடியும்.


சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்..  விரைவில் ஞானம் சித்திக்க அருள் செய்யுங்க...

சதுரகிரியாரே சரணம். சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Monday, April 18, 2011

ஞானம் - சில மூட நம்பிக்கைகள்...

ஞானம், ஆன்மீக சாதகங்களுக்காக ஒருவர் முயற்சி செய்யும் பொழுது, முதல் எதிர்ப்பு அவரின் குடும்பங்களில் இருந்துதான் வருகிறது. இந்த  வயசிலேயே ஏன் சன்னியாசி ஆகப் போகிறாய் என்ற கேள்வியை பலரால் தவிர்க்க முடியவில்லை.

ஞானம் என்பது ஏதோ வயதான மற்றும் சன்யாசிகளுக்கு உரியது போன்ற ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. ஆனால் உண்மையில் ஞானம் குடும்பஸ்தர்களுக்கே அதிகம் தேவை. அதுவும் இளமையில் இருப்பவர்களுக்குத்தான் ஞானத்தின் தேவை மிக அதிகம்.

ஆன்மீகமும், ஞான மார்க்கமும், ரிடயர்ட் ஆன பின்னால் ஓய்வாக செய்ய வேண்டிய ஒரு பொழுதுபோக்கு என்ற சிந்தனை நம் சமூகத்தில் மிக ஆழமாக இருப்பது கசப்பான உண்மை. இப்போது இது ஓரளவுக்கு மாறி இருந்தாலும் சில வேறுவிதமான அனர்த்தங்களில் இது முடிகிறது.

இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆன்ம சாதகங்கள் ஏதோ ஒரு சில பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக அல்லது விடுபடுவதற்காகவே செய்கிறார்கள். உதாரணமாக வறுமை, வேலை இன்மை, திருமண நோக்கம், குழந்தை பிறப்பு, மன அழுத்தம், வியாதிகளிலிருந்து விடுதலை.. இப்படி பல...

ஆனால் இது மனிதன் வாழும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறையின் பாடம் என்பது பெரும்பாலோனோருக்கு புரியவில்லை. இந்த பிரச்சினைகளில் இருந்து ஓரளவுக்கு விடுதலை கிடைப்பதுபோல் தெரிந்தாலே சாதகத்தை விட்டுவிடுகிறார்கள்.

இப்போது ஆத்ம சாதகம் என்பது ஞானத்திற்கான வழி என்ற நிலையில் இருந்து ஏதோ தலைவலிக்கும் காய்ச்சலுக்கும் சாப்பிடும் மாத்திரை போல இந்த வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு ஒரு யுனிவர்சல் மருந்து என்ற சிந்தனையே மேலோங்கி இருக்கிறது.


இதில் உண்மையில் சாதகம் செய்பவர்கள் பலருக்கே  வேறு ஏதோ உலகத்தில் இருக்கும் ஒன்றுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும் இருக்கிறது.


ஞானம் என்பது ஒரு சாரார் மட்டுமே அடைவது என்ற மாயத் தோற்றமும் இருக்கிறது.

இந்த உலகில் பிறந்த எந்த ஜீவ ராசியும் ஞானத்தை அடையலாம். எப்போதும் அடையலாம். எவ்வளவு விரைவாக அடைகிறோமோ அவ்வளவு சிறப்பானது. இதற்கு மதம், இனம், மொழி, சாதி எதுவும் தடையில்லை.

மனதின் ஆர்வமும், மன உறுதியும், விடாமுயற்சியும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாத செயலாக்கும் திறமும், குருவின் உபதேசமும், பக்தியும், ஒழுக்கமும், நேர்மையும், இடை விடாத ஆன்ம சாதகமும் ஒருவனை நிச்சயம் ஞானத்தின்பால் கொண்டு சேர்க்கும்.  இது உறுதி..


கடவுளே!! சதுரகிரி சுந்தர மஹாலிங்கம்!! இந்த ஞானத்தைப் பற்றிய மூட நம்பிக்கைகள் விலகி அனைவரும் ஞானம் அடைய நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

Friday, April 15, 2011

மக்களை விட்டு முற்றிலும் விலகிய அரசியல்வாதிகள்..

உயர்திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம் நடந்த போது லோக்பால் குழுவில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் அமைச்சர்களும் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர் என்பதே.

அப்படியென்றால் அவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதி இல்லையா? அப்படி இல்லை என்றால் ஏன்?

இந்த முக்கியமான கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.. இதற்கு பதில் இது பற்றிய டிவி விவாதங்களில் கிடைத்தது..

இப்போது நம் சமூகம் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கிறது. முதல் பிரிவு அரசியல்வாதிகள், இரண்டாம் பிரிவு அரசு அதிகாரிகள், மூன்றாம் பிரிவு பொதுமக்கள்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களை ஆள்வதற்காக இருக்கிறார்கள். அது நல்லாட்சியாக இருக்க வேண்டியதற்கு முக்கிய காரணி ஒருவ்வொருவர் மீதும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அது இப்போது இல்லாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.


அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் உண்மையில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற காரியங்களை செய்வதில்லை. எனவே அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல..

அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இவர்கள் தத்தமது சொந்த ஆதாயங்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காவுமே காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களும் மக்களுக்காக யோசிக்கப்போவதில்லை.

இப்போதய பெரும்பாலான அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் பொது மக்களைவிட்டு வெகுதொலைவு விலகிவிட்டார்கள். எனவேதான் மக்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை.

என்வேதான் நமது பொதுமக்கள் எங்கள் பிரதிநிதியும் சட்டங்கள் உருவாக்குவதில் பங்குபெறவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


இது உண்மையில் ஜனநாயகத்தின் அடிநாதத்தைக் கேலிக் கூத்தாக்குவதாக இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளான அரசியல்வாதிகளைவிட திரு அன்னா ஹசாரேயால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் நம்புவது நம் ஜனநாயகத்தின் கோர நிஜம்.


இப்போது நாம் கவனமாக இருக்கவேண்டியது கீழ்க்கண்ட விசயங்களில்தான்:

1) எப்படிப்பட்ட சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சரியாக இல்லாதபட்சத்தில் அது வீணாகவே போகும். அந்த கதி இந்த ஜன் லோக்பால் சட்டத்துக்கு ஏற்படாமல் இருக்கவேண்டும்.

2) எவ்வளவோ நேர்மையான அமைப்புகளை வெற்றிகரமாக ஆக்கிரமித்த, கெடுத்த நம் கேடுகெட்ட அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட பொதுமக்கள் அமைப்புகளையும் கெடுப்பதற்கு வெகுகாலம் ஆகாது.

இது நம் ஜனநாயகத்தின் இன்னொரு கோர முகம்.

கடவுள்தான் இதுக்கெல்லாம் ஒரு வழி சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

Thursday, April 14, 2011

தேர்தல் முடிந்தது... ஒரு உத்தேச செலவுக் கணக்கும் பிடி பட்ட தொகையும்

ஒரு வழியாக ஒரு கெடுபிடியான தேர்தல் ஓரளவுக்கு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. இதில் உண்மையான வெற்றி மக்களுக்குதான். சுமார் 77% வாக்குப்பதிவு என்பது ஒரு சாதனைதான்.

தேர்தல் முடிவுகளுக்காக மே 13 வரை காத்திருக்க வேண்டும். இது ஒரு சோதனையான கட்டம். மக்களின் வாக்குகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு எண்ணப்பட வேண்டும். இவ்வளவு திறமையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையம் இந்தப்பணியையும் சிறப்பாக செய்யும் என்று நம்புகிறேன்.

நம் ஜனநாயகத்தின் முக்கிய நிகழ்வான இந்தத் தேர்தலை செம்மையாக நடத்த நம் தேர்தல் ஆணையம் பட்ட பாடுகளைப் பார்க்கும்போது நம் மக்களுக்கு / அரசியல்வாதிகளுக்கு உண்மையான ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாததுபோலவே தெரிகிறது.

எங்கும் பணம். எதிலும் பணம்.. இதுவே இந்தத் தேர்தலில் ஒலித்த தாரக மந்திரம். தேர்தல் ஆணையம் சட்ட விரோதமான 34 கோடி ரூபாய் பிடித்ததாக செய்தி வந்தது.

இது மிகவும் கம்மி. இதை 234 தொகுதிக்கு பிரித்துப் பார்த்தால் இதன் அளவு தெரிய வரும். ஒரு தொகுதிக்கு வெறும் 19 லட்ச ரூபாய் வருகிறது. மேலும் ஒரு வேட்பாளருக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வருகிறது.


ஆனால் தேர்தலில் தோராயமாக எவ்வளவு செலவாகி இருக்கும் என்று நாம் கணக்குப்போட்டால் கண்ணைக்கட்டுகிறது.

ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 130 போலிங் பூத் வைத்துக் கொண்டால் கூட, 3 கட்சி வேட்பாளர்களும் மொத்தம் 234 தொகுதியிலும் தம் பூத் ஏஜெண்ட் களுக்கு சுமார் ரூ10000 கொடுத்தால் கூட இது மட்டுமே 90 கோடி ரூபாய்  வருகிறது.(வாக்காளர்களுக்கே ரூ 2000 தரும் போது இது மிக குறைந்த எஸ்டிமேட்தான்) 

இது தவிர தொண்டர்களுக்கு தினம் வாங்கித்தரும் சரக்கு, பிரியாணி, பேட்டா வகையில், 15 நாட்களுக்கு சுமார் 500 வேட்பாளர்கள் சுமார் 1000 தொண்டர்களுக்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ 1000 வீதம் செலவு செய்திருந்தால் இது ஒரு 740 கோடி ரூபாய் வருகிறது.

இது தவிர வாகன ஏற்பாட்டில் சுமார் 500 வேட்பாளர்கள் 20 வண்டிகள் ஒரு நாளைக்கு ரூ 2000 வாடகைக்கு 15 நாட்களுக்கு சுற்ற ஆன செலவு மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்கள்.


மொத்தமாக மிகக் குறைந்ததாக சுமார் 800 கோடி ரூபாய் செலவு செய்திருந்த இந்த தேர்தலில் 34 கோடி ரூபாய் ஒன்றுமே இல்லை. இதுவும் வாக்காளர்களுக்கு தந்த பணம் கணக்கில் இல்லை. வேண்டாம். அதையும் கணக்கிட்டால் தலை சுற்றுகிறது.


இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?  எந்த தைரியத்தில் செலவழிக்கிறார்கள்? இதைத் திருப்பி எடுக்க என்னவெல்லாம் செய்வார்கள்? நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது..

சதுரகிரியார்தான் நம் மக்களை இவங்ககிட்ட இருந்து காப்பாத்தணும்.

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Monday, April 11, 2011

சிவில் சமூகத்தின் பொறுப்பு...

வெற்றிகரமாக முடிந்த திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்குப் பின், நம் சிவில் சமூகம் மிக ஜாக்கிரதையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது..

இப்போது ஒரு சமரசத்திற்கு நம் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டாலும் அவர்களின் வழக்கமான ஆயுதமான பிரித்தாளும் சூட்சுமத்தை நமது சிவில் சமூகத்திடம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் முதல் படியை திரு ராம் தேவின் ஒரு சிறு கருத்தை ஊதிப் பெரிதாக்குவதில் தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் யார் சிவில் சமூகம் என்பதைப்பற்றிய ஒரு விவாதத்தை தமது ஆதரவு பெற்ற ஊடகங்கள் மத்தியில் உலாவ விட்டிருக்கிறார்கள்.

இப்போது மேலும் சில அமைப்புகள் இதில் குளிர் காய ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த பழைய அமைப்புகளுக்கு இந்தப் போராட்டத்தால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்காக இதுவரை சிறு துரும்பைக்கூட அசைக்காத நமது சிவில் சமூகம் திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு தந்ததை இவர்களால் சகிக்க முடியவில்லை. இதன் உண்மையான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு இவர்கள் இப்போது நம் அரசியல் வாதிகளின் சதிக்கு தம்மை அறியாமல் தூபம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் விரும்புவது எல்லாம் கீழ்க்கண்டவற்றைதான் :

1) சிவில் சமூகம் எப்போதும் ஒரு நெல்லிக்காய் மூட்டைபோல ஒற்றுமை இல்லாமல் இருக்கவேண்டும்.

2) யாராவது அவர்களை ஒன்றுபடுத்துவதுபோல தோன்றினால் மக்கள் ஆதரவை கிரிக்கெட் சினிமா போன்ற பொழுதுபோக்கு விசயங்களில் திசை திருப்பிவிட வேண்டும்.

3) புதிதாக வரும் கிளர்ச்சிகளை ஏற்கனவே இருக்கக் கூடிய அமைப்புகளை முன் வைத்து ஒழித்துக் கட்டுவது.

4)  இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஒரு அதிகாரப் போட்டியை ஏறபடுத்தி, அவர்களின் ஒற்றுமையைக் குலைப்பது அல்லது ஒற்றுமை குலைந்ததுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்துவது.

5) மக்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்ட குணத்திலிருந்து கிரிக்கெட் சினிமா பொழுதுபோக்குகளுக்கு திருப்புவது.

இந்த பொறிகளில் ஏற்கனவே சில நடைபெறுவதை கண்கூடாகக் காண முடிகிறது.

நமது சிவில் சமூகம் இதைத் தாண்டி இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு அதன் தலைமைக்கும் நமக்கும் இருக்கிறது.

எனவே வேற்றுமையை மறப்போம், மக்களுக்காக ஒன்று படுவோம். சமூகப் போராட்ட நெருப்பைத் தக்க வைப்போம்.

இதுக்கு சதுரகிரியார்தான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

ஞானமும் இன்றைய அரசியலும் - ### !!!! ????

ஞானத்தைப் பற்றியும் அதை அடையும் வழியில் இருக்கும் தடங்கல்கள் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தபோது இன்றைய அரசியலுக்கும் ஞானத்துக்கும் சில அதிசயமான ஒப்பீடுகள் தோன்றியது. அது பற்றியதுதான் இந்தப் பதிவு :

மனிதனாகிய நாம், வாக்காளர்களாகவும், ஞானம் என்பது ஒரு நல்ல ஆட்சிக்கான அடையாளமாகவும்,  ஞானத்திற்கான நம் முயற்சி வாக்குகளாகவும், நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி ஞானம் என்ற உயர்ந்த விஷயத்தை அடைவதற்குத் தடங்கல்களாக உள்ள சில அமானுஷ்ய சக்திகள்,  பணம், புகழ் போன்றவற்றை கொண்டு திருப்தி அடைந்து ஞானத்தை விட்டு நாம் விலகி விடுவது போலவே, நம் மக்களும் அரசியல்வாதிகள் கொடுக்கும் இலவசங்களுக்கும், கையூட்டுகளுக்கும் ஏமாந்து தீயவர்களை அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுத்து நல்ல ஆட்சியை விட்டு விலகிவிடுகிறார்கள். இதனால் தீமையே விளையும். 

எப்படி ஞானம் அடைவது ஒரு மனிதனின் நடத்தையைப் பொருத்ததோ, அதுபோலவே ஒரு நல்ல ஆட்சி அமைவதும் நம்  வாக்காளர்களின் நல்ல நடத்தையைப் பொருத்ததே. அதாவது லஞ்சம், இலவசம் வாங்காமல், அதை நோக்காகக் கொள்ளாமல் வாக்களிக்க முற்பட்டால் நல்லாட்சி நிச்சயம்.

எப்படி ஒருவரின் விதிப்படியே ஞானம் கிடைக்கிறதோ அதுபோலவே, நம் விதிப்படியே நம் அரசாங்கம் அமைகிறது. உண்மையாக இருந்தால் உண்மையாகவும், போலியாக இருந்தால் போலியாகவும். 

இதில் இருக்கும் சூட்சுமம் மிகவும் சுவாராசியமானது.  நம் சமூகத்தின் பொது மனதில் இருக்கும் நல்ல தீய எண்ணங்களின் பாதிப்புதான் நம் வேட்பாளர்களிடம் பிரதிபலிக்கிறது. எனவே சமூகத்தில் நிகழும் நற்சிந்தனை பரவலைப் பொறுத்து நம் வேட்பாளர்களின் சிந்தனை அமைப்பு அமைகிறது. இதையே விதி என்று சொல்கிறோம்.


ஆனால் இந்த கலிகாலத்தில் தீமைகள் வளர்ந்து நன்மைகள் குறைவதைப் பார்க்கும்போது நல்லாட்சி என்பது வெறும் கனவு போலவே தோன்றுகிறது. ஆனாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. நற்  சிந்தனைகளும், தனிமனித,  சமூக ஒழுக்கமும் வளர்ந்தால் நல்லாட்சி நிச்சயம் அமையும்.

எனவே நற்சிந்தனை வளர்ப்போம், இலவசங்களை புறந்தள்ளுவோம்,  லஞ்சத்தை மறுப்போம். நல்லாட்சி ஏற்பட உதவுவோம்.


சதுரகிரியாரே சரணம்!!!  சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!

Friday, April 8, 2011

தேவை ஒரு சமுதாய எழுச்சி....

நம் தேசத்தில் நிலவும் ஆட்சி முறையின் லட்சணம் பற்றியும், லஞ்ச ஊழல்கள் பற்றியும் ஒரு சில மாதங்களாக ஊடகங்களில் பரபரப்பாக இருந்தது. கிரிக்கெட் உலகக் கோப்பை  வந்ததும் அது கொஞ்சம் அடங்கி இருந்தது. இப்போது மீண்டும் திரு அன்னா ஹசாரே புண்ணியத்தில் பரபரப்பாகி இருக்கிறது.

தேசிய அளவில் பிரபலமாக உள்ள ஒவ்வொருவரும் இந்த செய்தியை நம் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமை இருக்கிறது.

திரு அன்னா ஹசாரே ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை அருமையாகப் பயன்படுத்தி நம் தேசத்தில் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்த அனைத்து பிரபலங்களும் உதவ வேண்டும்.

அப்போதுதான் ஒரு எகிப்தில், ஒரு டுனீசியாவில் ஏற்பட்டது போன்ற ஒரு மாற்றம் நம் தேசத்துக்கும் வர ஒரு வாய்ப்பு ஏற்படும்.

சில இந்தி சினிமா நட்சத்திரங்கள் முன் வந்து இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், இன்னும் பல பகுதிகளிலிருந்து ஆதரவு இல்லை.

முக்கியமாக, நம் தமிழக பிரபலங்களிடையே இதுபற்றிய பெரிய தாக்கம் இல்லாதது மிக வருத்தமாக இருக்கிறது.

தமிழக ஊடகங்களிலும் இது பற்றிய செய்தியை நமது தேர்தல் செய்திகள் அமுக்கிவிட்டன. தேசிய ஊடகங்களில்தான் இதுபற்றிய செய்திகள் பரபரப்பாக இருக்கின்றன.


ஆனால் இந்தப் பரபரப்புகள் எல்லாம், அடுத்து IPL கிரிக்கெட் வரும் வரைதான். அதன்பிறகு நமது ஊடகங்களின் தேசபக்தியும், நாட்டுப் பற்றும், IPL ல் ஏறிவிடும்.


எனக்கு ஒரு விசயம் இன்னும் புரியவில்லை. நமது கிரிக்கெட் ஹீரோக்களுக்கு ஒரு சமூக ஆர்வமும் இல்லையா? இவ்வளவு பெரிய பிரச்சினை நாட்டில் வெடித்துக்கொண்டு இருக்கும்பொழுது இவர்கள் அது பற்றி ஒரு கருத்தும் சொல்லாமல், தம் பங்களிப்பை செலுத்தாமல் IPL  விளையாடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைக்கூட செய்ய முன்வராத நமது கிரிக்கெட் நட்சத்திரங்களின் நாட்டுப் பற்று சந்தேகத்திற்கு இடமாகிறது. ஒருவேளை நம் கிரிக்கெட் வாரியம் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.


நமக்கு இப்போது உடனடித் தேவை ஒரு சமுதாய எழுச்சி. அது ஓரளவுக்கு ஆரம்பிக்கும்பொழுது அதைத் தூக்கி நிறுத்த ஒவ்வொரு பிரபலமும் உதவ வேண்டும்.

செய்வார்களா???


மஹாலிங்கம்,  நம் நாட்டில் விரைவில் ஒரு சமுதாய எழுச்சி ஏற்பட்டு ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்!!!!!

Thursday, April 7, 2011

ஒரு தலைவனை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு...

சில நாட்களுக்கு முன் மிகப்பிரபலமாக இருந்த நீரா ராடியா போன் உரையாடல்களை உன்னிப்பாக கேட்ட போது சில விஷயங்கள் பிடிபட்டது. அது ஒரு தலைவனை ஆக்குவதில் ஊடகங்கள் வகிக்கும் முக்கிய பங்கு பற்றியது.

இது விளம்பரங்கள் செய்வது போன்றதே. என்ன.. இதை செய்திகள் போல வெளியிட்டு ஒரு பிம்பம் உருவாக்குகிறார்கள். ஒரு பிரபலத்தின் மீது நமக்கு இருக்கும் பிம்பம் ஊடகங்களால் உருவானதே.

ஒருவன் உண்மையிலேயே நல்லவனோ, கெட்டவனோ. ஆனால் அவனது நல்ல செயல்களை மட்டும் திரும்பத் திரும்ப ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தி, அவனது கெட்ட செயல்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டால் அவன் நல்லவன் என்றே நாம் நம்புவோம். இது தான் சூட்சுமம்.

ஒவ்வொரு பணக்காரரும் இப்படிப்பட்ட ஒரு உக்தியை பயன்படுத்தி தனக்கென ஒரு இமேஜ் உருவாக்கிக் கொள்ள நீரா ராடியா போன்ற ஊடகத்துறையினரிடையே செல்வாக்குள்ளவர்களை வேலைக்கு அமர்த்தி தத்தமது இமேஜை தன் விருப்பப்படி உருவாக்கிக் கொண்டனர்.

இதில் மிகவும் கவனிக்கத்தக்கது பணம் பெற்றுக் கொண்டு சில ஊடகங்கள் வெளியிட்ட சில அரசியல் (விளம்பர) செய்திகள். இதனால் சில மோசமான தலைவர்களையும் மிக உத்தமர்கள் போல செய்தி வெளியிட்டு அவர்களுக்கு நற்பெயர் தேடித்தந்தன சில ஊடகங்கள். இப்போதும் செய்து கொண்டிருப்பதாக கேள்வி.

இப்போதய ஊடகங்களில் வருவதெல்லாம் உண்மையும் அல்ல. அவர்கள் சொல்லாமல் விட்டதெல்லாம் பொய்யும் அல்ல.

இதில் முழுநேரமும் ஜால்ரா அடிக்கும் ஊடகங்களும், பகுதி நேரமாக எப்போதாவது சொம்படிக்கும் ஊடகங்களும் அடக்கம். அல்லது சில ஊடகங்களின் ஒரு சில நிருபர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமக்கு சாதகமாக செய்தி வரவழைக்கும் தலைவர்களும் உண்டும்.

இப்போதும் ஒரு நல்ல தலைவனை உருவாக்கவும் அழிக்கவும் முடிந்த மிகப் பெரிய சக்தி தான் ஊடகத்துறை.

இதனால்தான் ஊடகங்களை ஒரு தேசத்தின் முக்கியமான தூண் என்று ஒரு காலத்தில் வருணித்தார்கள்.

இப்போதய மிக சக்திவாய்ந்த ஊடகங்கள் : சினிமா, தொலைக்காட்சி, பத்திரிக்கை (அச்சு, இணையம்).

இவை நினைத்தால் நிச்சயம் நல்ல தலைவனை உருவாக்க முடியும்..

ஆனால் இவை முழுக்க முழுக்க லாப நோக்கங்களுக்காக மட்டும் நடத்தப் படுவதால் இது இப்போதைக்கு சாத்திய மில்லாதது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.

இருந்தாலும் இதை இவர்கள்தான் செய்யவேண்டும்.


இன்றைக்கு தேசபக்தி எதிலெல்லாமோ தேவையில்லாமல் வெளிப்படுகிறது. இந்த ஊடகத்துறையினரிடையே இது பெரிதாக வெளிப்படாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 

இன்றும் ஊழல்வாதிகளையே உத்தமர்கள்போல காட்டிக் கொண்டு புதிய தலைமை வருவதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களுக்குத் தேவையான மாற்று சக்தியை உருவாக்கவேண்டிய ஊடகங்கள் இருக்கின்ற சாக்கடையிலேயே தேங்கிவிட்டதுதான் பரிதாபம்.

என்ன செய்யவேண்டும்??

நாட்டுக்குத் தேவையில்லாத ஊழல் தலைவர்களின் நல்ல செய்திகளை அனைத்து ஊடகங்களும் முற்றிலும் புறக்கணித்து நல்லவர்களை மட்டுமே முன்னிருத்தினாலே போதுமானது.  இதை யாருமே செய்வதில்லை. நல்லவர்களின் செய்திகளைத்தான் ஏதோ ஊறுகாய் போல வெளிப்படுத்துகிறார்கள்.

மேலும் ஊழல் தலைவர்களின் கெட்ட விஷயங்களை மட்டும் நன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டி அதை பரவலாக்கி ஒரு மோசமான தலைவனை அழிக்கவேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதை ஓரளவுக்கு இப்போது சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள்.


ஊடகத்தார் உண்மையில் விழித்தெழுவார்களா?? புதிய நேர்மையும் நாட்டுப்பற்றும் உள்ள தலைவனை உருவாக்குவார்களா?? எப்போது??

காலமும் கடவுளும் தான் இதுக்கு பதில் சொல்லணும். 


கடவுளே மஹாலிங்கம்.. உங்கள் அருளாலே நல்ல நாட்டுப் பற்று உள்ள ஒரு தலைவன் சீக்கிரமா உருவாகி எங்களுக்கு ஒரு விமோசனம் பிறக்கணும்.

சதுரகிரி சுந்தரனே போற்றி!!  சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!

Wednesday, April 6, 2011

உண்ணாவிரதமிருக்கும் உயர்திரு அன்னா ஹசாரே...

உயர்திரு அன்னா ஹசாரே அவர்கள் நேற்றிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.  இதுபற்றி “Times of India" வில் வந்த செய்திகளுக்கான லின்க் கீழே தரப்பட்டுள்ளது.



இவர் யார் என்பது பெரும்பாலோருக்கு தெரிந்திருந்தாலும் அவர் பற்றி ஒரு சிறு அறிமுகம் :

இவர் வயது 72. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் / போராளி. பல காந்தீய வழிப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்.

இப்போது இவர் எதற்காக இந்த உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார் என்பதுதான் மிக முக்கிய செய்தி.

நம் அரசியல் வாதிகள் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம், ஊழலுக்கு எதிரான அமைப்புகள் உருவாக்குவோம் என்று கூவிக் கொண்டிருந்தாலும் சுமார் 42 ஆண்டுகளாக அப்படி ஒரு சட்டம் கொண்டுவர முயற்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் கொண்டு வர வில்லை.

அதுவும் அவர்களே கூடி முடிவு செய்வார்களாம். பொதுமக்கள் பிரதிநிதிகளோ, சமூக ஆர்வலர்களோ அதில் பங்கேற்கக் கூடாதாம்.

மிக முக்கியமாக அவர்கள் ஏற்படுத்த இருக்கும் அந்த ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு எந்த அதிகாரமும் தரப்படாதாம். அவர்கள் ஊழல்களை விசாரித்து என்ன நடவடிக்கை யார் மீதெல்லாம் எதற்காக எடுக்கலாம் என்று ஆலோசனை சொல்ல மட்டுமே செய்ய வேண்டுமாம்.

இதில் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்கமுடியும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இப்போது ஏற்படுத்தப்படும் விசாரணைக் கமிசன்களுக்கும் இந்த ஊழலுக்கு எதிரான அமைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.


இதைத் தான் 72 வயது திரு அன்னா ஹசாரே எதிர்த்துப் போராடுகிறார்.  அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள (???) லோக்பால் சட்டத்துக்கு மாற்றாக ஒரு ஜன லோக்பால் சட்ட வரைவு தயாரித்து அரசாங்கத்தில் அனைவருக்கும் அனுப்பி அலுத்து இப்போது சாகும் வரை உண்ணவிரதம் உட்கார்ந்துவிட்டார்.

இவர் தயாரித்துள்ள ஜன லோக்பால் சட்ட வரைவில் கீழ்க்கண்ட அம்சம்கள் சேர்க்கப்பட்டுள்ளன :

1) லோக்பால் அமைப்புக்கு ஒரு போலீசுக்கும், கோர்ட்டுக்கும் இருக்கும்  அதிகாரம் வேண்டும்.

2) நடவடிக்கை எடுப்பதிலிருந்து தண்டனை அமல் படுத்துவது வரை லோக்பால் செயல்பாடு இருக்கும்.

3) இதில் அரசியல் வாதிகளோடு, அனைத்து அரசு உயர் அதிகாரிகளையும் விசாரித்து தண்டனைதர முடியும்.

4) இந்த சட்டம் கொண்டுவர பொதுமக்களின் பிரதிநிதிகளையும் (அரசியல் வாதிகள் அல்ல), சமூக ஆர்வலர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.

5) இந்த சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தையும் விசாரிக்கும் உரிமை உண்டு.

ஆனால் நம் அரசியல் வாதிகள் வழக்கம்போல் கட்சிபேதமில்லாமல் இதை நடைமுறைப்படுத்த தாமதப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதால் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

நம் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் இதை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் வெற்றி பெற்று இந்த சட்டம் வர வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறேன்.


கடவுளே மஹாலிங்கம், அவருக்கு நீங்கதான் துணையா இருந்து இதை நடைமுறைப்படுத்தித் தரணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!

ஞானம் - சில தடங்கல்கள்

ஞானம் அடைய முயற்சிகள் செய்யும்பொழுது, நமக்கு ஏற்படும் சில அனுபவங்கள் நம்மை அந்த முயற்சியிலிருந்து விலக வைக்கும் வல்லமை உள்ளது. அது பற்றி நான் பலருடன் விவாதித்ததுண்டு. இருந்தாலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நான் புரிந்த வரை, அவை பற்றிய எனது சிந்தனைகள்.


முதலில் வருவது - அளவுக்கதிகமான ஞான ஆர்வத்தினால் தம் கடமைகளை மறத்தல் / மறுத்தல்.  சிலருக்கு ஞான ஆர்வம் வந்ததும் தத்தம் குடும்பக் கடமைகளை மறந்து, அதை மறுத்து ஞானத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக, குடும்பக் கடமைகளையே செய்ய முடியாவிட்டால் நிச்சயம் ஞானக் கடமைகளை செய்ய முடியாது. 

இதற்கு முக்கிய காரணம், ”நாம்” முயற்சி செய்து நாமே ஞானம் அடைகிறோம் என்கின்ற ஆணவம் தான். இதை முதலில் விடவேண்டும்.  ஞானம் நம்மைத் தேடி நிச்சயம் வரும். முயற்சி மட்டுமே நம்முடையது. இந்தத் தெளிவை நம் குரு மட்டுமே தர முடியும். நம் மீது உண்மையான அக்கறை கொண்ட ஞான குரு நிச்சயம் நம்மை சரியான வழியில் வழி நடத்துவார்.


அடுத்து இந்த வரிசையில் வருவது - அமானுஷ்ய சக்திகள். இந்த சக்திகள்தான் ஞான மடைவதற்கு முக்கிய எதிரிகள். நம் மனித முயற்சி தேவைப்படாத எதுவும் நமக்கானதில்லை. அது நமக்காக செய்யப்பட்டாலும் பிறருக்காக செய்யப்பட்டாலும்.  

ஞான மார்க்கத்தில் செல்லும் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டத்தில் இதைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சிலர் இந்த அமானுஷ்ய சக்திதான் ஞானம் என்று அதிலேயே இருந்துவிடுவார்கள்.


அடுத்து வருவது - பதவி,  புகழ். பதவி, புகழ் என்பது ஒரு போதை.  அதற்கு அடிமையாக ஆகாமல் இருக்கவேண்டும்.  தவிர்க்க முடியாமல் வரும் பதவி, புகழ் இவற்றால் ஏற்படும்  போதை தலையில் ஏறாமல் ஞான மார்க்கத்தை விட்டு விலகாமல் சென்றால் வெற்றி நிச்சயம்.

புகழின் சில விளைவுகள் -  நம் ஆணவம், அகங்காரம் அதிகரித்தல். சொல் பேச்சு கேளாமை.  தான் தோன்றித்தனம்.  தன்னை முன்னே நிறுத்தி காரியங்கள் செய்ய முயல்தல். இவை அனைத்தும் ஞானப் பாதைக்கு எதிரானவை.


அடுத்து வருவது - அளவுக்கதிகமான பணம், செல்வம். நம் தேவைக்கு,  தகுதிக்கு அதிகமான செல்வம் வருவது போல இருந்தால் நிச்சயம் பிரச்சினைதான்.

பதவி, புகழின் அனைத்து விளைவுகளும் பணத்துக்கும் உண்டு.


அடுத்தது - தான் ஞானம் அடைந்துவிட்டதாக தானே எண்ணுதல். சிலருக்கு ஞானப் பாதையில் செல்லும்போது திடீரென்று தான் ஞானம் அடைந்துவிட்டதாகத் தோன்றும். அதற்கு போலியாக சில அறிகுறிகளும் அவர்களுக்கு இருக்கும். சுற்றி இருக்கும் சிலரும் அதை வழி மொழிவார்கள். அதையே பிடித்துக் கொண்டு ஞானப்பாதையை விட்டு விலகிவிடுதல்.

நமக்கு ஞானம் வந்தால் நிச்சயம் அது நமக்கு தெரியாது. இதை சரியாக கணிக்க வேண்டியவர் நம் குரு மட்டுமே.


எவ்வளவு இருந்தாலும், ஞானம்தான் மனிதன் அடைய வேண்டிய உன்னத லட்சியம். அதை நோக்கி பயணிப்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை.  ஞானப் பயணமே நம் லட்சியப் பயணம்.


கடவுளே மஹாலிங்கம் உங்க அருளால எல்லாரும் இந்த ஞானத்தின் தடங்கல்களைத்தாண்டி பயணம் செஞ்சு ஆன்மீக ஞானத்தை அடையணும்னு வேண்டிகிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

Tuesday, April 5, 2011

ஞான குருவின் உபதேச மகிமை...

ஒரு மனிதன் ஞானம் அடைவதற்கு ஒரு குருவின் துணை மிகவும் அவசியம். இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது, என் மனதில் எழுந்த சிந்தைகள், சில பழைய நிகழ்வுகளின் நினைவுகளின் பதிவு.

தனியாக மனிதன் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஞானம் இல்லை. குரு உபதேசம் மிகமுக்கியம். ஞான வேட்கை உள்ளவர்களுக்கே உபதேசம் கிடைக்கும். அவர்களாலேயே உபதேசத்தை புரிந்துகொள்ளவும் முடியும். உடனடியாக இல்லாவிட்டாலும், சற்று தாமதமாகவாது. குரு உபதேசித்த வழி நடந்தாலே ஞானம் சித்திக்கும்.

குரு உபதேசம் பொதுவானது அல்ல. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டது. அது எப்படிப்பட்டது என்பதை குருவே முடிவு செய்வார். ஒருவருக்கான உபதேசம் மற்றவருக்குப் பொருந்தவேண்டிய அவசியமில்லை. அதனால் இதில் உயர்ந்த உபதேசம், தாழ்ந்த உபதேசம் என்ற பேதமில்லை. அவரவருக்கு அவரவருக்கான குரு உபதேசமே உயர்ந்தது, சிறந்தது. அதுவே அவரவருக்கான வழி. இதை கேள்வி கேட்காமல் கடைப்பிடிப்பதை கடமையாகக் கொண்டால் கண்டிப்பாக ஞானம் சித்திக்கும்.

இதைப்பற்றி சிந்திக்கும் பொழுது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் எனது நண்பரின் நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்ட அவரின் அனுபவம் ஞாபகத்தில்  வருகிறது.

அவ‌ருட‌னான‌ என‌து ச‌ந்திப்பு ஒருமுறைதான் ந‌ட‌ந்தாலும், அந்த அனுபவம் என் ம‌ன‌தில் மிக‌ ஆழ‌மாக‌ப் ப‌திந்துவிட்ட‌து. அவ‌ருக்கான‌ குரு உப‌தேச‌மாக‌க் கிடைத்த‌து, "ப‌சி ஆற்றுத‌ல்". அன்ன‌தான‌ம் செய்ய‌வேண்டும்.

அவ‌ரோ மிக‌வும் வ‌றுமையில் இருப்ப‌வ‌ர். குறைந்த‌ ச‌ம்பாத்தியத்தில் நிறைவான குடும்ப‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர். இருந்தாலும் குரு உப‌தேச‌த்தை சிர‌மேற்கொண்டு அவ‌ர் ப‌சி ஆற்றுத‌ல் ஆர‌ம்பித்தார். த‌ன் சொந்த‌ செல‌வில்தான். சில நண்பர்க்ள் உதவியும் சேர அது கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. சிறிய அளவிலானதானாலும் தின‌ந்தோறும் செய்து வ‌ந்தார்.

ஒரு நாள், மிக‌க் க‌டின‌மான‌ சூழ‌லில், வீட்டுக்கு ச‌மைக்க‌வே ஒன்றும் இல்லாத‌ நிலை ஏற்ப‌ட்டுவிட்ட‌து. அன்று அவ‌ர் ம‌ன‌தில்  எப்ப‌டி செய்வ‌து? என்ன செய்வது? என்று ப‌ல‌ ச‌ஞ்ச‌ல‌ங்க‌ள். க‌டைசியில் அவ‌ர் முடிவு செய்த‌து "அடுப்பை மூட்டி, த‌ண்ணீரை வைப்போம். கொதிக்க‌ வேண்டிய‌து, வெறும் த‌ண்ணீரா அல்ல‌து அரிசியா என்ப‌தை க‌ட‌வுள் முடிவு செய்ய‌ட்டும்"

அதிகாலை, வெறும் அடுப்பை மூட்டிக் கொண்டிருந்த‌ போது அவ‌ர‌து ந‌ண்ப‌ர் அனுப்பிய‌தாக‌ சில‌ மூட்டை அரிசியும் காய்க‌றி ம‌ளிகை சாமானுட‌ன் ஒரு மாட்டு வ‌ண்டியில் ஒருவ‌ர் வ‌ந்து கொடுத்தாராம். மிக‌ ம‌கிழ்ச்சியுட‌ன் க‌ட‌வுளுக்கு ந‌ன்றி சொல்லிவிட்டு ச‌மைய‌ல் செய்து அன்ன‌ தான‌ம் செய்தாராம்.

அப்போது அவ‌ர் உண‌ர்ந்த‌து : "இதை ந‌ட‌த்துவ‌து நான் அல்ல. குரு உப‌தேச‌ம் தான் இதை ந‌ட‌த்துகிற‌து". அப்போது முதல் தடையின்றி அன்னதானம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

குருவின் உப‌தேச‌த்தின் ப‌டி "நாம்" ந‌ட‌ப்ப‌தாக‌ நாம் எண்ணினாலும் அதை உண்மையில் ந‌ட‌த்துவ‌து அந்த‌ ஞான‌ குருவின் ஆசீர்வாதமே.. எனவே உபதேசம் ப‌ற்றிய‌ சாத்திய‌ அசாத்திய‌ங்க‌ளைப்ப‌ற்றி அதிக‌ ஆராய்ச்சி செய்ய‌த் தேவை இல்லை. குருவின் ஞான உபதேசத்தை அப்படியே கடைப்பிடித்தால் ஞானம் நிச்சயம்.


க‌ட‌வுளே ம‌ஹாலிங்க‌ம், உங்க‌ள் அருளாலே அனைவ‌ருக்கும்  ஞான‌ ஆர்வ‌ம் ஏற்ப‌ட்டு, ந‌ல்ல ஞான‌ குரு அமைந்து, ஞான உபதேசம் கிடைத்து, ஞானம் அடையணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி..

Monday, April 4, 2011

அரசியல் பேசினால் ???

நேற்று விஜய் டீவியில் பொது இடங்களில் மக்கள் அரசியல் பேச தயங்குவது பற்றிய ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அது பற்றிய எனது கண்ணோட்டம்.

முதலில், மக்களுக்கு நமது அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை போய்விட்டது. தகுதியான தலைவர்கள் இல்லாததால் புதிய தலைமுறைக்கு அரசியல் ஆர்வம் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. இப்போதுகூட‌ க‌ட‌மையே என்று வோட்டுப்போடுப‌வ‌ர்க‌ள்தான் அதிக‌ம். 60ல் இருந்து 70 ச‌த‌ம் வாக்குக‌ள்தான் ப‌திவாகிற‌து. இதை அதிக‌ப்ப‌டுத்த‌ எவ்வ‌ள‌வோ முய‌ற்சிக‌ள் செய்தாலும் பெரிய‌ ப‌ல‌ன் எதுவும் இல்லை.

சென்ற‌ த‌லைமுறையில், அர‌சியலினால் ஏற்பட்ட சில மோசமான விளைவுக‌ளைப் (Emergency, Naxalism)  ப‌ற்றி அறிந்த‌ குடும்ப‌ப் பெரிய‌வ‌ர்க‌ள், த‌ம‌து குடும்ப‌த்தில் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் அதுப‌ற்றி பேசினாலே க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். (இதுபோன்ற எதிர்ப்பு, யோகா, தியானம் போன்ற சில‌ ஆன்மீக‌ சாத‌னைக‌ளுக்கும் இருந்த‌து. இப்போது ப‌ர‌வாயில்லை.) இத‌னால் அர‌சை பெரும்பாலும் சாராம‌ல் வாழ‌ப்ப‌ழ‌கும் ஒரு த‌லைமுறை உருவாகிவ‌ருகிற‌து.

வியாபாரிகள், ஒரு ர‌வுடிக்கு மாமூல் கொடுப்ப‌துபோல வேறு வழியில்லாமல் அர‌சாங்க‌த்துக்கு வ‌ரி க‌ட்டிவிட்டு, அவ‌ர்க‌ள் செய்யும் சொற்ப‌ ந‌ல‌த்திட்ட‌ங்க‌ளை ம‌ட்டும் ஏற்றுக் கொண்டு, அவர்கள் செய்யும் அட்டூழியங்களைக் கேள்விகேட்காம‌ல் வாழ‌ப்ப‌ழ‌கும் ஒரு ச‌மூக‌ம் உருவாகிவ‌ருகிற‌து.

அலுவலகங்களில், பொது இடங்களில் அரசியல் பற்றி பேசுபவர்கள் வேண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறார்கள். தனிமனித துதிகளே இன்றைய அரசியலின் முக்கிய முகமாக ஆகிவிட்டது. கொள்கைக‌ள், ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ள் இர‌ண்டாம், மூன்றாம் ப‌ட்ச‌மாக‌ ஆகிவிட்டன. பெரும்பாலும் அடிதடி சண்டையை நோக்கியே இந்த விவாதங்கள் செல்கின்றன. என‌வேதான் இந்த‌ விவாத‌ங்க‌ள் த‌விர்க்க‌ப்படுகின்ற‌ன‌.

வேறு வழி இல்லாமல் போராட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்தான் இன்று அரசியல் பற்றி, போராட்டங்கள் பற்றி பேசவே செய்கிறார்கள்.

எது அரசியல் என்பது பற்றிய பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நானறிந்தவரை பொது ந‌லன், பொது மக்கள், தேசம் சார்ந்த‌ அனைத்துமே அர‌சிய‌ல்தான்.  அரசியல்தான் உண்மையான மக்கள் சேவை. அரசியல்தான் மனிதகுலத்துக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய தொண்டு. அரசியல்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரம்.

ஆனால் இப்போது அறிய‌ப்ப‌டும் அர‌சிய‌ல் என்ப‌து என்ன‌? ர‌வுடியிச‌ம், ப‌ழிவாங்குத‌ல், பயமுறுத்துதல், ஏமாற்றுத‌ல், காலைவாறுத‌ல், த‌‌னிம‌னித துதி, காழ்ப்புண‌ர்ச்சி, க‌ட்சிதாவுத‌ல், ல‌ஞ்ச‌ம், ஊழ‌ல். 

இந்த‌நிலையில், மக்க‌ளை திசைதிருப்ப‌ சினிமாவும், தொலைக்காட்சியும், கிரிக்கெட்டும், குடியும் உப‌யோக‌ப்ப‌ட்ட‌ன‌. இந்த‌ போதைக‌ளில் ஊறிய‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் உண்மையான‌ அர‌சிய‌லை ம‌ற‌ந்துவிட்ட‌ன‌ர்.

இது இன்றய நிலை. இது மாற என்ன செய்ய வேண்டும்.

1) மீண்டும் ஒரு தலைமுறை இவ்வாறு உருவாகாமல் தடுக்கவேண்டும்.

2) பள்ளி கல்லூரிகளில் நாட்டு நடப்பு பற்றியும் , சமூகம் பற்றியும் உண்மையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். இதை ஒரு தனிப்பாடமாகவும் வைக்கலாம்.

3) நம் மனநிலை மாற, நல்லவர்கள், உதாரண புருஷர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இப்போது ஆன்மீகத்தில்தான் ஓரளவுக்கு உதாரண புருஷர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் கட்சி ஆரம்பித்ததாக படித்தேன். அதற்குமுன் பாபா ராம்தேவ் கட்சி ஆரம்பித்தார். இன்னும் ஆன்மீக வாதிகள் ஒருங்கிணைந்து ஒரு தேசிய இயக்கம் நடத்த முன்வர வேண்டும். சுவாமி தயானந்த சரஸ்வதி, ஜக்கி வாசுதேவ், சத்ய சாய்பாபா போன்ற குருமார்கள் இணைந்து ஒருங்கிணைந்த தேசிய, மாநில அரசியல் இயக்கம் ஏற்படுத்த முயற்சி செய்யவேண்டும்.

4) இந்த நிலை மாறவேண்டும் என நம் மனதார கடவுளிடம் தினந்தோறும் பிரார்த்தனை செய்யவேண்டும். இதுவும் கொஞ்சம் உதவும்.

கடவுளே மஹாலிங்கம், இந்த நிலை மாற நீங்கதான் மனசு வைக்கணும்.

சதுரகிரி சுந்தரனே போற்றி!!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!!